இடம்பெறவுள்ள பாராளுமன்ற தேர்தலுக்கு தேசிய மக்கள்
சக்தி களமிறக்கி இருக்கும் வேட்பாளர்களை பார்க்கும்போது அநுரகுமாரவின் அரசாங்கம் 3மாதங்கள் அல்ல மூன்று வாரமேனும் செல்லுமா என தெரிவிக்க முடியாது. நாட்டுக்காக அனுபவமுள்ளவர்கள் பாராளுமன்றத்தில் இருக்க வேண்டும்.எமது அணியில் இருக்கும் அனுபவமுள்ளவர்களுக்கு வாக்களித்து பாராளுமன்றத்தில் பெறும்பான்மை வழங்குமாறே நாங்கள் தெரிவிக்கிறோம். அப்போதுதான் 3 வருடங்களுக்காவது நாட்டை முன்னெடுத்துச் செல்லாம் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
ஜனாதிபதி தேர்தலில் பெரும்பான்மையானவர்கள் எனக்கு வாக்களிக்கவில்லை. அதனால் நான் தோல்வியடைந்தேன். ஆனால் அநுரகுமாரவுக்கும் பெரும்பான்மையானவர்கள் வாக்களிக்கவில்லை. அப்படியானால் நான் பெரும்பான்மை இல்லாத முன்னாள் ஜனாதிபதி. அவர் பெரும்பான்மை இல்லாமல் இருக்கும் ஜனாதிபதி. நாங்கள் இருவரும் ஒன்றாகும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்தார்.
புதிய ஜனநாயக முன்னணியில் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து ஞாயிற்றுக்கிழமை (27) நீர்கொழும்பில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
கம்பஹா மாவட்டத்தை முன்னேற்றுவதற்கு ஐக்கிய தேசிய கட்சியும் சந்திரிகா குமாரதுங்க தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுமே நடவடிக்கை எடுத்திருந்தது. ஆனால் தற்போது இந்த தேர்தலில் யானை சின்னத்துக்கு வாக்களிக்குமாறு தெரிவிக்க நான் வரவில்லை. நாடு வீழ்ச்சியடைந்தபோது நாட்டை பொறுப்பேற்க யாரும் இருக்கவில்லை.
பிரதமர் பதவியை ஏற்பதற்கும் யாரும் இருக்கவில்லை. அப்போது ஒருநாள் நிமல்லான்சா என்னை அழைத்து பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ள யாரும் இல்லை. அதனால் பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ள முடியுமா என கேட்டார். அதன் பிரகாரம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ்வை சந்திக்கச் சென்று, நான் அந்த சவாலை ஏற்றுக்கொண்டேன். சில நாட்களுக்கு பின்னர் ஜனாதிபதியும் சென்றுவிட்டார்.
பின்னர் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற ஜனாதிபதி தெரிவில் என்னை வேட்பாளராக இருக்குமாறு பெரும்பான்மையானவர்கள் கேட்டுக்கொண்டனர். அதன் பின்னர் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையானவர்களை ஒன்றிணைத்துக்கொண்டு அரசாங்கத்தை அமைத்தேன்.
நாங்கள் இன்று வங்குரோத்து நிலையில் இருந்து விடுபட்டிருக்கிறோம். அதனை செய்ய முடியுமாகும் என யாரும் நினைக்கவில்லை. எமது நாடு வீழ்ச்சியடை இடமளிக்கவில்லை.
ஜனாதிபதி தேர்தலில் நாங்கள் காஸ் சிலிண்டர் சின்னத்தில் போட்டியிட்டோம். சிலிண்டர் சின்னத்தில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுக்கின்ற அனைவரும் அனுபமுள்ளவர்கள். ஆனால் கம்பஹாவில் திசை காட்டியில் போட்டியிடுகின்றவர்கள் யார் என்பது கூட உங்களுக்கு தெரியுமா? காலநிலை மாற்றம் தொடர்பில் தெரிந்த வேட்பாளர் ஒருவரை களமிறக்கி இருப்பது நாங்கள் மாத்திரமாகும்.
ருவன் விஜேவர்த்தன எனது ஆலாேசகராக செயற்பட்டுள்ளார். சர்வதேச மாநாடுகளிலும் கலந்துகொண்ட ஒருவர். அவ்வாறான ஒருவர் திசைகாட்டியில் இருக்கிறாரா? அதேபோன்று நலின் பெர்ணாந்து அமைச்சராக இருக்கும்போது தேங்காய்க்கு வரிசை இருக்கவில்லை. லசன்த அழகியவன்ன நெடுஞ்சாலை போக்குவரத்து தொடர்பில் தெரிந்த ஒருவர். அதனால் சிலிண்டருக்கு வாக்களித்து அவர்களை பாராளுமன்றத்துக்கு அனுப்பவேண்டும்.
அநுரகுமார திஸாநாயக்க 3மாதமே இருப்பார் என மக்கள் தெரிவிக்கிறார்கள். ஆனால் அவர் ஜனாதிபதியாக தொடர்ந்து பயணிக்க வேண்டும் என்றே நான் தெரிவிக்கிறேன். அவரின் கட்சியால் அவருக்கு எதிராக குற்றப்பிரேரணை ஒன்று வந்தால் அது எனக்கு தெரியாது. அவ்வாறன விடயங்களை செய்யவேண்டியதில்லை.
