கடிதத்தின் முழு வடிவம்.
தலைவர்/செயலாளர்,
ஜம்இய்யத்துல் உலமா சபை,
பொத்துவில் கிளை.
வீணான அவதூறுகளையும் அபாண்டங்களையும் பரப்புவது சம்பந்தமாக.
நமது மார்க்கத்தின் சட்ட விதிமுறைகளையும், நெறிகளையும் ஒழுகி நடப்பதற்கு எப்போதும் நமது மக்களுக்கு தலைமை கொடுத்து நேர்வழியில் வழிநடாத்துகிற கண்ணியமிக்க உலமாக்களை கொண்ட ஜம்இய்யத்துல் உலமா சபையினருக்கு நான் சில விடயங்களை இந்த கடிதத்தின் ஊடாக வரையலாம் என விழைகிறேன்.
நான் அம்பாறை மாவட்டத்தின் மக்கள் பேரபிமானம் வென்ற பாராளுமன்ற உறுப்பினராக இருப்பது நீங்கள் அறிந்ததே. இந்நிலையில் கடந்த 08.09.2024 அன்று எமது மாவட்டத்தின் சக பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ HMM. ஹரீஸ் அவர்கள் மருதமுனையில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் வைத்து பொதுப்படையாக முஸ்லிம் எம்பிக்களையும் குறிப்பாக என்மீதும் மிக பாரதூரமான அபாண்டங்களையும் அவதூறுகளையும் கட்டவிழ்த்து விட்டிருக்கிறார்.
அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, பொத்துவிலில் சாராய தவறணை ஒன்று திறக்கப்பட இருப்பதாகவும் அதற்கு முஷாரப் ஆகிய நான் திரைமறைவில் ஒத்துழைப்பதாகவும் அதற்கு சன்மானமாக நான் 05 கோடி ரூபா பணம் பெற்றுள்ளதாகவும் மிக அப்பட்டமான அபாண்டத்தையும் அவதூறையும் மக்கள் மன்றில் பரப்புரை செய்துள்ளார்.
அது மட்டுமல்லாமல், பெயர் குறிப்பிடாத வெளிநாட்டு கம்பனி ஒன்றுக்கு காணி அமைச்சின் ஊடாக நமது பிராந்தியத்தில் உள்ள காணிகளை கொடுத்து அதற்கு பகரமாக ஒரு ஏக்கருக்கு ஒரு இலட்சம் படி பெறுவதாகவும் நூற்றுக்கணக்கான ஏக்கர் காணிகளை விற்று இப்படி பணம் பெற்றுள்ளதாகவும் ஆதாரம் இல்லாத அவதூறுகளை தொடர்ந்தும் குறிப்பிடுகிறார்.
எனவே, நமது மக்களை மார்க்க ரீதியாக சரியாக வழிநடாத்தும் கண்ணியமிக்க உலமாக்களை கொண்ட ஜம்இய்யத்துல் உலமா சபையினரிடம் நான் வேண்டிக்கொள்வதாவது, நமது முஸ்லிம் எம்பிக்களுக்கே அபகீர்த்தி ஏற்படும் வண்ணம் நமது சமூகத்தின் கௌரவத்தை நடுத்தெருவில் விற்கத்துணிந்த இந்த கேவலமான பரப்புரைகளுக்கும் அவதூறுகளுக்கும் சரியான விசாரணையினை நடத்துமாறு உங்களை மிகப் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். குறித்த பாராளுமன்ற உறுப்பினர் அவர் பேசிய அவதூறுகளுக்காக ஆதாரங்களை சமர்ப்பித்து நிரூபிக்க வேண்டும். அல்லது இவை உண்மை என உங்கள் முன்னிலையில் இறைவின் மீது ஆணையிட்டு சத்தியம் செய்ய வேண்டும். அப்படி அவர் ஆதாரங்களுடன் முன்வைத்து அவை நிரூபனமானால் மார்க்கம் வழிகாட்டும் தண்டனையையும் பழியையும் நான் ஏற்றுக்கொள்வேன்.
ஆனால், அவை பொய் என்றும் வீணாண அவதூறுகள் என்றும் விசாரணையில் வெளிச்சத்துக்கு வருகிற போது, இப்படி வீண் அவதூறு பரப்புவர்களுக்கு மார்க்கம் சொல்லும் தண்டனைகள் வழிகாட்டல்கள் என்ன என்பதையும், இந்த அவதூறுகள் உண்மையானவையா வெறும் பொய்களா என்பதையும் மக்கள் மன்றுக்கு ஜம்இய்யத்துல் உலமா சபையினர் வெளிக்கொணர வேண்டும் என்பதையும் தாழ்மையாக விண்ணப்பித்துக்கொள்கிறேன். மக்கள் மன்றத்தில் இப்படியான அவதூறுகளை வேகமாக பரப்பிவிடும் பணியில் குறித்த பாராளுமன்ற உறுப்பினர் இயங்கி கொண்டிருப்பதால் மக்கள் அவதூறுகளை உண்மைகளென நம்பிவிடுமுன் துரிதமாக விசாரணைகளை முன்னெடுக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வண்ணம் மக்கள் பணியில்,
SMM. முஷாரப்,
சட்டத்தரணி,
பாராளுமன்ற உறுப்பினர்,
அம்பாறை மாவட்டம்.
பிரதிகள்:
தலைவர்/செயலாளர்,
ஜம்இய்யத்துல் உலமா சபை,
தலைமைக்காரியாலயம்,
கொழும்பு.
தலைவர்/செயலாளர்,
ஜம்இய்யத்துல் உலமா சபை,
கல்முனை.