நெதர்லாந்தில் இருந்து சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட சுமார் இரண்டு கோடி ரூபா பெறுமதியான 3,585 மதுபான போத்தல்கள் அடங்கிய கொள்கலன் கொழும்பு துறைமுகத்தில் வைத்து சி.ஐ.சி.ஐ அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது. சரக்கு முனையத்தில் கைவிடப்பட்ட நிலையில், இலங்கை சுங்கத்தின் துறைமுகக் கட்டுப்பாட்டுப் பிரிவு பொறுப்பேற்றதாக சுங்கத் திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இருபது அடி கொள்கலனில் விஸ்கி மற்றும் வொட்கா போத்தல்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாகவும், கலால் அனுமதிப் பத்திரம் பெறாமல் கொழும்பு துறைமுகத்தில் சுங்கவரி இல்லாத இந்த பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.
இந்த மதுபான போத்தல்களை துறைமுகத்தில் வைத்தால், அரசாங்கத்துக்கு நான்கு மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான வரி வருமான இழப்பு ஏற்படும் என தெரிவித்த அதிகாரி, சட்டவிரோத பொருட்களை இறக்குமதி செய்து, துறைமுகத்தில் விட்டு, அவற்றை அகற்றுவதற்கு சில திட்டமிட்ட கும்பல் செயற்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
சிரேஷ்ட பிரதி சுங்கப் பணிப்பாளர் உதய காமினியின் வழிகாட்டலின் கீழ், பிரதி சுங்கப் பணிப்பாளர் ரசிக சமஞ்சித், ஜானக பத்திரன, அமில தசநாயக்க மற்றும் சாமர ஹெயினடிகல ஆகியோர் ஜெயலலாலின் பணிப்புரைக்கமைய மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.