ஆனால் அவர்கள் முன்வைத்திருக்கும் வேட்புமனுவை பார்த்தால், அவரின் அரசாங்கம் 3மாதம் அல்ல, மூன்று வாரங்கள் கூட இருக்கும் என நான் நினைக்கவில்லை. அதனால் அனுபவமுள்ளவர்களுக்கு வாக்களிக்க வேண்டும். அனுபவமுள்ளவர்கள் பாராளுமன்றத்தில் இருந்தால் ஜனாதிபதிக்கு 3 வருடங்களுக்காவது நாட்டை கொண்டு செல்ல முடியும். அவ்வாறு இல்லாவிட்டால் தேங்காய் வரிசை மாத்திரமல்ல, எல்லா இடங்களிலும் வரிசை இருக்கும்.
தேர்தலில் தோல்வியடைந்தால் வீட்டில் இருக்குமாறு அநுரகுமார திஸாநாயக்க எனக்கு தெரிவித்திருக்கிறார். நான் அதனை ஏற்றுக்கொள்கிறேன். நான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டேன். பெரும்பான்மையானவர்கள் எனக்கு வாக்களிக்கவில்லை. அதனால் நான் தோல்வியடைந்தேன். ஆனால் அவருக்கும் பெரும்பான்மையானவர்கள் வாக்களிக்கவில்லை.
51வீதம் கிடைக்கவில்லை. அப்படியானால் அவருக்கும் எனக்கும் உள்ள வித்தியாசம் என்ன? நான் பெரும்பான்மை இல்லாத முன்னாள் ஜனாதிபதி. அவர் பெரும்பான்மை இல்லாமல் இருக்கும் ஜனாதிபதி. அதனால் நாங்கள் இருவரும் ஒன்றாகவே இருக்கிறோம்.
அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்குமாறு பாரிய பாேராட்டம் இடம்பெற்றது. தேசிய மக்கள் சக்தியினால் பணி பகிஷ்கரிப்பு போராட்டங்களும் மேற்கொள்ளப்பட்டன. அதற்கு மன்னர் அரச ஊழியர்களுக்கு 10ஆயிரம் ரூபா வழங்கி இருந்தேன். பின்னர் அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் உதய செனவிரத்ன குழு அறிக்கையின் பிரகாரம் இரண்டு கட்டங்களாக சம்பள அதிகரிப்பு வழங்க திறைசேரி இணக்கம் தெரிவித்தது.
2025ஆம் ஆண்டு செலவழிக்கும் நிதி தொடர்பில் நாணய நிதியத்தின் குழுவுக்கு அறிவிக்க வேண்டி இருக்கிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நூற்றுக்கு 13வீதம்வரை எமது செலவு வரையறுக்கப்பட்டது. நாங்கள் செலவிடும் அனைத்து செலவுகள் தொடர்பாகவும் அவர்களுக்கு அறிவிக்க வேண்டும்.
அதன் பிரகாரம் நாங்கள் அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பும் செலவு பட்டியலில் உள்வாங்கி இருந்தோம். அதனாலே அமைச்சரவையில் தீர்மானம் எடுக்க வேண்டி ஏற்பட்டது. வரவு செலவுக்கான செலவு வரையறை என்ன என்பதை நாணய நிதியத்துக்கு காட்டவேண்டி இருக்கிறது.
ஆனால் அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்புக்கு நான் நிதி ஒதுக்கி இருக்கவில்லை என ஜனாதிபதி தெரிவித்திருந்தார். நிதி ஒதுக்குவது 2025 ஒதுக்கீட்டு சட்டமூலத்திலாகும். 2024 ஒதுக்கீட்டு சட்டமூலத்தில் 2025ஆம் ஆண்டுக்காக நிதி ஒதுக்க முடியாது. அது தெரியாதா?. 2024 ஒதுக்கீட்டு சட்டமூலத்தில் நான் பத்தாயிரும் ரூபா சம்பள அதிகரிப்புக்காக நிதி ஒதுக்கினேன்.
2025ஆம் ஆண்டு ஒதுக்கீட்டு சட்டமூத்துக்கு சமர்ப்பிக்கவே நாங்கள் இந்தமுறை சம்பள அதிகரிப்பு தயாரித்தோம். அதனால் இந்த சம்பள அதிகரிப்பு தீர்மானம் இருக்கும்வரை அதனை வரவு செலவு திட்டத்தில் உள்ளடக்க வேண்டும். நாங்கள் எடுத்த தீர்மானம் பிழை என்றால் அதனை நீக்கவும்.
தற்போதைய ஜனாதிபதிக்கு அதற்கான அதிகாரம் இருக்கிறது. அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பில் கவனம் செலுத்தி இருப்பதாக தற்பாேது அவர்கள் தெரிவிக்கின்றனர். அது தேவையில்லை. நாங்கள் அமைச்சரவை தீர்மானம் ஒன்றை எடுத்திருக்கிறோம். அதனை செயற்படுத்த வேண்டும்.