இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பாளர்கள் அனைத்து மாவட்டங்களிலும் 32 குறுகிய கால தேர்தல் கண்காணிப்பாளர்களை கண்காணிப்பில் ஈடுபடுத்தியுள்ளனர்.
இது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு குழு தெரிவித்துள்ளதாவது,
குறுகிய கால கண்காணிப்பாளர்கள் பிரச்சாரம் முடிவடைந்ததன் பின்னரான காலத்தில் இடம்பெறும்; தேர்தல் தொடர்பான நடவடிக்கைகள் மற்றும் ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பு தினம் அன்றைய தினம் வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு ஆரம்பமாவது, வாக்களிப்பு, வாக்குகள் எண்ணப்படுவது தேர்தல் முடிவுகள் வெளியிடப்படுவது போன்றவற்றை கண்காணிப்பார்கள்.
இன்று எங்கள் பணியை வலுப்படுத்தும் குறுகியகால பார்வையாளர்கள் நகரங்கள் மற்றும்கிராமங்களிற்கு செல்வார்கள்,அவர்களுடைய கண்காணிப்புகள் ஒன்பது மாகாணங்கள் குறித்த அவதானிப்புகளை மேற்கொள்வதற்கு இன்றியமையாதவையாகும் என ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதி தலைமை கண்காணிப்பாளர் இன்டா லசே தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் குறுகிய கால கண்காணிப்பாளர்கள் இரண்டு சர்வதேச குழுவாக செயற்படுவார்கள்,அவர்கள் தங்கள் பணியை ஆரம்பிப்பதற்கு முன்னர் தேர்தல் திணைக்களத்தில் இடம்பெறவுள்ள செயற்பாடுகள் குறித்து நன்கு எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
26 கண்காணிப்பாளர்களை ஏற்கனவே கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தியுள்ளோம்,அவர்கள் ஆகஸ்ட்; 29 முதல் இலங்கையின் அனைத்து மாகாணங்களிலும் தேர்தலிற்கான தயாரிப்பு நடவடிக்கைகள்,தேர்தல் பிரச்சாரத்தை கண்காணித்து வருகின்றனர்.