இலங்கையின் புதிய ஜனாதிபதியாக அநுரகுமார திஸாநாயக்க தெரிவுசெய்யப்பட்டிருப்பது நாட்டின் மறுசீரமைப்பு செயற்திட்டங்களைத் தடம்புரளச்செய்யாது என 'மூடீஸ்' தரப்படுத்தல் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
இலங்கையில் கடந்த சனிக்கிழமை நடைபெற்றுமுடிந்த ஒன்பதாவது ஜனாதிபதித்தேர்தல் மற்றும் அதன் முடிவுகளை அடுத்து, நியூயோர்க் நகரைத் தளமாகக்கொண்டு இயங்கிவரும் 'மூடீஸ்' எனப்படும் பிரபல கடன் தரப்படுத்தல் நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அவ்வறிக்கையின் பிரகாரம் இலங்கையில் அரசியல் மாற்றமொன்று நிகழ்ந்திருப்பினும், தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் கடன்மறுசீரமைப்பு நடவடிக்கைகள், சர்வதேச நாணய நிதியத்தினால் ஆதரவளிக்கப்படும் செயற்திட்டம் என்பன உள்ளடங்கலாக நாட்டில் முன்னெடுக்கப்பட்டுவரும் பரந்துபட்ட பொருளாதார மறுசீரமைப்புக்கள் எவ்வித மாற்றமுமின்றி அவ்வாறே தொடரும் என எதிர்பார்ப்பதாக 'மூடீஸ்' தெரிவித்துள்ளது.
அதேவேளை நிதியியல் ஒருங்கிணைப்பை உரியவாறு பேணுவது சற்று சவாலான விடயமாக இருக்கக்கூடுமெனச் சுட்டிக்காட்டியிருக்கும் 'மூடீஸ்' கடன் தரப்படுத்தல் நிறுவனம், புதிய நிர்வாகம் இந்த பொருளாதார சவால்களைத் தாண்டிச்செல்லும்போது சில கொள்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படக்கூடும் என எதிர்பார்ப்பு வெளியிட்டுள்ளது.
'சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்பட்டிருக்கும் கட்டமைப்பு சார்ந்த சீரமைப்புக்கள் மற்றும் கடன்மறுசீரமைப்பு என்பன உள்ளடங்கலாக நாட்டில் தற்போது அமுலில் இருக்கும் மறுசீரமைப்பு நடவடிக்கைகளோ, பேரண்டப்பொருளாதாரக்கொள்கைகளோ பெருமளவுக்கு மாற்றமடையும் என நாம் கருதுவில்லை. இருப்பினும் நிதியியல் ஒருங்கிணைப்பைப் பேணுவதில் நிலவும் சவால்களுக்கு மத்தியில் சில கொள்கைகளுக்கு முன்னுரிமையளிக்கப்படக்கூடும்' என 'மூடீஸ்' கடன் தரப்படுத்தல் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.