கொரோனாவால் மரணித்த முஸ்லிம் சமூகத்தினரின் உடல்கள் எரிக்கப்பட்டபோது, மௌனம் காத்தவர்கள் இன்று வாக்குக் கேட்டு அந்த சமூகத்தினரின் மத்தியில் செல்வதாக ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
காத்தான்குடி பகுதியில் நேற்று (15) இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அனுரகுமார திசாநாயக்க மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கும் தனக்கும் இடையில் வித்தியாசம் உள்ளது. அன்றைய காலத்தில் முஸ்லிம் சமூகத்திற்காக முன்னிற்பதற்கு அவர்கள் அச்சமடைந்தார்கள்.
அன்று அவ்வாறு இருந்தவர்கள் இன்று வாக்குகளை எதிர்பார்த்து முஸ்லிம்களிடத்தில் செல்கின்றனர்.
உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிவுறுத்தல்களைப் புறக்கணித்து, நாட்டில் முஸ்லிம் சமூகத்தினரின் ஜனாஸாக்களை எரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
முஸ்லிம் சமூகத்தைப் பாதிப்பிற்குள்ளாக்கும் வகையில் கோட்டாபய அரசாங்கம் செயற்பட்டது. முஸ்லிம் சமூகத்தைப் பழி வாங்கும் நோக்கத்திற்காகவே அவ்வாறு செயற்பட்டார்கள்.
இந்த தவறான செயற்பாடுகளுக்கு எதிராக ஐக்கிய மக்கள் கூட்டணி வீதிக்கு இறங்கிப் போராடியது.
எனவே இன, மத, வகுப்பு மற்றும் கட்சி பேதங்கள் இன்றி மனிதநேயத்தை முதன்மைப்படுத்தும் மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளுக்குக் கலந்துரையாடல்கள் மூலமும், இணக்கப்பாட்டோடும், ஒற்றுமையாகவும் தீர்வினை காண்கின்ற பயணங்களில் இணைந்துக் கொள்ளுமாறு ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.