தேர்தல் என்பது மிகப்பரந்துபட்ட செயன்முறையாகும். அதுகுறித்த சட்டங்கள் நடைமுறையில் இருக்கின்றன. எனவே சகல தரப்பினரும் சட்டத்துக்கு மதிப்பளித்து, தத்தமது கடமைகளை உரியவாறு நிறைவேற்றுவதன் ஊடாக அமைதியான முறையில் தேர்தல் நடைபெறுவதை உறுதிப்படுத்தமுடியும் என சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய தேர்தல் கண்காணிப்புக்குழுவின் தலைவர் ஃபுவட் தௌபீக் தெரிவித்துள்ளார்.
நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதித்தேர்தல் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் கண்காணிப்புப்பணிகளை முன்னெடுப்பதற்காக வழமைபோன்று இம்முறையும் ஐரோப்பிய ஒன்றியம், பொதுநலவாய அமைப்பு, சுயாதீன தேர்தல்களுக்கான ஆசிய வலையமைப்பு உள்ளடங்கலாக சர்வதேச நாடுகள் மற்றும் அமைப்புக்களின் தேர்தல் கண்காணிப்பாளர்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவினால் உத்தியோகபூர்வமாக அழைப்புவிடுக்கப்பட்டது.
அதற்கமைய நாட்டுக்கு வருகைதந்திருக்கும் அவர்கள், ஒன்பது மாகாணங்களிலும் பரந்துபட்ட முறையில் தமது தேர்தல் கண்காணிப்புப்பணிகளை முன்னெடுத்துவருகின்றனர்.
இவ்வாறானதொரு பின்னணியில் பிலிப்பைன்ஸ், பூட்டான், மாலைதீவு, நேபாளம், பங்களாதேஷ் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளைச்சேர்ந்த 7 சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்கள் புதன்கிழமை (18) நாட்டை வந்தடைந்துள்ளனர்.
அதன்படி வியாழக்கிழமை (17) பொலிஸார் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகளைச் சந்தித்து, ஜனாதிபதித்தேர்தல் மற்றும் அதனுடன் தொடர்புடைய சகல செயன்முறைகள் குறித்துக் கலந்துரையாடிய அவர்கள், அதனைத்தொடர்ந்து கொழும்பிலுள்ள தாஜ் சமுத்ரா ஹோட்டலில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றையும் நடத்தினர்.
அச்சந்திப்பில் கருத்துரைத்த மேற்குறிப்பிட்ட தேர்தல் கண்காணிப்புக்குழுவின் தலைவர் ஃபுவட் தௌபீக், இலங்கையின் அயலக மற்றும் நட்பு நாடுகள் என்ற ரீதியில் சுதந்திரமானதும், நியாயமானதுமான தேர்தல் நடைபெறுவதை உறுதிசெய்யும் நோக்கில் பரந்துபட்ட கண்காணிப்புப்பணிகளை முன்னெடுப்பதற்காகத் தாம் வருகைதந்திருப்பதாகத் தெரிவித்தார்.
குறிப்பாக கொழும்பு, யாழ்ப்பாணம், திருகோணமலை மாவட்டங்கள் உள்ளடங்கலாக நாடளாவிய ரீதியில் நிறுவப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளில் கண்காணிப்புப்பணிகளை முன்னெடுக்கவிருப்பதாகக் குறிப்பிட்ட அவர், நாளைய தினம் நடைபெறவுள்ள தேர்தலில் சகல வாக்களாளர்களும் எந்தவொரு வெளியகத்தரப்பினரதும் அழுத்தங்களின்றி வாக்களிக்கவேண்டும் என வலியுறுத்தினார்.
'தேர்தல் என்பது மிகப்பரந்துபட்ட செயன்முறையாகும். அதுகுறித்த சட்டங்கள் நடைமுறையில் இருக்கின்றன. எனவே சகல தரப்பினரும் சட்டத்துக்கு மதிப்பளித்து, தத்தமது கடமைகளை உரியவாறு நிறைவேற்றுவதன் ஊடாக அமைதியான முறையில் தேர்தல் நடைபெறுவதை உறுதிப்படுத்தமுடியும்' எனவும் அவர் குறிப்பிட்டார்.