இந்த தேர்தலில் அநேகமானவர்கள் பலமான
எதிர்க்கட்சியை அமைப்பதற்காக வாக்கு கேட்கின்றார்கள். ஆனால் ஐக்கிய மக்கள் சக்தி வாக்கு கேட்பது பலமான ஒரு அரசாங்கத்தை அமைப்பதற்காகவும் சஜித் பிரேமதாசவை பிரதமராக கொண்டு வருவதற்குமே. அதனை நாங்கள் வெற்றி கொண்டே தீருவோம் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட தமிழ் முற்போக்கு கூட்டணியின் வேட்பாளருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.துமிழ் முற்போக்கு கூட்டணியின் முதலாவது தேர்தல் பிரசார கூட்டம் இன்று (13) ஹட்டன் கோல்டன் மஹால் மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் நுவரெலியா மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிடுகின்ற தமிழ் முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர்களான வேலுசாமி இராதாகிருஸ்ணன், பழனி திகாம்பரம், மயில்வாகனம் உதயகுமார் உட்பட பொதுமக்களும் கலந்துகொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை மலையக மக்கள் முன்னணி ஏற்பாடு செய்திருந்தது.
மலையக மக்களை பொறுத்தவரையில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் உறுப்பினர்களான நாங்கள் மூவரும் இந்த மக்களுக்கு ஆளும் கட்சியில் இருக்கின்ற பொழுதும் எதிர்க்கட்சியில் இருக்கின்ற பொழுதும் மக்களுக்காக சேவை செய்திருக்கின்றோம். அது மட்டுமல்லாமல் எந்த நேரத்திலும் இந்த மக்களின் துன்ப துயரங்களில் பங்கெடுத்திருக்கின்றோம்.
ஆனால் ஏனைய வேட்பாளர்கள் தேர்தல் காலத்தில் வருவதும் பின்பு காணாமல் போவதும் வழமையான ஒரு விடயமாக மாறிவிட்டது. எனவே இவர்களை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இன்று பலரும் பல சின்னங்களில் பணத்தை பெற்றுக் கொண்டு தேர்தலில் போட்டியிட்டு எமது சிறுபான்மை மக்களின் வாக்குகளை பிரிப்பதில் ஆர்வமாக இருக்கின்றார்கள். இது எமது இனத்திற்கு செய்கின்ற ஒரு சாபக்கேடாகும். இதனை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
நாங்கள் மூவரும் கடந்த முறை பெற்ற வெற்றியைப் போல இந்த முறையும் வெற்றி பெறுவோம். இந்த மக்களுக்காக வேலை செய்வதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம். எமது மக்கள் சிறுபான்மை மக்களின் உரிமையை பாதுகாத்து கொள்வதற்காகவும் எமது பிரதிநிதித்துவத்தை தக்கவைத்து கொள்வதற்காகவும் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.
துமிழ் முற்போக்கு கூட்டணி கொழும்பு, கண்டி, பதுளை, கேகாலை, இரத்தினபுரி ஆகிய அனைத்து மாவட்டங்களிலும் எங்களுடைய வேட்பாளர்கள் வெற்றி பெற்று பாராளுமன்றத்தில் பலமான ஒரு அணியாக நாம் இருப்போம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
நுவரெலியா நிருபர் எஸ்.தியாகு