நாட்டில் இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலில் பலமானதொரு கூட்டணியாகப் போட்டியிட எதிர்த்தரப்பிலுள்ள தமிழ்க் கட்சித் தலைமைகள் தீர்மானித்துள்ளன.
ஐக்கிய மக்கள் கூட்டணியுடனான பேச்சுவார்த்தை மிகவும் வெற்றிகரமாக நிறைவடைந்தது. அடுத்த தேர்தலில் அரசாங்கமொன்றை அமைப்பதற்காக மக்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ள தயாராகி வருகின்றோம. இம்முறை தேசிய மக்கள் சக்தியே ஐக்கிய மக்கள் கூட்டணியின் பெரும் சவாலாக இருக்கிறது. ஐக்கிய மக்கள் கூட்டணிக்கு அப்பால் இருக்கும் ஏனைய கட்சிகளுடனும் கூட்டணி அமைப்பதற்கு முயற்சித்து வருகிறோம்” என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் நேற்று ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் எவ்வாறு போட்டியிடுவது என்பது தொடர்பில் ஐக்கிய மக்கள் கூட்டணியில் பங்காளிக் கட்சிகளாக இருக்கும் தமிழ்க் கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையில் நேற்று (24) முக்கிய பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளதுடன் நேற்று மாலை முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் மற்றும் இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோருக்கு இடையில் இடம்பெற்றுள்ளது. அதன்போது, எதிர்க்கட்சிகள் ஓரணியாக திரள்வது தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பில் முன்னாள் எம்.பி. ரவூப் ஹக்கீம் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தவிர்ந்த ஏனைய சகல கட்சித் தலைவர்களுடனும் கலந்துரையாட நாங்கள் தீர்மானித்திருக்கிறோம். அரசியல் தலைவர்கள் யாரின் தலைமைத்துவத்தின் கீழ் ஒன்றுபடப் போகிறோம் என்பதைவிட பரந்துபட்ட கூட்டணியாக இணையவே முயற்சிக்கிறோம். நிச்சயமாக நாட்டின் ஜனநாயகத்தை மீண்டும் ஸ்திரப்படுத்த வேண்டுமெனில் ஒரு தரப்புக்கு மாத்திரம் அதிகாரத்தை வழங்கக் கூடாது. நிறைவேற்றதிகாரத்தை ஒருபுறமும் பாராளுமன்ற அதிகாரத்தை மறுபுறமும் வைத்தால் ஜனநாயகத்துக்கு சிறப்பாக இருக்கும். ஜனநாயகம் மேலும் பலமடையும்.
அநுரகுமார திசாநாயக்க நாட்டை முன்னெடுத்துச் செல்லவும் பொருளாதாரத்தை கட்டியெழுப்பவும் எங்களால் முடிந்த அதிகபட்ச ஒத்துழைப்பை எங்களின் கொள்கைகளின் அடிப்படையில் வழங்கத் தயாராக இருக்கிறோம். இருந்தபோதும் பாராளுமன்றத்தில் ஒரு சமத்துவம் இருக்க வேண்டும். விசேடமாக பிரதான எதிர்க்கட்சி என்ற அடிப்படையில் எங்களுக்கும் பொறுப்பு இருக்கிறது. அதனால், எதிர்த்தரப்பிலுள்ள சகலத் தரப்பினரையும் இணைத்துக்கொண்டு பலமான அரசாங்கமொன்றை உருவாக்குவதே எங்களின் தேவையாகும்.
ஏனைய சிறிய கட்சிகளின் தலைவர்களுடன் கலந்துரையாடவுள்ளோம். குறிப்பாக மனோ கணேசன், சுமந்திரன் உள்ளிட்ட தரப்பினர் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். செந்தில் தொண்டமானும் என்னை சந்திக்கவுள்ளார். இடதுசாரிக்கு அழுத்தத்தை ஏற்படுத்தும் தரப்பினராக நாங்கள் கட்டியெழும்பியுள்ளோம்.
ஜனாதிபதித் தேர்தலின் முடிவுகள் ஜனநாயகத்துக்கு சிறந்த அடையாளமாக அமைந்துள்ளன. வன்முறைகளற்ற அமைதியான புரட்சியொன்று ஏற்பட்டுள்ளது. அதற்கு தலைவணங்குகிறோம்’’ என்று சுட்டிக்காட்டினார்.