Our Feeds


Monday, October 14, 2024

Sri Lanka

தென்னிலங்கை கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு வாக்களிப்பதால் தமிழர்களுக்க நன்மையில்லை!


தென்னிலங்கை கட்சிகளின் பிரதிநிதிகளாக தமிழர் பகுதிகளிலுள்ள கட்சிகளில் களமிறக்கப்பட்டுள்ள வேட்பாளர்களுக்கு தமிழ் மக்கள் வாக்களிப்பதன் மூலம் தமிழர்களின் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் குறைவடையுமே தவிர தமிழ் மக்களுக்கு எவ்வித நன்மையும் கிடைக்கப் போவதில்லை என இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர் இ.சிறிநாத் தெரிவித்துள்ளார்.

செங்கலடி சௌபாக்கிய மண்டபத்தில் நேற்று (13) மாலை இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

தென்னிலங்கை கட்சிகள் தமிழ் மக்களின் நீண்டகால தேவையான அரசியல் தீர்வு தொடர்பாக மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பகிர்வது தொடர்பாகவோ எவ்விதமான கரிசனையுமின்றி செயற்படுகின்றன. அவர்களுக்கு வாக்களிப்பதன் மூலம் தமிழ் மக்களுக்கு எவ்விதமான நன்மையும் கிடைக்கப்போவதில்லை.

கடந்த கால ஆட்சியாளர்கள் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு தருவதாக வாக்குறுதிகள் வழங்கினார்கள் தற்போதுள்ள ஆட்சியாளர்கள் வாக்குறுதிகளைக்கூட வழங்கவில்லை.

அபிவிருத்தி என்ற போர்வையில் விளையாட்டுப் பொருட்களை தந்து விளையாட்டு மைதானங்களின் நிலங்களை அபகரிக்கும் நிகழ்ச்சியே இங்கு நடைபெறுகிறது.

தென்னிலங்கையிலுள்ள கட்சிகள் சிங்கள மக்களின் வாக்குகளையே நம்பியுள்ளன. சிங்கள மக்கள் எமக்கு அரசியல் உரிமையைத் தரத் தயாராக உள்ளார்களா என சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

சமத்துவமான நாடு என்று கூறியதையே ஏற்றுக்கொள்ளாதவர்கள். புதிய அரசாங்கத்தில் தமிழ் மக்களுக்கான தீர்வுத் திட்டத்தை முன்வைக்கும் போது சிங்கள மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் அரசாங்கத்தினால் எதுவுமே செய்ய முடியாது.

மட்டக்களப்பு மாவட்டம் சகல வளங்களை உள்ளடக்கி காணப்படுகிறது. இதனைச் சரியாகப் பயன்படுத்தி நாம் வாழ்வாதார ரீதியில் முன்னேற்றமடைய முடியும். எமது மாவட்டத்தை அபிவிருத்தி செய்ய வெளிநாட்டிலுள்ள எத்தனையோ உறவுகள் தயாராக உள்ளன. வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் ஊழலற்ற நேர்மையான திறமையான உறுப்பினர்களை தமிழரசுக் கட்சி ஊடாக பாராளுமன்றம் அனுப்புவதன் மூலம் வெளிநாட்டிலுள்ளவர்களை இணைத்து நாங்கள் எமது மாவட்டத்தை அபிவிருத்தி செய்யமுடியும்.

நாம் ஒரு தேசிய இனம் என்ற அடிப்படையில் இலங்கை தமிழரசுக் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும். என்று மேலும் அவர் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »