Our Feeds


Sunday, September 8, 2024

Sri Lanka

வடக்கு மக்களிடம் அநுரகுமார மன்னிப்பு கோர வேண்டும்!


வாக்குகளைப் பெறுவதற்காக வடக்கு மக்களை அச்சுறுத்திய அநுரகுமார திஸாநாயக்க  அந்த மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

சிங்கள மக்களின் பெயரைப் பயன்படுத்தி வடக்கு மக்களை அச்சுறுத்தியமைக்காக தென்பகுதி மக்களிடமும் அநுரகுமார மன்னிப்புக் கோர வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தின் சங்கிலியன் பூங்காவில் இன்று நடைபெற்ற இயலும் ஶ்ரீலங்காவெற்றிப் பேரணியில் உரையாற்றும்போது அவர் இதனைத் தெரிவித்தார்.

அத்துடன், மாகாண சபைகளுக்கு அபிவிருத்திக்கான அதிகாரம் வழங்கப்படும் என்பதுடன் மாகாண அபிவிருத்தி விசேட நிறுவனங்கள் ஆரம்பிக்கப்படும் என்றும் அறிவித்தார்.

விவசாயத் துறையைப் பலப்படுத்தி வரும் நிலையில், வடக்கில் விவசாயத்திற்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

வடக்கில் காங்கேசன்துறை, பூனகரி,மாங்குளத்தில் விசேட வர்த்தக வலயம் ஆரம்பிக்கவிருப்பதுடன் வடக்கில் சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

அத்துடன் வடக்கில் டிஜிட்டல் மத்திய நிலையமொன்றை ஆரம்பிக்கவிருப்பதாகவும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் குறிப்பிட்டதாவது:

''ஜனாதிபதித் தேர்தலை ந டத்த முடியும் என இரண்டு வருடங்களுக்கு முன்னர் யாரும் நம்பியிருக்கவில்லை.

அனைத்திற்கும் வரிசை இருந்தது. நாட்டில் ஸ்தீரத்தன்மையை பாதுகாத்து பொருளாதாரத்தைப் பலப்படுத்தியுள்ளேன்.

அந்த நிலையில் ஜனாதிபதித் தேர்தலை நடத்தக் கூடியதாக உள்ளது. இயலும் ஶ்ரீலங்கா எண்ணக் கருவை முன்னெடுத்து வருகிறேன்.

சஜித்தும் அநுரவும் பொறுப்புக்களை ஏற்க முன்வரவில்லை. அவர்கள் இருந்தால் தேர்தலை நடத்தியிருக்க முடியுமா? கூட்டங்களில் பேச முன்னர் அவர்கள் எனக்கு நன்றி சொல்ல வேண்டும்.

இன்னும் பிரச்சினைகளும், சிரமங்களும் உள்ளன. ஆனால் எதிர்பார்ப்பு பற்றிய எதிர்பார்ப்பு உள்ளது. அந்த எதிர்பார்ப்பைப் பாதூக்ககவே நான் போட்டியிடுகிறேன்.

கடந்த காலத்தில் எமது கடன் சுமை அதிகரித்திருந்தது. கடன் பெறுவதை நிறுத்தினோம். கடன் பெறுவதை நிறுத்தியதால் வரிகளை அதிகரிக்க நேரிட்டது.  பண வீக்கம் அதிகரித்திருந்தது. இருவேளை சாப்பிடுவது கூட கஷ்டமாக இருந்தது.

தற்பொழுது பொருளாதரம் பலமடைந்துள்ளது. அஸ்வெசும திட்டத்தின் கீழ் 24 இலட்சம் பேருக்கு வழங்கி இருக்கிறோம்.

இன்னும் 5 இலட்சம் பேருக்கு அஸ்வெசும வழங்கப்பட வேண்டும். சம்பள உயர்வு வழங்கியுள்ளதோடு ஓய்வூதியங்களையும் அதிகரித்துள்ளோம்.

பொருளாதாரம் வலுவடைந்துள்ளதாலே அவற்றை செய்ய முடிந்தது. பொருட்களின் விலைகளும் குறைந்துள்ளன. மேலும், நிவாரணங்கள் வழங்க வேண்டும்.

பொருட்களின் விலைகள் குறைவடைந்து வருகிறன. வாழ்க்கைச் செலவு இன்னும் அதிகமாக இருக்கிறது.

அதனால் ரூபாவின் பெறுமதியைப் பலப்படுத்தி வாழ்க்கைச் செலவைக் குறைக்க வேண்டும். ரூபாவின் பெறுமதி வலுவடையும் போது இன்னும் சலுகைகளை வழங்கலாம்.

அடுத்த வருடம் மேலும் சலுகைகள் வழங்குவேன். வரியை குறைத்து, சலுகைகள் வழங்க முடியாது. 2019 இல் கோட்டாபய வரியை குறைத்தார்.

நாட்டின் வருமானம் குறைந்தது. 2022 இல் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டது. பெண்களுக்காக தனியான விஞ்ஞாபனத்தை சமர்ப்பித்துள்ளேன்.

அவர்களை வலுவூட்ட சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஒவ்வொரு பொலிஸ் நிலையங்களிலும் தனியான பிரிவு ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண மக்களுக்கும் உறுமய காணி உறுதி பெற்றுக் கொடுக்கப்படும். அடுத்த வருடம் மேலும் வாழ்க்கைச் செலவை குறைப்போம்.

உற்பத்தி அதிகரிக்கும் போது அனைவரிடமும் வரி அறவிடப்படும். அத்தோடு தற்பொழுது வரி செலுத்துவோரின் வரிச்சுமை குறையும்.

விவசாயத் துறையைப் பலப்படுத்தி வருகிறோம்.  வடக்கு விவசாயத்திற்கு முக்கியமானது. டிஜிட்டல் பொருளாதாரத்தை ஏற்படுத்த இருக்கிறோம்.

 வடக்கில் காங்கேசன்துறை, பூனகரி,மாங்குளத்தில் விசேட வர்த்தக வலயம் ஆரம்பிக்க இருக்கிறோம். இப்பிரதேசத்தில் சுற்றுலாதுறையை ஊக்குவிக்கிறோம்.

டிஜிட்டல் மத்திய நிலையமொன்றை ஆரம்பிக்க இருக்கிறோம். இவற்றை அரசினால் தனியாக மேற்கொள்ள முடியாது.

9 மாகாண சபைகளுக்கும் அரசாங்கத்துடன் பணியாற்றுவதற்காக மாகாண சபைகளுக்கு அபிவிருத்திக்கான அதிகாரம் வழங்கப்படும். மாகாண அபிவிருத்தி விசேட நிறுவனங்கள் ஆரம்பிக்கப்படும்.

வடக்கு மக்களை அநுரகுமார அச்சுறுத்துகிறார். மாற்றத்திற்காக தெற்கு மக்கள் தயாராகியிருக்கையில் அந்த மாற்றத்திற்கு எதிராக செயற்பட்டால் எவ்வாறான மனநிலை தெற்கில் ஏற்படும் என்கிறார்.

அவரது வெற்றியின் பங்காளர்களாக வர வேண்டும் என்கிறார். தனக்கு வாக்களிக்காவிட்டால் பார்த்துக் கொள்வோம் என அநுர எச்சரித்தார். அதனை  நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

2010  ஜனாதிபதித் தேர்தலின் போது இங்கு வந்து பொன்சேக்காவுக்கு வாக்களிக்க கோரினோம். வடக்கு மக்கள் பொன்சேக்காவுக்கு வாக்களித்தனர். தெற்கு மக்கள் மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு வாக்களித்தனர்.

மஹிந்த ராஜபக்‌ஷ வென்றார்.உங்களை யாராவது தாக்கினார்களா. 2015 இல் மைத்திரிபால சிரிசேனவுக்கு வாக்களிக்கக் கோரினோம்.

தென் பகுதி மக்கள் மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு வாக்களித்தனர். நாம் வென்றோம். ஏதாவது நடந்ததா. 2019 இல் வடக்கு மக்கள் சஜித்திற்கு வாக்களித்தார்கள்.

தெற்கில் கோட்டாவுக்கு வாக்களித்தார்கள். கோட்டாபய இராணுவத்தை அழைத்து வந்தாரா. தேர்தல் முடிவுகளை மக்கள் அங்கீகரித்தனர். அநுர எப்படி மக்களை அச்சுறுத்த முடியும்.

வடக்கு மக்களை மட்டுமன்றி தெற்கு மக்களையும் அவர் அச்சுறுத்துகிறார். அது தான் அவர்களின் போக்கு.

அநுர வெற்றி பெற மாட்டார். முன்பு துண்டுப் பிரசுரம் பகிர்ந்தார். வடக்கு மக்களிடம் அநுர மன்னிப்புக் கோர வேண்டும்.

தென்பகுதியில் உள்ள சிங்கள மக்களின் பெயரைப் பயன்படுத்தி அச்சுறுத்தியதற்காக தென்பகுதி மக்களிடமும் அநுர மன்னிப்புக் கோர வேண்டும்.

பின்னர் அவருக்கு எதிர்க்கட்சிக்கு வரலாம். அவருக்கு யாழ்ப்பாணத்திற்கு வர முடியாது போகும்.

நாம் முன்னர் அவர்களுக்கு அஞ்சவும் இல்லை. இப்பொழுது அஞ்சவுமில்லை. சஜித் பற்றி பேசி பயனில்லை.

எதிர்க்கட்சித் தலைவரின் பொறுப்பை அவர் செய்திருந்தால் அநுர முன்னேறி வந்திருக்க மாட்டார்.

அவருக்கு அளிக்கும் வாக்குகள் பயனற்றதாகும். எமது நாட்டை முன்னேற்ற வேண்டும். எனவே கேஸ் சிலிண்டருக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்யுங்கள்." எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »