Our Feeds


Tuesday, September 10, 2024

Sri Lanka

அரசியல் லாபத்திற்காக அனுரகுமார விஷயத்தில் பொய்யாக இனவாதத்தை தூண்டாதீர்கள் - அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள் - ஹிஸ்புல்லாஹ்வுக்கு NFGG அப்துர் ரஹ்மான் நெத்தியடி பதில்.



ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார தொடர்பான  பொய் பிரச்சார கருத்துக்களை கண்டித்து முன்னாள் ஆளுநர் ஹிஷ்புல்லாவுக்கு Eng.அப்துர் ரஹ்மான் அனுப்பி வைத்துள்ள கடிதம்!


அஸ்ஸலாமு அலைக்கும்! 


அன்புடன் சகோதரர் ஹிஸ்புல்லாஹ் அவர்களுக்கு!


கடந்த சில தினங்களுக்கு முன்னர் காத்தான்குடி தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் நீங்கள் ஆற்றிய உரை ஒன்றில் அனுரகுமார அவர்கள் தொடர்பான ஒரு பாரிய குற்றச்சாட்டை முன் வைத்திருந்தீர்கள்.


'தமிழ் முஸ்லிம் மக்கள் எவருக்கும் தனியான பெருநாள் தினங்கள் வழங்கப்பட மாட்டாது; எல்லோரும் பொதுவான தினத்திலேயே அதனை கொண்டாட வேண்டும்' என்ற வகையிலான பாரதூரமான கருத்து ஒன்றை அனுர குமார அவர்கள் தெரிவித்திருந்ததாக கூறி இருந்தீர்கள். அத்தோடு இது சீனாவில் இருப்பது போன்ற இஸ்லாத்தை நசுக்குகின்ற ஒரு நிலவரமாக இலங்கையில் மாறும் என்றும், முஸ்லிம்களுடைய - இஸ்லாத்துடைய மிகப்பெரிய விரோத சக்தி ஜேவிபி என்பதாகவும் அவர்கள் இப்போது முஸ்லிம்களுடைய நலன்களை பாதுகாப்பது போன்ற ஒரு வேசத்தை போட்டுக் கொண்டு வந்து வாக்குகளை கொள்ளையடிப்பதாகவும் கூறி இருந்தீர்கள். 


அதன் உண்மை தன்மையை அறிந்து கொள்ளும் பொருட்டு அந்த வீடியோவை என்னுடன் பகிர்ந்து கொள்ளுமாறு உங்களிடம் கேட்டிருந்தேன். அதன் பின்னர் நினைவூட்டல் ஒன்றையும் அனுப்பி இருந்தேன். உங்களிடம் இருந்து எந்த பதிலும் இதுவரை வரவில்லை.  


இந்நிலையில் நீங்கள் கூறிய அந்த குற்றச்சாட்டினை உறுதிப்படுத்தும் வகையில் பல வகைகளில் தேடிப்பார்த்தேன். அவ்வாறான ஒரு கருத்தை அனுரகுமார அவர்கள் கூறியதாக எவரும் உறுதிப்படுத்தவில்லை. அவ்வாற ஒரு வீடியோவினை எங்கும் என்னால் காணவும் முடியவில்லை.  எனவே நீங்கள் கூறியது பொய்யான கருத்து என்பது உறுதியாகிறது.


தேர்தல் காலங்களில் மக்களை ஏமாற்றும் வகையில் பொய்யான பரப்புரைகளை செய்வது ஒன்றும் உங்களுக்கு புதிய விடயம் அல்ல. 


பொய்யான பரப்புரைகள் தொடர்பில் முதலில் நீங்கள் அல்லாஹ்வை பயந்து கொள்ள வேண்டும். இரண்டாவதாக இந்த பொய்கள் ஏற்படுத்தும் சமூக பாதிப்புகளையும் நீங்கள் புரிந்து பொறுப்புடன்  நடந்து கொள்ள வேண்டும்.  அரசியல் இலாபங்களுக்காக இவ்வாறு மக்களை பிழையாக வழிநடத்தும் அரசியல் வழிமுறைகளை நீங்கள் கைவிட வேண்டும் என பல தடவை உங்களிடம் நான் கேட்டுள்ளேன். நேரடியாகவும் கூறியுள்ளேன். ஆனால் நீங்கள் திருந்தியதாக தெரியவில்லை. 


இப்போது நாடு ஒரு முக்கியமான இடத்தில் நிற்கிறது. பொய்களின் மீது கட்டமைக்கப்பட்ட இனவாதத்தால் கடந்த காலத்தில் நாடு நாசமாகி இருக்கிறது. இனவாதத்தை யார் கையில் எடுத்தாலும் அது பெரும் பாவமே. இப்போது நீங்கள் கட்டமைக்க  முயற்சிப்பதும் ஒரு வகையான இனவாதமே. அற்ப அரசியல் இலாபங்களுக்காக கட்டமைக்கப்படும் இனவாதமே அல்லாமல் இது வேறில்லை. 


இந்த நாடு எல்லா மக்களுக்கும் உரிய பாதுகாப்பான சுபீட்ச்சமான ஒரு தேசமாக கட்டி எழுப்பப்பட வேண்டிய ஒரு முக்கியமான வரலாற்று சந்தியில் தற்போது நிற்கிறது.  அதற்கான மிகப் பொருத்தமான தெரிவினை மக்கள் மேற்கொள்ள வேண்டும். இத்தருணத்தில் உண்மையின் அடிப்படையிலும் நாட்டு நலனை முன்னுறுத்தியும் மக்களுக்கு அறிவுபூர்வமாக வழிகாட்டுவதே தேர்தல் பிரச்சாரமாக இருக்க வேண்டும். மக்களை குழப்புவதும் பிழையாக வழிநடத்துவதும் அந்த மக்களுக்கு செய்யும் பெரும் துரோகமாகும்.


குறித்த உரையினை ஆற்றும் போது உங்கள் மேடையில் இருந்த உங்களுக்கு நெருக்கமான ஒரு சகோதரருடன் இன்று காலையில் பேசினேன். இது படுபொய்யான தகவல் என்றும் அவ்வாறான விடயங்களை பேச வேண்டாம் என உங்களிடம் அவரும் கேட்டுக் கொண்டதாகவும் கூறினார்.


எனவே மக்களை பிழையாக வழிநடத்துகின்ற பொய்களின் அடிப்படையிலும் இனவாத நோக்கிலும் கருத்துக்களை பரப்புகின்ற விஷமத்தனமான பிரச்சாரங்களை நீங்கள் இனிமேலும் தொடர வேண்டாம் என உங்களிடம்  வினயமாக கேட்டுக்கொள்கிறேன். 


மேலும் இன்னும் சில உண்மைக்கு புறம்பான மனசாட்சிக்கு விரோதமான விடயங்களையும் குறித்த உங்களின் உரையிலே என்னால் கேட்க முடிந்தது . இன்ஷா அல்லாஹ் உங்களை நேரில் சந்திக்கும் ஒரு தருணத்தில் உங்களிடம் அவற்றை நான் நேரில் சுட்டிக் காட்டுகிறேன்.


எஞ்சி இருக்கின்ற  காலத்திலாவது அல்லாஹ்வைப் பயந்து நேர்மையான வழியில் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ளுகின்ற பக்குவத்தையும் நேர்வழியையும் அல்லாஹ் உங்களுக்கு வழங்கட்டும் என பிரார்த்திக்கிறேன்..


-உங்கள் சகோதரன்-

Eng. அப்துர் ரஹ்மான்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »