Our Feeds


Friday, October 18, 2024

SHAHNI RAMEES

தமிழ் முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களே நுவரெலியாவில் வெற்றி பெறுவர் - உதயகுமார்

 


ஜனாதிபதித் தேர்தல்களிலிலும் பாராளுமன்றத் 

தேர்தல்களிலும் தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவு தெரிவிக்கும் வேட்பாளர்களே வெற்றி பெற்று வந்துள்ளார்கள். அந்த வகையில் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடும் தமிழ் முற்போக்கு கூட்டணி வேட்பாளர்கள் மூன்று பேரும் நிச்சயம் வெற்றி பெறுவார்கள் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான மயில்வாகனம் உதயகுமார் தெரிவித்தார்.


தமிழ் முற்போக்கு கூட்டணியின் தேர்தல் பிரசாரக் கூட்டம் ஹட்டன் செனன் தோட்டத்தில் நடைபெற்றபோதே இவ்வாறு தெரிவித்தார்.  


வேட்பாளர்கள் பழனி  திகாம்பரம், வீ. இராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் அவர் தொடர்ந்து பேசுகையில்,


ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்ற ஒரு மாதத்துக்குள் பாராளுமன்றத் தேர்தல் நடைபெறுவதால் இது மலையக மக்களைப் பொருத்தவரையில் முக்கியமான ஒரு தேர்தலாகும். வடக்கு,  கிழக்குக்கு வெளியே நுவரெலியா  மாவட்டத்தில்தான் தமிழ் மக்கள் அதிகமாக வாழ்கின்றார்கள். 


கடந்த கால ஜனாதிபதி தேர்தல்களில் தமிழ் முற்போக்கு கூட்டணி ஆதரவு தெரிவித்த மைத்திரிபால சிறிசேன, சஜித் பிரேமதாச போன்ற வேட்பாளர்கள் மாவட்டத்தில் அதிகூடுதலான வாக்குகளைப்  பெற்றிருந்தார்கள். 


கடந்த மாதம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலிலும் நாம் ஆதரவு தெரிவித்திருந்த ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கே  கூடுதலான வாக்குகள் கிடைத்திருந்தது. எனவே நுவரெலியா மாவட்டத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் செல்வாக்கு அதிகரித்து காணப்படுகிறது.  


அண்மையில் நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கு 50 வீதத்துக்கும் குறைவான 42 சதவீத வாக்குகளே கிடைத்திருந்தது. அது ரணில் விக்கிரமசிங்க மீது மக்கள் கொண்டிருந்த அதிருப்தியின் வெளிப்பாடாகும். 


கடந்த ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாச வெற்றி பெறக்கூடாது என்பதற்காக ரணில் விக்கிரமசிங்க மறைமுகமாக அனுரவுக்கு ஆதரவு தெரிவித்திருந்தார்.


நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் அரசாங்கம் ஆட்சியமைக்க பெரும்பான்மை  பலம் கிடைக்காது. எதிரணியில் 120 ஆசனங்களை பெறக்கூடிய வாய்ப்பு காணப்படுகிறது. 


ஏனெனில், ஒரு மாத காலத்திலேயே ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவித்த வாக்காளர்கள் அதிருப்தி கொண்ட  நிலையில் இருக்கின்றார்கள். குறிப்பாக ஆசிரிய சமூகம் அதிருப்தி கொண்டுள்ளது.


நுவரெலியா மாவட்டத்தில் எட்டு பாராளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்ய 300க்கும் அதிகமான வேட்பாளர்கள் போட்டியிடுகின்றார்கள். அதில் பெருமளவு சுயேச்சை குழுக்களின் வேட்பாளர்கள் இடம்பெற்றுள்ளார்கள். 


இவர்களின் நோக்கம் தேர்தலில் வெற்றி பெறுவது அல்ல. மாறாக தமிழ் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்வதற்கு வாக்குகளைப் பிரிப்பதே அவர்களின் நோக்கமாகும். 


எது எப்படி இருப்பினும் இந்த மாவட்டத்தில் ஐந்து தமிழ் வேட்பாளர்கள் வெற்றி பெறுவது உறுதியாக உள்ளது. அதில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் சார்பில் போட்டியிடும் மூன்று வேட்பாளர்களும் நிச்சயமாக வெற்றி பெறுவார்கள்.


அதேவேளை மாவட்டத்தில் போட்டியிடும் பல வேட்பாளர்கள் மக்களுக்கு அறிமுகம் இல்லாதவர்கள். தேர்தல் காலத்தில் மட்டும் வந்து மக்களிடம் வாக்கு கேட்கும் அவர்கள் இதுவரை இங்குள்ள மக்களுக்கு செய்த சேவைகள் என்னவென்று கேட்டுப் பார்த்தால் பூஜ்ஜியமாகத்தான் இருக்கும். 


எனவே, அறிமுகம் இல்லாத, இனிமேல்தான் சேவை செய்வோம் என்று கூறுகின்ற வேட்பாளர்களுக்கா அல்லது இதுவரை காலமும் மக்களுக்கு சேவை செய்து அவர்களின் சுக துக்கங்களில் இரண்டற கலந்துள்ள வேட்பாளர்களுக்கா வாக்களிக்க வேண்டும் என்பதை மக்களே சிந்தித்து ஒற்றுமையாக முடிவெடுக்க வேண்டும் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »