Our Feeds


Friday, October 11, 2024

Sri Lanka

வேட்பு மனு கையேற்பு இன்றுடன் நிறைவு!


எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனு கையேற்பு இன்றுடன் (11) நிறைவடையவுள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் நேற்றைய தினம் வேட்பு மனுக்களில் கைச்சாத்திடும் செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தன.

இதுதவிர, பல கட்சிகள் நேற்றையதினம் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்திருந்தன.

அந்தவகையில் தேசிய மக்கள் சக்தி மாத்தறை மாவட்டத்திற்கான வேட்பு மனுவை நேற்றைய தினம் கையளித்திருந்தது.

அந்தக் கட்சியின் உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தலைமையில் இந்த வேட்பு மனு கையளிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், தேசிய மக்கள் சக்தி குருணாகல் மாவட்டத்திற்கான வேட்பு மனுவையும் தாக்கல் செய்திருந்தது.

இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்டத்திற்கான வேட்பு மனு நேற்றைய தினம் கையளிக்கப்பட்டது.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவினால் இந்த வேட்பு மனு கையளிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, அநுராதபுரம், பொலன்னறுவை, மாத்தறை மாவட்டங்களுக்கான வேட்பு மனுக்களையும் ஐக்கிய மக்கள் சக்தி கையளித்துள்ளது.

இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கொழும்பு, கம்பஹா, மாத்தறை, மாத்தளை, ஆகிய மாவட்டங்களுக்கான வேட்பு மனுக்களில் கையெழுத்திடும் செயற்பாடு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்றது.

இந்தநிலையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இன்று காலை வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யவுள்ளது.

அதேநேரம், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் வன்னி மாவட்டத்தில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் வேட்புமனுக்களும் நேற்றைய தினம் கையளிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, எதிர்வரும் பொதுத் தேர்தலில் சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடவுள்ள புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர்கள் கம்பஹா, களுத்துறை, பதுளை, புத்தளம், அநுராதபுரம், உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கான வேட்பு மனுக்களில் கையெழுத்திட்டுள்ளனர்.

அந்த கட்சியின் சார்பில் நேற்றைய தினம் மாத்தறை மாவட்டத்திற்கான வேட்பு மனுக்கள் கையளிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் பெயர்கள் அடங்கிய வேட்புமனுக்கள்; யாழ்ப்பாணம் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் எம்.பிரதீபனிடம் நேற்றைய தினம் கையளிக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தின் முதன்மை வேட்பாளர் சிவஞானம் சிறீதரன் தலைமையில் குறித்த வேட்புமனுக்கள் கையளிக்கப்பட்டதாக அந்தக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »