"ஹிதே ஹய்ய" (மனதில் உறுதி) என்ற வேலைத்திட்டம் ஒன்று திட்டமிடப்பட்டுள்ளதாக சர்வஜன அதிகார ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.
மொனராகலை பகுதியில் இடம்பெற்ற மக்கள் பேரணியில் கலந்துகொண்டு கருத்து வௌியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்து கருத்து வௌியிட்ட அவர், "இதுவரையில் நாட்டு மக்களை நிவாரணங்களை வழங்கி ஏமாற்றி வந்தனர், முதலில் "ஜனசவிய" வந்தது, சமுர்த்தி வந்தது. பின்னர் அஸ்வெசும வந்தது, இருப்பினும், தற்போது உங்களது கண்கள் திறக்கப்பட்டுள்ளது. எனவேதான் நாங்கள் "ஹிதே ஹய்ய" திட்டத்தை முன்வைத்துள்ளோம். உங்களை பிச்சைக்காரனாக்கி, அரசியல்வாதியை பின்தொடர்ந்து செல்ல வைத்த அவ்வாறான திட்டங்களை முடித்துவிட்டு, உங்களது குடும்பத்தின் குறைந்தபட்ச வருமானம் 1 இலட்சம் என்ற ரீதியில் புதிய திட்டத்தை நான் கொண்டு வந்துள்ளேன். ஒரு இலட்சம் நிச்சயமாக உங்களுக்கு பெற்றுக்கொடுப்பதாக நான் உறுதியாக கூறுகிறேன். அதற்கான முறைமையும் வகுக்கப்பட்டு இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த சமுர்த்தி உத்தியோகத்தர்களை ஊக்குவிக்கும் வேலைத்திட்டம் ஒன்றை தயாரித்துள்ளோம். அவர்களின் வருமானத்தை இரட்டிப்பாக்க, மூன்று மடங்காக உயர்த்தும் திட்டத்தை கொண்டு வருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான், வாக்களிப்பு நிலையத்திற்கு சென்று வாக்குச்சீட்டில் 10ஆவதாக உள்ள நட்சத்திரம் சின்னத்திற்கு முன் புள்ளடி இடுங்கள். பிறகு உங்கள் அனைவருக்கும் வெற்றிகரமான எதிர்காலம் பிறக்கும், நட்சத்திரம் வானில் மிளிரும்" என்றார்.