Our Feeds


Tuesday, October 1, 2024

Zameera

குழந்தைகளுக்கே உரித்தான சிறுவர் உலகை மீண்டும் வெல்வதே எமது மறுமலர்ச்சிப் பணிகளின் இறுதி இலக்கு


 குழந்தைகளுக்கே உரித்தான சிறுவர் உலகை மீண்டும் வெல்வதே எமது மறுமலர்ச்சிப் பணிகளின் இறுதி இலக்கு என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க உலக சிறுவர் தினச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட சிறுவர் தினச் செய்தி கீழே;

உலகம் சிறுவர்களுக்கானது.
அவர்களின் உலகத்தை நம் கரங்களினால் உருவாக்குவோம்!

ஏழ்மை, போசாக்குக் குறைபாடு, சுகாதாரம் மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு, கல்வியில் ஏற்றத்தாழ்வு, சமூக வாய்ப்புகளில் ஏற்றத்தாழ்வு, போதைப்பொருள், அத்துடன் தொழில் நுட்பத்தின் தவறான பயன்பாட்டிற்கு பலியாவது போன்றன இந்த மிலேனியத்தில் சிறுவர்கள் எதிர்கொள்ளும் சவால்களாக நாம் அடையாளம் கண்டுள்ளோம்.

மேலும், சிறுவர்களின் உளவியல் சமூக வளர்ச்சியைத் தடுக்கும் சமூக விளைவுகள் மற்றும் மன அழுத்தம் நிறைந்த பரீட்சையை மையமாகக் கொண்ட கல்வி முறைகள் போன்ற தாக்கங்களில் இருந்து தற்போதைய தலைமுறைச் சிறுவர் சமூகத்தை விடுவித்து பிள்ளைகளுக்கே உரித்தான சிறுவர் உலகை மீண்டும் அவர்களுக்கு பெற்றுக்கொடுப்பதே நமது மறுமலர்ச்சிக் காலப் பணியின் முக்கிய குறிக்கோளாகும்.

உடலாலும், உள்ளத்தாலும் ஆரோக்கியமான சிறுவர்களின் தலைமுறையை உருவாக்குவதன் மூலம், எதிர்கால உலகை வெல்லும் சுதந்திரமான கற்பனைத்திறன் கொண்ட கனிவான மற்றும் உன்னதமான மனிதர்கள் உருவாக்கப்படுவதாக நாம் நம்புகிறோம்.

அதற்கு அவசியமான பொருளாதார சுதந்திரம் மற்றும் மனித நேயம், பரஸ்பர நம்பிக்கை, மரியாதை மற்றும் ஏற்றுக்கொள்ளுதல் ஆகியவற்றைக் கொண்ட சமூகத்தை உருவாக்குதல் மற்றும் இயற்கை வளங்கள் நிறைந்த சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் தேவையான அரசியல் மாற்றத்தை நமது முன்னுரிமைப் பணியாகக் கருதி செயற்படுத்த அர்ப்பணிப்போம்.
அந்தப் பொறுப்பை நிறைவேற்றுவதற்கு நாம் அனைவரும் பொறுப்புடன் செயற்படுவோம்!

அநுர குமார திசாநாயக்க
ஜனாதிபதி
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு
2024 ஒக்டோபர் 1 ஆம் திகதி

இதேவேளை, உலக சிறுவர் தின வாழ்த்துச் செய்தியில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, இவ்வருட சர்வதேச சிறுவர் தினக் கருப்பொருளான “எங்கள் எதிர்காலத்திற்கான முதலீடுகள் என்பது எமது பிள்ளைகளுக்காக முதலீடு செய்வதே” என்பதை மட்டுப்படுத்தாமல் யதார்த்தமாக்குவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என தெரிவித்துள்ளார்.

நாட்டிலுள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் உயர்தர இலவசக் கல்வியை வழங்குவதில் அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாகவும், பொருளாதார ரீதியாக வலிமையான நாட்டில் குழந்தைகளுக்கு அறிவுத்திறன் வழங்குவதே எங்களது தொலைநோக்குப் பார்வை என்றும் பிரதமர் கூறினார்.

மேலும், இந்த ஆண்டு உலக முதியோர் தினத்தின் தொனிப்பொருளான “கண்ணியத்துடன் முதுமை, உலகளவில் முதியோருக்கான பராமரிப்பு மற்றும் ஆதரவு அமைப்புகளை வலுப்படுத்துவதன் முக்கியத்துவம்” சமூக பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான எமது அரசாங்கத்தின் அர்ப்பணிப்பிற்கு இணங்குவதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

ஓய்வூதியப் பலன்களை மேம்படுத்தவும், முதியோர்களுக்கு, குறிப்பாகத் தொழிலாளர்களுக்குப் பங்களிப்பதற்காகத் தங்கள் வாழ்நாளைக் கழித்தவர்களுக்கும் இலவச மற்றும் சமமான மருத்துவ வசதியை உறுதி செய்வதில் எங்கள் அரசு உறுதிபூண்டுள்ளது என்று பிரதமர் தனது முதியோர் தினச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »