திகாமடுல்ல மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம் ஹாரிஸின் கடந்தகால நடவடிக்கைகள் மற்றும் ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவான பிரசாரப் பணிகளில் ஈடுபடாமை காரணமாகவே அவருக்கு இம்முறை தேர்தலில் போட்டியிட சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை என முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் நிசாம் காரியப்பர் வீரகேசரி வார வெளியீட்டுக்குத் தெரிவித்தார்.
இது குறித்து தொடர்ந்து கருத்துத் தெரிவித்த நிசாம் காரியப்பர், ஹாரிஸின் நடவடிக்கைகள் தொடர்பில் கட்சி ஒழுக்காற்று மேற்கொண்டு அவரிடம் விளக்கம் கோரியபோது, தான் சுகயீனமடைந்ததால் பிரசாரப் பணிகளில் ஈடுபட முடியாது போனதாக அறிவித்திருத்தார். ஆனால் இது ஏற்றுக் கொள்ளக் கூடிய காரணமாக அமையவில்லை.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதற்கு கட்சி தீர்மானித்திருந்த நிலையில் அவர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவையே ஆதரிக்க வேண்டுமென்ற நிலைப்பாட்டில் காணப்பட்டார்.
இருப்பினும் பின்னர் கட்சியின் தீர்மானத்துக்கு அமைவாக தான் செயற்படுவதாக எமது தலைமைக்கு அவர் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், கட்சிக்குள்ளும் கட்சிக்கு வெளியிலும் உள்ள கட்சி ஆதரவாளர்கள் மத்தியிலும் இவரின் கடந்தகால நடவடிக்கைகள் தொடர்பில் எதிர்ப்பும் அதிருப்தியும் வலுவாக எழுந்தன.
கட்சியின் முக்கியஸ்தர்களில் எவரேனும் இவ்வாறு நடந்து கொண்டாலும் கட்சித் தலைமை நடவடிக்கை எடுப்பதில்லை. மன்னித்து விடும் என்ற தவறான கருத்துக்களும் மேலோங்கி நின்றன.
மேலும், தற்போது கையளிக்கப்பட்டுள்ள வேட்புமனுவில் கையெழுத்திட்டவர்களில் நால்வர், முன்னாள் எம்.பி ஹாரிஸை வேட்புமனுவுக்குள் உள்வாங்கினால் தாங்கள் ஒப்பமிடுவதிலிருந்து தவிர்ந்து வெளியேறுவோம் என கட்சித் தலைமைக்கு அழுத்தமாகத் தெரிவித்தனர்.
இந்த விடயத்தில் கட்சியின் தலவைர் ரவூப் ஹக்கீம் இரு தரப்பையும் சமாதானப்படுத்தும் நோக்கில் முயற்சிகளை மேற்கொண்டபோதும் அது கைகூடாததால் ஹாரிஸை வேட்புப் பட்டியலில் உள்ளீர்கக முடியாத நிலைமை ஏற்பட்டது என்றும் நிசாம் காரியப்பர் மேலும் தெரிவித்தார்.