Our Feeds


Tuesday, October 15, 2024

Zameera

இலஞ்சம் பெற்ற அதிகாரி கைது


 மட்டக்களப்பில் 2 இலட்சம் ரூபா இலஞ்சம் பெற்ற உள்நாட்டு இறைவரித் திணைக்கள அதிகாரி ஒருவர் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.


மட்டக்களப்பில் காணி தொடர்பாக இரண்டு இலட்சம் ரூபா இலஞ்சம் வாங்கிய உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர் ஒருவரை இன்று செவ்வாய்க்கிழமை (15) கல்லடி பகுதியில் வைத்து இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினர் கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.


இதுபற்றி மேலும் தெரியவருவதாவது,


காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் காணி ஒன்றை கொள்வனவு செய்தமைக்கான வரி தொடர்பாக 2 இலட்சம் ரூபா பணத்தை இலஞ்சமாக கோரியுள்ளார்.


இதனையடுத்து காணி கொள்வனவு செய்தவர் கொழும்பிலுள்ள இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு முறைப்பாடு செய்ததையடுத்து அவர்களின் ஆலோசனைக்கமைய சம்பவதினமான இன்று பகல் கல்லடியிலுள்ள உள்நாட்டு இறைவரி திணைக்களப் பகுதியில் மாறு வேடத்தில் கொழும்பில் இருந்து வந்த இலஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவினர் கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.


இதன்போது குறித்த காரியாலயத்துக்கு வெளியில் வைத்து 2 இலட்சம் ரூபாவை இலஞ்சமாக பெற்றுக்கொண்டபோது அங்கு மாறுவேடத்தில் இருந்த இலஞ்ச ஊழல் ஒழுப்பு ஆணைக்குழுவினர் சுற்றிவளைத்து சந்தேகநபரை கைதுசெய்தனர்.


இதில் கைது செய்யப்பட்டவர் திருகோணமலையைச் சேர்ந்தவர் என இலஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவினரது ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதுடன், இவரை மட்டக்களப்பு நீதிமன்றில் ஆஜர்படுத்திய பின்னர் கொழும்புக்கு அழைத்து செல்லப்பட்டு புதுக்கடை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.  

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »