Our Feeds


Sunday, September 15, 2024

Sri Lanka

முன்னாள் ஜனாதிபதிகளுக்கான அனைத்து சலுகைகளும் நிறுத்தப்படும் - அநுரகுமார!


தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் ஜனாதிபதி, முன்னாள் ஜனாதிபதிகள், பிரதமர்,  பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டவர்களின் ஓய்வூதியம், இதர கொடுப்பனவுகள், வரியற்ற வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரம், இலவச குடியிருப்பு, மின்சார, நீர் கட்டணங்கள் உட்பட அனைத்து சலுகைகளும் நிறுத்தப்படும் என்று தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

வாகன தொடரணி செல்லுதல், விசேட பிரமுகர் பாதுகாப்பு, உள்ளிட்டவற்றையும் வழங்கப்போவதில்லை என்று தெரிவித்துள்ள அவர், நாட்டின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுகின்றபோதும், குற்றங்கள் குறைக்கின்றபோதும் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் அவசியமில்லை என்றும் அவர் கூறினார்.

அநுராதபுரத்தில் “வெற்றி நாட்டுக்கு - நாடு அனுரவிற்கு” எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் வரலாற்று வெற்றியை தேசிய மக்கள் சக்திக்கு வழங்கவுள்ளீர்கள் என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது. இலங்கை வரலாற்றில் மக்கள் தேர்தல் செயற்பாடுகளை முன்னெடுக்கும் சந்தர்ப்பமாக இது மாறியுள்ளது.

கடந்த காலங்களில் உணவுப்பொதிக்காவும், பணத்துக்காகவும் தேர்தல் பிரசாரக் கூட்டத்துக்குச் சென்ற மக்கள் தற்போது மாற்றத்துக்காக பிரசாரக் கூட்டத்துக்கு திரண்டு வருகின்றார்கள். அந்த மாற்றத்தை வழங்குவதற்கு திசைகாட்டி தயாராகிவிட்டது.

ரணில் விக்கிரமசிங்கவும்,  சஜித் பிரேமதாசவும் தற்போதைய நிலைமையை நன்கு உணர்ந்து கொண்டுள்ளார்கள். எவ்வாறாவது எமது பிரசாரச் செயற்பாடுகளை நிறுத்துவதற்கு திட்டங்களை தீட்டியவண்ணமுள்ளார்கள்.

அதற்காக அடுத்த வாரத்தில் பொய்யான பிரசாரங்கள், முரண்பாடுகள், வன்முறைகளை தோற்றுவிக்கும் செயற்பாடுகள் வெகுவாக முன்னெடுக்கப்படுவற்கு முயற்சிகள் எடுக்கப்படுகின்றன.

இந்தச் சந்தர்ப்பத்தில் எனக்கு ரணிலுக்கும் சஜித்துக்கும் ஒரு செய்தியைச் சொல்ல வேண்டியுள்ளது. உங்களுடைய திட்டங்களும் முன்னெடுக்கவுள்ள செயற்பாடுகளும் காலம் தாழ்ந்துவிட்டது. தேசிய மக்கள் சக்தியின் வெற்றியை இனிமேல் நிறுத்திவிடவே முடியாது.

அதுமட்டுமன்றி இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக வடக்கு, கிழக்கு, தெற்கு உட்பட அனைத்து மக்களினதும் நம்பிக்கையை வென்றெடுத்த அரசாங்கமொன்று தேசிய மக்கள் சக்தி தலைமையில் உருவாக்கப்படவுள்ளது.

ராஜபக்ஷக்களும்,  ரணில் விக்கிரமசிங்கவும் வடக்கையும்,  கிழக்கையும் காண்பித்து தெற்கில் வாக்குவங்கியை நிரப்பினார்கள். இனவாதத்தையும்,  மதவாதத்தினையும் முன்னிலைப்படுத்தினார்கள். முஸ்லிம்களால், தமிழர்களால் தேசியத்துக்கு பாதிப்பு என்று கூறி வாக்குப் பெற்றார்கள். இடதுசாரத்துவ பயணத்தில் 60 ஆண்டுகளாக வாக்குகளைப் பெறுவதற்கு பயன்படுத்திய உத்தியையே தற்போது சஜித் பிரேமதாச பயன்படுத்துகின்றார்.

அவர், நாம் ஆட்சிப்பொறுப்பை ஏற்றவுடன் ஒன்பதாவும் திருத்தம் நீக்கப்படும் என்றும்,  தேசியக்கொடி மாற்றப்படும் என்று பிரசாரம் செய்கின்றார். உண்மையில் அவர் பாவம். அவருக்கு புதிய கருப்பொருட்கள் பிரசாரத்துக்கு தேவையாக உள்ளன. அவற்றை கண்டறியுமாறு நான் கோருகின்றேன்.

அதேநேரம்,  பிரித்தானியர்கள் பிரித்தாண்டார்கள். அவர்களிடமிருந்து நாட்டை மீட்பதற்காக ஒன்றிணைந்த தலைவர்கள் அதிகாரத்தைப்பெற்றுக்கொண்டதும் தங்களது அரசியல் நோக்கத்துக்காக மக்களை இனரீதியாக பிரித்தாள முயன்றார்கள். 1949இல் பிரஜாவுரிமைச் சட்டம் கொண்டுவரப்பட்டது.

மலைமக்கள் நாடற்றவர்களாக ஆக்கப்பட்டார்கள். அதனைத் தொடர்ந்து தமிழர்களுக்கென பெடரல் கட்சி உருவாக்கப்பட்டது. பின்னர் சிங்கள மட்டும் சட்டம் கொண்டுவரப்பட்டது. அதன்பின்னர் மொழிப் பிரச்சினை உருவானது. தொடர்ந்து சிங்கள, தமிழ், முஸ்லிம் கலவரங்கள் தோன்றின.

இதனால் 1977இல் வட்டுக்கோட்டையில் தீர்மானம் எடுக்கப்பட்டு வடக்கு, கிழக்கு இளைஞர்கள் தனிநாடு கோரி ஆயுதங்களைத் தூக்கினார்கள். 1978இல் பயங்கரவாத தடைச்சட்டம் கொண்டுவரப்பட்டு அடக்குமுறை ஆரம்பிக்கப்பட்டது. 1981இல் ஜே.ஆர்.,  லலித், காமினி, ரணில் உள்ளிட்டவர்கள் யாழ்ப்பாணத்தக்குச் சென்று யாழ்.நூலகத்துக்கு தீயிட்டார்கள். 1983இல் கறுப்பு ஜூலை கலவரத்தை மேற்கொண்டார்கள்.

இவ்வாறான பிரிவினைவாதச் செயற்பாடுகளால் பிரபாகரன் தற்கொலை குண்டுதாரிகளை உருவாக்கினார். அதுமட்டுமன்றி பின்னர் அந்தப்போராட்டம் சிவில் யுத்தமாக மாறியது. அது 2009 வரையில் நீடித்தது. அதன்பின்னர் சிறிது காலம் அமைதியாக இருந்தாலும் 2015இல் மலட்டுத்தன்மையாக்கும் ஆடைகள், கொத்துரொட்டி,  வைத்தியர்கள் இருப்பதாக கூறி முஸ்லிம்களுக்கு எதிராக செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டன.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இன்னும் பிரிவினையை உருவாக்க முயன்றன. ஆனால் தொடர்ந்தும் அவ்விதமாக பயணிக்க முடியாது. நாங்கள் வடக்கிற்கு ஒன்றையும்,  தெற்கிற்கு ஒன்றையும் கூறுவது கிடையாது. இந்த நாட்டில் அனைத்து மக்களும் சம அந்தஸ்துடன் வாழும் சூழலை உருவாக்குவது தான் எமது இலக்காகும்.

எம்மை பிரித்தாள்வதற்கு இனிமேலும் இடமளிக்க முடியாது. தற்போது சஜித் பிரேமதாசவைப் பாருங்கள்ரூபவ் சம்பிக்கவையும் வைத்திருக்கிறார். மறுபக்கத்தில் ஹக்கீம், ரிஷாத் ஆகியோரையும் வைத்திருகின்றார். மன்னார் செல்லும்போது சம்பிக்கவை ஒழிப்பார். தெற்கிற்கு செல்லும்போது ரிஷாத்தையும் ஹக்கீமையும் மறைப்பார்.

திஸ்ஸ அத்தநாயக்க கண்டிக்குச் சென்று நாம் தேசிய மக்கள் ஆட்சிக்கு வந்தால் கண்டிப் பெரஹர நிறுத்தப்படும் என்று கூறுகின்றார். சரித்தஹேரத்தும் பெரஹரவை நிறுத்தப்போவதாக கூறுகின்றார். ஹஜ் அல்லது ரமழான் ஒன்றைதான் கொண்டாட நாம் அனுமதிப்போம் என்றும் தாடி வளர்ப்பதற்கு இடமளிக்கப்போவதில்லை என்றும் ஹிஸ்புல்லாஹ் கூறுகின்றார்.

மறுபக்கத்தல் பாருங்கள், இனவாதத்தையும் மதவாதத்தையும் பிரதான கருப்பொருள்களாக கொண்ட பொதுஜன பெரமுன தற்போது எங்குள்ளது. பொதுஜன பெரமுனவின் பெரும்பான்மையானவர்களின் தலைவராக ரணில் இருக்கின்றார். சஜித்தின் அருகில் பீரிஸ்,  டலஸ் உள்ளிட்டவர்கள் இருக்கின்றார்கள்.

இப்போது இனவாதமும் மதவாதமும் எங்கே உறைந்திருக்கிறது என்பதை உணர முடிகிறது அல்லவா? தொடர்ந்தும் இவ்வாறு ஒழித்துமறைத்தும் இனவாதத்தையும், மதவாதத்தையும் முன்னிலைப்படுத்தும் அரசியல் செயற்பாடுகளுக்கு இடமளிக்க முடியாது. அனைத்து இன மக்களும் வேறுபாடின்றி ஒன்றிணைந்து ஒரு கொடியின் கீழ் எழுச்சியுறும் காலம் வந்துவிட்டது என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »