Our Feeds


Sunday, September 1, 2024

Sri Lanka

நான் நல்லவன் என்றால் என்னை ஆதரியுங்கள். சுற்றியிருப்பவர்களை பார்க்காதீர்கள் - ரிஷாதுக்கு ரனில் பதில்



செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி சரியான தீர்மானத்தை எடுத்து நாட்டை முன்நோக்கி நகர்த்தும் வேலைத் திட்டத்தை மக்கள் உறுதிப்படுத்த வேண்டும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.


அடுத்த வருடம் இளைஞர்களுக்கு ஒரு லட்சம் வேலைவாய்ப்புக்கள் உருவாக்கப்படும் என்பதுடன் சுயதொழில் பெறுவதற்காக 50 பேருக்கு நிதி நிவாரணங்கள் வழங்கப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.



தான் நல்லவராக இருந்த போதும் தன்னை சுற்றியிருப்பவர்கள் மோசமானவர்கள் என்று ரிஷாத் பதியூதீன் எம்.பி கூறியிருப்பதை நினைவுபடுத்திய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இம்முறை நடப்பது பாராளுமன்ற தேர்தல் அல்ல. மாறாக ஜனாதிபதி தேர்தலே நடக்கவுள்ளது என்றும் தெரிவித்தார்.  


பாராளுமன்ற தேர்தலிலேயே என்னை சுற்றியிருப்பவர்கள் யார் என்பது குறித்து தெரிவு செய்ய வேண்டும். எனவே நான் நல்லவனாக இருந்தால் எனக்கு ஆதரவளியுங்கள் என ரிஷாத்பதியூதீன் உள்ளிட்ட தரப்பினருக்கும் முஸ்லிம் காங்கிரஸூக்கும்  ஜனாதிபதி அழைப்பு விடுத்தார். 


ரிஷாத் பதியூதீன் அமைச்சராக இருந்தபோது பொருட்களின் விலையை குறைக்க வேண்டுமென அழுத்தம் கொடுத்திருந்தாலும், ஒரு போதும்  இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வது குறித்து பேசவில்லை என்றும் தனது தலைமையிலான அரசாங்கமே முஸ்லிம்களின் உரிமைகளை பாதுகாத்தது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.


அத்துடன், தென் கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு மருத்துவபீடம் அமைக்கப்படும் எனவும், அம்பாறை வைத்தியசாலை போதனா வைத்தியசாலையாக தரமுயர்த்தப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.


சம்மாந்துறை பொது விளையாட்டரங்கில் நேற்று (31) நடைபெற்ற "இயலும்  ஸ்ரீலங்கா" வெற்றிப் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார். இந்தப் பேரணியில் சம்மாந்துறையின் பெருந்திரளான மக்கள் அணிதிரண்டிருந்தனர்.


இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,


இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்புக்களை வழங்க வேண்டும். ஒரு இலட்சம் வேலைவாய்ப்புக்களை அடுத்த வருடம் வழங்குவோம். விவசாயத்தை நவீனமயப்படுத்துவோம். புதிய தொழில்களை உருவாக்குவோம். சுய தொழில் கல்விக்காக 50 ஆயிரம் பேருக்கு நிதி நிவாரணம் வழங்குவோம். 


சம்மாந்துறையில் 35 - 40 ஆயிரம் ஏக்கர்கள் உள்ளன. நெல் உற்பத்தியை ஹெக்டயாருக்கு 8 மெட்ரிக் தொன்கள் வரை அதிகரிக்க வேண்டும். அவ்வாறு செய்தால் நல்ல விலைக்கு கொள்வனவு செய்வோம். இந்த பகுதியில் நெல் உற்பத்தியை பெருமளவில் அதிகரிக்கும் வசதிகளை செய்ய எதிர்பார்கிறோம். திருகோணமலையில் 1500 ஏக்கரில் முதலீட்டு வலயமொன்றை அமைப்போம்.  அதனுடன் இணைந்த கைதொழில்பேட்டை அம்பாறையில் அமைக்கப்படும். 


தகவல் தொழில்நுட்பத் துறை பலப்படுத்தப்படும். விவசாயிகளுக்கு இலவச காணி உறுதிகள் வழங்குவோம். இவ்வாறான பல வேலைத்திட்டங்களுடன் வந்துள்ளேன். அவற்றை முன்னோக்கி கொண்டு செல்வேன். செப்டெம்பர் 22இற்குப் பின்னர் முன்னோக்கி கொண்டு செல்வேன். 


பால் உற்பத்தியை மூன்று மடங்காக அதிகரிப்போம். அதிகளவில் பால் உற்பத்தி செய்யப்பட்டால் எதிர்கட்சித் தலைவருக்கும் பால் அனுப்பி வைக்க முடியும்.  


விவாசயத்திற்குத் தேவையான உரம் பெற்றுத்தருவோம். தென்கிழக்கு பல்கலைக்கழகத்துக்கு மருத்துவ பீடத்தை அமைத்துத் தருவோம். அம்பாறை வைத்தியசாலையை போதனா வைத்தியசாலையாக மாற்றியமைப்போம். அனைத்து இனத்தவரும் அதனால் பயனடைவர். பாயிஸ் முஸ்தபாவுடன் பேசி இந்த பல்கலைக்கழகத்தை மேலும் விரிவுபடுத்துவோம்.  


அதற்கு ஆதரவளிக்க செப்டெம்பர் 21 கேஸ் சிலிண்டருக்கு வாக்களியுங்கள். இல்லாவிட்டால் சிலிண்டரும் இருக்காது எதிர்கட்சி தலைவருக்கு அனுப்ப பாலும் இருக்காது." என்று ஜனாதிபதி தெரிவித்தார்.   

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »