Our Feeds


Wednesday, September 18, 2024

Zameera

நிற்கும் பக்கத்தை ஜெயிக்க வைப்பதே உண்மையான வீரம் - ஜீவன் தொண்டமான்


 ஜெயிக்கிற பக்கத்தில் நிற்பது வீரம் கிடையாது. நிற்கும் பக்கத்தை ஜெயிக்க வைப்பதே உண்மையான வீரம். செப்டம்பர் 21 ஆம் திகதி அதனை நாம் செய்துகாட்டுவோம். சவாலை ஏற்காது தப்பியோடிய தலைவர்கள் பக்கம் அல்ல, சவாலை ஏற்று மக்களை பாதுகாத்த தலைவர் பக்கமே நாம் நிற்கின்றோம் என இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

மலையகத்தை இனி காங்கிரஸ்தான் ஆளும், வேறு எவரும் இங்கு இருக்க முடியாது எனவும் அவர் கூறினார்.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும், சுயேட்சை வேட்பாளரான ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்து, பூண்டுலோயா நகர மைதானத்தில் 17.09.2024 அன்று மாலை மாபெரும் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும், நிதி செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரனினால் ஏற்பாடு செய்யப்பட்ட இக்கூட்டத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் அதன் பொதுச் செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான், தேசிய அமைப்பாளரும், முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினருமான ஏ.பி.சக்திவேல், பாராளுமன்ற உறுப்பினர் நிமல் பியதிஸ்ஸ, முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் உட்பட பலரும் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

இந்நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“.. எனக்கும், ரமேஷ் அண்ணனுக்கும் இடையில் 15 வருடகாலம் உறவு உள்ளது. உங்களுக்கு எல்லாம் கொத்மலை ரமேஸை தெரியுமா? ரமேஷ் அண்ணன் கொத்மலை ரமேஸாக இருக்கும்போதுதான் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. மக்கள் சேவைமூலம் அவர் மக்கள் மனங்களை வென்றுள்ளார். எனது தந்தை இன்று இருந்திருந்தால் இதனைக் கண்டு மகிழ்ச்சியடைந்திருப்பார். இந்த பூண்டுலோயா மண்ணில்தான் எமது முதலாவது அரசியல் மேடை பேச்சு இடம்பெற்றது.

எனது தந்தை இறந்திருந்தாலும், மக்கள் உறவுகளை எனக்கு தந்துவிட்டே சென்றுள்ளார். அந்த மக்கள் பலம் எனக்கு போதும்.

இன்று சம்பளம் பற்றி பலர் கதைக்கின்றனர், அடிப்படை நாள் சம்பளம் ஆயிரத்து 350 ரூபா என்ற அடிப்படையில் தற்போது சம்பளம் கணிக்கப்படுகின்றது. அடுத்த பத்தாம் திகதியாகும்போது அதிகரிக்கப்பட்ட சம்பளம்தான் எமது தொழிலாளர்களுக்கு கிடைக்கப்பெறும்.

ஆயிரத்து 700 ரூபா என்றீர்களே, ஆயிரத்து 350 ரூபாதானே கிடைக்கின்றது என சிலர் கூறுகின்றனர். நாம் பெருந்தோட்ட நிறுவனங்களின் நிபந்தனைகளுக்கு அடிபணிய முடியாது. எனவே, தொழிலாளர்களுக்கு சுமை ஏற்படாத வகையில் எஞ்சிய 350 ரூபாவையும் நிச்சயம் நாம் பெற்றுக்கொடுப்போம்.

தோட்டங்களை கிராமங்களாக்கும் திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படும். அது தொடர்பில் அரசியல் நோக்கில் எதிரணிகளால் முன்னெடுக்கப்படும் பிரசாரங்களை மக்கள் நம்பக்கூடாது. இது விடயத்தில் மக்கள் சுயமாக சிந்தித்து பார்த்தால் உண்மை தெரியவரும். காணி உரிமைதான் பிரதான பிரச்சினை. ஆதனை வென்றெடுத்துவிட்டால் அனைவரும் வீடுகளை அமைக்கக்கூடிய சூழ்நிலை உருவாகும். எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும் ஒரே வருடத்தில் வீட்டுப் பிரச்சினையை தீர்க்க முடியாது. ஆனால் காணி உரிமை கிடைத்துவிட்டால் நிச்சயம் மாற்றம் வரும்.

சலுகைகள்மூலம் அல்ல கல்வி உரிமையை வழங்குவதன்மூலம் மலையகத்தில் நாம் நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்துவோம். சிலர் மலையகத்தின் பெருமையை பற்றி பேசாமல், வறுமையை பற்றி மட்டுமே பேசுகின்றனர். எமக்கும் அடையாளம் உள்ளது. அந்த அடையத்தை நாம் நிச்சயம் பாதுகாப்போம். நாம் நன்றி உணர்வு உள்ள சமூகம் என்ற அடிப்படையில் செப்டம்பர் 21 ஆம் திகதி ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்குவோம்.

ஜெயிக்கிற பக்கம் நிக்கிறதுக்கு பெயர் வீரம் கிடையாது, நிக்கிற பக்கத்த ஜெயிக்க வைக்கிறதுதான் வீரம். ஆதனை நாம் செய்துகாட்டுவோம்..”

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »