Our Feeds


Monday, September 16, 2024

Zameera

தமிழ்ப்பேசும் மக்களின் வாக்குகளை தடுக்க முகவர்கள் களமிறக்கம் - ரிஷாட்


 தமிழ் பேசும் மக்களின் வாக்குகள் வெற்றி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்குச் செல்வதைத் தடுப்பதற்காக, முகவர்கள் களமிறக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.


ஐக்கிய மக்கள் கூட்டணியின் தலைவர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து, நேற்று (15) மட்டக்களப்பில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய போதே, இதனைத் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், 


"ஊழல்வாதிகளையும் இனவாதிகளையும் தோற்கடிப்பதற்காகவே, சஜித் பிரேமதாசவை ஆதரிக்கிறோம். தமிழ்மொழி பேசும் சிறுபான்மைச் சமூகங்களின் தலைமைகளும் சஜித் பிரேமதாசவையே ஆதரிக்கின்றன. மலையகக் கட்சிகள் மற்றும் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள தமிழ்,முஸ்லிம் கட்சிகள் எல்லாம் இனவாதத்தைத் தோற்கடிக்க ஒன்றுபட்டுள்ளன. 



கிளிநொச்சியிலும் யாழ்ப்பாணத்திலும் நடந்த கூட்டங்களில் பங்கேற்றுவிட்டுத்தான் மட்டக்களப்பு கூட்டத்துக்கு வந்தேன். அதிகளவான தமிழ் மக்கள் அக்கூட்டங்களில் பங்கேற்றிருந்தனர். இலங்கை தமிழரசுக் கட்சியும் சஜித் பிரேமதாசவையே ஆதரிக்கிறது. இதனால், அமோகமான தமிழ் வாக்குகள் சஜித்துக்கே கிடைக்கவுள்ளன. இதை மலினப்படுத்துவதற்காகவே இம்மாவட்டத்தைச் சேர்ந்த அரியநேந்திரனை பேரினவாதம் களமிறக்கியுள்ளது.



நமது இருப்புக்கள், பாதுகாப்பு மற்றும் உரிமைகளை ஒருசில ரூபாக்களுக்காக விற்க முடியுமா? எனவேதான், நிதானமாகச் சிந்திக்குமாறு கோருகிறோம். கடந்த தேர்தலிலும் எமது ஆலோசனைகளைப் புறக்கணித்து, ஒருசிலர் கோட்டாபயவுக்கு ஆதரவளித்தனர். என்ன நடந்தது? நடந்தவற்றை நினைத்துப்பாருங்கள். 



ஐந்து வருடங்களுக்கு ஆட்சியை ஒப்படைக்கப் பொருத்தமானவர் யார்? சிறுபான்மைத் தலைமைகள் எல்லாம் சஜித்தை ஆதரிப்பது ஏன்? எதிர்க்கட்சித் தலைவரான இவரது சேவைகள் நாடு முழுவதும் வியாபித்துள்ளன. இந்த நம்பிக்கையோடுதான் நாம் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »