சர்வதேச நாணய நிதியத்துடன் தற்போதைய அரசாங்கத்தின் கொள்கை தெளிவில்லாமல் இருப்பதாக புதிய ஜனநாயக முன்னணியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் சாகல ரத்நாயக்க இன்று (20) தெரிவித்தார்.
வழமையாக புதிய ஜனாதிபதி ஒருவர் நியமிக்கப்பட்டதன் பின்னர் புதிய அரசாங்கத்தின் கொள்கையை பாராளுமன்றத்திலோ அல்லது வேறு இடத்திலோ அறிவிப்பார்கள், புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் அவ்வாறான கருத்தை வெளியிடுவதைத் தாம் காணவில்லை எனவும் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு பிளவர் வீதியிலுள்ள புதிய ஜனநாயக முன்னணி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே சாகல ரத்நாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் தொடர்பான அரசாங்கத்தின் கொள்கை தொடர்பில் எமக்கு தெளிவு இல்லை. பொதுவாக, புதிய ஜனாதிபதி நியமிக்கப்பட்டவுடன், அந்த ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உரையாற்றி தனது அரசாங்கத்தின் கொள்கையை மக்களுக்கு தெரிவிப்பார். இல்லாவிட்டால் நாடாளுமன்றத்தில் உரையாற்றி கொள்கை அறிக்கையை வெளியிடுவார்கள். நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதால், அந்த வாய்ப்பு இம்முறை வரவில்லை. அத்துடன், பாராளுமன்றத்திற்கு வெளியில் மக்கள் மத்தியில் உரையாற்றிய ஜனாதிபதி அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை வெளியிடுவதை நாம் காணவில்லை என்றார்.