Our Feeds


Saturday, September 28, 2024

SHAHNI RAMEES

பொதுத் தேர்தலில் புதிய சின்னத்தில் போட்டியிடுவேன்..! - திலித் ஜயவீர !

 

பொதுத்தேர்தலில் புதிய சின்னத்தில் போட்டியிடுவேன். பலமான அரசியல் கூட்டணியை தோற்றுவிப்பேன். சுயாதீனமாக செயற்படுவதாக குறிப்பிட்டுக் கொள்பவர்கள் எம்முடன் கைகோர்க்கலாம் என மவ்பிம ஜனதா கட்சியின் தலைவர் திலித் ஜயவீர தெரிவித்தார்.  

மவ்பிம ஜனதா கட்சியின் காரியாலயத்தில்  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.  

அவர் மேலும் தெரிவித்ததாவது,  

ஜனாதிபதித் தேர்தலில் கணிசமான அளவு வாக்குகளை பெற்றுக் கொண்டுள்ளேன்.  எனக்கு வாக்களித்த மற்றும் வாக்களிக்காத அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தேர்தல் பிரச்சாரத்தின் போது பொய்யான வாக்குறுதிகளை  வழங்கவில்லை.  

இடம்பெறவுள்ள பொதுத்தேர்தலில் போட்டியிடுவேன். அதேபோல் 22 தேர்தல் மாவட்டங்களிலும் மவ்பிம ஜனதா கட்சியின் உறுப்பினர்களை களமிறக்குவேன். பொதுத்தேர்தலில் புதிய சின்னத்தில் போட்டியிடுவேன்.  

சுயாதீனமாக செயற்படுவதாக குறிப்பிட்டுக் கொள்பவர்கள் எம்முடன் கைகோர்க்கலாம்.  பலமாக அரசியல்  கூட்டணியை ஸ்தாபிப்போம்.   

பொருளாதார நெருக்கடிக்கு  ராஜபக்ஷர்களைப் போன்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் பொறுப்புக் கூற வேண்டும்.  

பொருளாதார நெருக்கடியை முன்னிலைப்படுத்தி  மக்களாணையை பெற்றுக் கொள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முயற்சித்தார்.   

அவரது முயற்சியை மக்கள் தோற்கடித்தார்கள். அதேபோல் பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்புக் கூற வேண்டிய ராஜபக்ஷர்களையும் மக்கள் புறக்கணித்துள்ளார்கள்.  

தேசியத்தை பேசிக் கொண்டு ராஜபக்ஷர்களால் இனி ஆட்சிக்கு வர முடியாது. இடம்பெறவுள்ள பொதுத்தேர்தலில் மக்கள் சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளுக்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என்றார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »