Our Feeds


Tuesday, September 3, 2024

Sri Lanka

தேர்தல் விஞ்ஞாபனத்தை உண்மைப்படுத்துவேன்!


ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஊடாக எதிர்வரும் ஜனவரி மாதத்தில் இருந்து அரச ஊழியர்களின் சம்பளத்தை 24% ஆக அதிகரிப்பதோடு, வழங்கப்படுகின்ற வாழ்க்கைச் செலவு கொடுப்பனவை 25,000 ரூபா வரை அதிகரித்து, அடிப்படை சம்பளத்தை 57,500 வரை அதிகரிக்க நடவடிக்கை எடுப்போம் என ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்த மக்கள் வெற்றிப் பேரணித் தொடரின் 30 ஆவது பேரணி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தலைமையில் நேற்று (02) முல்லைத்தீவு நகரில் வெற்றிகரமாக இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர்,

அரச ஊழியர்களையும் மத்திய வகுப்பினரையும் அரசாங்கத்தின் வரிச்சுமையிலிருந்து  விடுவித்து  6- 36% வரையாக காணப்படுகின்ற வரி சூத்திரத்தை 1 - 24% வரை குறைப்போம் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

அத்தோடு சிரேஷ்ட பிரஜைகளின் சேமிப்புக்கு வழங்கப்படுகின்ற 15% வட்டியை தொடர்ந்து வழங்குவதோடு, ஓய்வூதிய கொடுப்பனவையும் சரியாக வழங்க நடவடிக்கை எடுப்போம். பாதுகாப்பு துறையில் உள்ளவர்களுக்கான கொடுப்பனவுகளையும், பதவி உயர்வுகளையும் சரியான முறையில் வழங்குவோம். பொலிஸாருக்கு தற்போதைய அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற 3 மாதத்துக்கான மேலதிக கொடுப்பனவை தொடர்ந்தும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்போம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

கல்வித்துறையும் சுகாதாரத் துறையும் விரிவுபடுத்துவதோடு எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு பிரபஞ்சம், மூச்சு, போன்ற வேலைத்திட்டங்களின் ஊடாக ஒரு பில்லியன் பெறுமதியான சேவைகளை கல்விக்கும் சுகாதாரத்துக்கும் செய்திருக்கின்றோம். தான் சொல்வதைச் செய்கின்ற, செய்வதைச் சொல்கின்ற நபர் என்ற அடிப்படையில் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ள அனைத்து விடயங்களையும் இந்த மண்ணின் நிதர்சனமாக அதனை உண்மைப்படுத்துவேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் இதன்போது தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »