இலங்கையில் வாழும் சகல இன மக்களின் கலாசாரத்தை பாதுகாக்கவும், இனங்களுக்கிடையில் ஐக்கியத்தை ஏற்படுத்தவும் அர்ப்பணிப்புடன் செயற்படுவேன் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
புத்தளம், மதுரங்குளி கடையாமோட்டையில் நேற்று (03) இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் புத்தளம் தொகுதி அமைப்பாளரும், முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினருமான ஏ.எச்.எம்.ரியாஸ் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆனமடுவ அமைப்பாளர் சட்டத்தரணி சமரி பெரேரா, பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னான்டோ உள்ளிட்ட பொதுஜன பெரமுன பிரதேச அமைப்பாளர்கள், ஆதரவாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ மேலும் கூறியதாவது,
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டபாய ராஜபக்ஷ ஆகியோரின் ஆட்சிக்காலத்தில் புத்தளம் மாவட்டத்தில் பாரிய அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டது.
எமக்கு எதிராக வாக்களித்தவர்கள் அல்லது பிரதேச ரீதியாக, இன ரீதியாக பிரித்துப் பார்த்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்கவில்லை.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தேசிய ரீதியில் செயற்படும் பிரதான அரசியல் கட்சி என்பதால் இன, மத பேங்கள், கட்சி வேறுபாடுகள் இன்றி நாட்டில் பாரிய அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்திருந்தோம். இப்போதும் எவ்வித குறைவுமின்றி அதே பணிகளை முன்னெடுத்து வருகிறோம். ஏதிர்காலத்திலும் அவ்வாறான பணிகளையே முன்னெடுக்கவும் திட்டமிட்டிருக்கிறோம்.
புதிதாக அமையப் பெறும் எமது புதிய அரசாங்கத்தில் பாரிய திட்டங்களை வகுத்திருக்கிறோம். விவசாயிகள், மீனவர்கள், சுயதொழில் முயற்சியாளர்கள், வியாபாரிகள் என அனைவருக்கும் தொழில் ரீதியாக சிறந்த பாதுகாப்பை வழங்கவும், அவர்களை ஊக்குவிக்கவும், இளைஞர், யுவதிகளுக்கு நல்லதொரு எதிர்காலத்தை பெற்றுக்கொடுக்கவும் எண்ணியுள்ளோம்.
மஹிந்தோதய திட்டத்தினை நடைமுறைப்படுத்தி, அதன் மூலம் மாணவர்கள் சிறந்த கல்வி திட்டத்தை வழங்கவும் எதிர்பார்த்திருக்கிறோம். சாதாரண தரப் பரீட்சையின் பின்னர் கல்வி கற்க முடியாத மாணவர்களுக்கு அவர்கள் விரும்பும் பயிற்சிகளை வழங்கி அவர்களின் எதிர்காலத்தை சிறந்ததாக்கவும் எங்களிடம் திட்டங்கள் உள்ளன.
நாட்டின் பொருளாதாரத்தில் எழுச்சியை உண்டாக்கி, உற்பத்திகளை அதிகரித்து, தன்னிறைவு பெற்ற நாடாக மாற்றி அமைப்பதற்கும், இந்த நாட்டில் வாழும் மக்கள் எதிர்நோக்கி வரும் கஷ்டங்களை குறைத்து, நாட்டு மக்கள் நிம்மதியாகவும், சந்தோஷமாகவும் வாழும் ஒரு சிறந்த சூழலை எமது புதிய அரசாங்கத்தில் உருவாக்கவும் அதற்கு தேவையான திட்டமிடல்களையும் செய்துள்ளோம்.
கல்வி, சுகாதாரம், விளையாட்டு உட்பட சுற்றுலாத்துறையையும் மேம்படுத்தவும், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் இந்த நாட்டை வளப்படுத்தவும் நாம் முயற்சி செய்வோம்.
புத்தளம் - கற்பிட்டி பிரதேசமானது இலங்கையின் சுற்றுலாத் தளங்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்நததொன்றாக காணப்படுகிறது. இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளில் அதிகமானோர் கற்பிட்டி பிரதேசத்திற்கும் விஜயம் செய்வதனை அவதானிக்கின்றோம்.
எனவே, கற்பிட்டி பிரதேசத்தை சுற்றுலாப் பயணிகள் கவரும் வகையில் அபிவிருத்தியை செய்வதுடன், சுற்றுலா பயணிகளின் வருகையால் இங்குள்ள முதல்தர மற்றும் நடுத்தர வர்த்தகர்கள், வியாபாரிகள் என அனைவரும் சிறந்தொரு வருமானத்தை ஈட்டக்கூடிய வகையில் திட்டங்களை தயாரித்து அதனை நடைமுறைப்படுத்துவோம்.
நாம் செய்வதையே வாக்குறுதிகளாக வழங்குவோம்.
ஏனையவர்களைப் போல கைதட்டலுக்காக, தேர்தலுக்காக பொய்யான வாக்குறுதிகளை வழங்கமாட்டோம். செய்ய முடியாத பல விடயங்களை இன்று மேடைகளில் தேர்தல் வாக்குறுதிகளாக குறைவின்றி அள்ளி வழங்குகிறார்கள்.
அவை அனைத்தையும் ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் அவர்கள் மறந்து விடுவார்கள். எனவே, சிந்தித்து வாக்களிப்பதன் மூலமே சிறந்த எதிர்காலத்தை பெற்றுக்கொள்ள முடியும் என்றார்.
-புத்தளம் நிருபர் ரஸ்மின்