கத்தோலிக்க திருச்சபை மற்றும் கத்தோலிக்க மக்களை
ஏமாற்றாமல் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஆணைக்குழுவின் அறிக்கைகளை நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும். அவற்றில் ஏதேனும் குறைபாடுகள் அல்லது பிழைகள் இருந்தால் அவை தொடர்பில் உடனடியாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா தெரிவித்தார்.நீர்கொழும்பில் வியாழக்கிழமை (17) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மிகவும் உணர்ச்சிகரமான விடயமாகும். எனவே அந்த தாக்குதல்கள் தொடர்பான அறிக்கைகளை வெளியிட்டு நீதி வழங்கப்பட வேண்டும் என கத்தோலிக்க திருச்சபையும் கத்தோலிக்க மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது நாடகம் அல்ல. கத்தோலிக்க மக்கள் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவை நம்புகின்றனர். எனவே அந்த நம்பிக்கையை அவர் பாதுகாக்க வேண்டும்.
ரணில் விக்கிரமசிங்க இந்த நாட்டைப் பொறுப்பேற்றபோது அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலை இருந்தது.
ஆனால், அவர் பதவியேற்ற பின்னர், அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்டது. நல்லாட்சியின்போதும் சம்பளம் அதிகரிக்கப்பட்டது.
ஊதிய முரண்பாடுகளைக் களைய குழுக்கள் நியமிக்கப்பட்டன. பொருளாதாரம் வளர்ச்சியடைந்துள்ளதால் அடுத்த வருடம் முதல் அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும் என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
ஆறு மாதங்களுக்கு ஒரு முறை சம்பளத்தை அதிகரிக்கவுள்ளதாக முன்னர் மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்தது. ஆனால் தற்போது தாம் சம்பள அதிகரிப்பை வழங்குவதாகக் கூறவில்லை என்று அவர்கள் மறுக்கின்றனர்.
சுமார் 80 சதவீத அரச ஊழியர்கள் தேசிய மக்கள் சக்திக்கே வாக்களித்தனர். எனவே அவர்களை இந்த அரசாங்கம் ஏமாற்றக்கூடாது என்றார்.