எதிர்வரும் பொதுத் தேர்தல் போட்டியிலிருந்து விலகிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர், ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற வேட்பாளருமான பொறியியலாளர் அஜித் மான்னப்பெருமவுக்கு, தம்முடன் இணைந்து அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு பத்து அரசியல் கட்சிகளிடமிருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக அவரது வீட்டுக்கு சில அரசியல் கட்சி தலைவர்கள் சென்று அழைப்பு விடுத்துள்ளனர்.
இருபது வருடங்களாக தாம் வகித்து வந்த கம்பஹா தொகுதி அமைப்பாளர் பதவியை வேட்பு மனுக்களில் கையொப்பமிட்ட பின்னர் கட்சித் தலைமையால் இரகசியமாக நீக்கியதால், அந்த அழைப்பிதழ்கள் தொடர்பில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என அஜித் மான்னப்பெரும தெரிவித்துள்ளார்.
தாம் தேர்தலில் போட்டியிடாவிட்டாலும் ஐக்கிய மக்கள் சக்தியின் பட்டியலில் கம்பஹா மாவட்டத்தில் இன்னும் 10வது இடத்தில் இருக்கும் சூழ்நிலையில் வேறு கட்சிகளுடன் இணைவது நெறிமுறைக்கு புறம்பானது என மனசாட்சி கூறுவதாகவும் அவர் கூறினார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட அமைப்பாளர் பதவியில் இருந்து மான்னப்பெரும அண்மையில் கட்சித் தலைமையினால் நீக்கப்பட்டார். கட்சித் தலைமை எடுத்த அந்த முடிவைத் தொடர்ந்து அவர் தேர்தல் போட்டியிலிருந்து விலக முடிவு செய்தார்.
அவர், எதிர்வரும் பொதுத் தேர்தலில் தனக்கு வாக்களிக்க வேண்டாம் என அண்மையில் மக்களிடம் பகிரங்க வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.