Our Feeds


Sunday, September 1, 2024

SHAHNI RAMEES

ஆசியாவின் மிகப்பெரிய இயற்கைத் துறைமுகமான திருமலை துறைமுகத்தை வளப்படுத்துவோம் - ஜனாதிபதி தெரிவிப்பு

 


ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் சேருவாவில தொகுதி

அமைப்பாளர் நளின் குணவர்தன, திருகோணமலை கடவத் ஹதர பிரதேச சபையின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் மாநகர சபை உறுப்பினர் ரீ. பஹர்தீன் ஆகியோர் ஜனாதிபதிக்கு ஆதரவினை தெரிவித்துள்ளனர்.


ஆசியாவின் மிகப்பெரிய துறைமுகமான திருகோணமலை துறைமுகத்தை  வெற்றிடமாக வைத்திருந்த தேசிய தவறை சரிசெய்து, இந்திய அரசாங்கத்தின் ஆதரவுடன் துரிதமாக அபிவிருத்தி செய்து தேசிய பொருளாதாரத்துடன் இணைக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.


திருகோணமலை உவர்மலை விளையாட்டரங்கில் நேற்று சனிக்கிழமை  (31) நடைபெற்ற "இயலும்  ஸ்ரீலங்கா" வெற்றிப் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.


எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் பாராளுமன்ற உறுப்பினர் கபில நுவன் அத்துகோரள மற்றும் திருகோணமலை மாவட்ட ஐ.தே.க அமைப்பாளர் சந்தீப் சமரசிங்க ஆகியோரின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர்.


ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் சேருவாவில தொகுதி அமைப்பாளர் நளின் குணவர்தன, திருகோணமலை கடவத் ஹதர பிரதேச சபையின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் மாநகர சபை உறுப்பினர் ரீ. பஹர்தீன் ஆகியோர் இதன்போது ஜனாதிபதிக்கு ஆதரவாக இணைந்து கொண்டமையும் விசேட அம்சமாகும்.


நிலாவெளி தொடக்கம் திருகோணமலை வரையிலும் வெருகல் ஆறு தொடக்கம் அறுகம்பே வரையிலும் சுற்றுலா வலயங்களை உருவாக்கி பெருமளவிலான சுற்றுலாப் பயணிகளை திருகோணமலைக்கு வரவழைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தப் பொதுக் கூட்டத்தில் உரையாற்றுகையில்  குறிப்பிட்டார்.


திருகோணமலையை வலுசக்தி மையமாக அபிவிருத்தி செய்யும் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி, மீன்பிடித் தொழிலின் அபிவிருத்திக்கு மானியங்கள் வழங்கப்படுவதுடன், சிவில் பாதுகாப்புப் படைகளின் பிரச்சினையும் உடனடியாக தீர்க்கப்படும் என்றும் தெரிவித்தார்.


சேருவாவில விகாரையின் அபிவிருத்திக்கு ஆதரவளிப்பதாகத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, புதிய அரசாங்கத்தின் கீழ் உலகெங்கிலும் உள்ள இந்துக்களால் தெற்குக் கைலாசம் எனப் போற்றப்படும் திருக்கோணேஸ்வரம் கோயிலின் கோபுரத்தை புனரமைக்கும் பொறுப்பையும் தாம் ஏற்பதாக தெரிவித்தார். 


இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,


இந்த நாட்டின் இளைஞர்களுக்காக எமது நாட்டை அபிவிருத்தி செய்ய வேண்டும். அந்த முன்னேற்றம் ஏற்றுமதி பொருளாதாரத்தின் மூலம் மட்டுமே அடைய வேண்டும். அதற்காக விவசாயத்தை நவீனமயமாக்க வேண்டும். ஒரு ஹெக்டேருக்கு 08 மெட்ரிக் தொன் நெல் விளைச்சலைப் பெற முடியும். இதற்கான உதவிகளை வழங்குவோம்.


மேலும், மீன்பிடி தொழில் வளர்ச்சிக்கு மானியம் வழங்குவோம். இந்த நாட்டுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை 50 இலட்சமாக அதிகரிக்க வேண்டும். அதற்காக நிலாவெளியில் இருந்து திருகோணமலை வரையிலும் வெருகல் ஆறு  முதல் அறுகம்பே வரையிலும் சுற்றுலா வலயங்களை உருவாக்கி இந்த பிரதேசத்திற்கு அதிகளவான சுற்றுலாப் பயணிகளை வரவழைக்க திட்டமிட்டுள்ளோம்.


ஆசியாவிலேயே மிகப் பெரிய இயற்கைத் துறைமுகமாகத் திகழும் திருகோணமலைத் துறைமுகத்தை வெறுமனே வைத்திருக்கும் தேசிய தவறை, நாம் தற்போது சீர்செய்து வருகின்றோம். இதை மேம்படுத்த எந்த அரசாங்கமும் கவனம் செலுத்தவில்லை.


அதனால் தான் இந்தியாவுடன் இணைந்து திருகோணமலை அபிவிருத்தி வேலைத் திட்டத்தை ஆரம்பிக்கின்றோம். திருகோணமலையை வலுசக்தி மையமாக அபிவிருத்தி செய்து அந்த வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றோம்.


சாம்பூர் சூரிய சக்தி திட்டத்தையும் நடைமுறைப்படுத்தியுள்ளோம். இந்த மாகாணத்தில் ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான பெரிய முதலீட்டு வலயத்தை உருவாக்கி புதிய கைத்தொழில்களைக் கொண்டுவர பணியாற்றி வருகிறோம். ஹிங்குரக்கொட விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்கும் நாம் பணியாற்றி வருகிறோம். 


திருகோணமலைக்கு வந்தபோது மறைந்த ஆர்.   சம்பந்தன் அவர்களை  எனக்கு ஞாபகம் வருகிறது. திருகோணமலையை அபிவிருத்தி செய்ய வேண்டும் என்று எப்போதும் கூறிவந்தார். நான் அவருக்கு அந்த வாக்குறுதியை வழங்கினேன். அந்த வாக்குறுதியை அனைவரும் ஒன்றாக நிறைவேற்றுவோம்.


அத்துடன் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் செயற்பட்டு வருகின்றோம். செப்டம்பர் 21 ஆம் திகதி கேஸ் சிலிண்டருக்கு வாக்களித்து  இந்தத் வேலைத்திட்டத்தை வலுவாக முன்னெடுப்போம் என்று அனைவரையும் அழைக்கிறேன்.’’ என்றார்.


அமைச்சர் அலி சப்ரி


‘’இரண்டு வருடங்களுக்கு முன் நாம் அனைவரும் ஆதரவற்றவர்களாக இருந்தோம்.  எதிர்க்கட்சித் தலைவரிடம் அப்போது நாட்டைப் பொறுப்பேற்கச் சொன்னோம். பொருளாதாரத்தின் உண்மை நிலையை அறிந்து பொறுப்பேற்காமல் ஓடிவிட்டார். தப்பியோடியதுடன் மக்களை மேலும் மேலும் துன்பப்படுத்தினர்.


அப்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே அனைத்து பொறுப்புகளையும் சுமந்து தனிமனிதனாக இந்த நாட்டை மீளக் கட்டியெழுப்ப வழிவகுத்தவர். இதற்கு முன்பு நாங்கள் அவருக்கு ஆதரவு வழங்கவில்லை. அவருக்கு எதிராகவே செயல்பட்டோம். ஆனால் கடந்த இரண்டு வருடங்களில் அவருடன் பணிபுரிந்தபோது, அவருடைய ஆளுமை, சர்வதேச உறவுகள் மற்றும் பொருளாதாரக் கண்ணோட்டம் பற்றிய அறிவைப் புரிந்துகொண்டோம். அவர் இந்நாட்டின் சிங்கள, தமிழ், முஸ்லிம் என அனைத்து மக்களையும் பாகுபாடின்றி நடத்தும் விதம் இந்த நாட்டின் தலைமைத்துவத்திற்கு மிகவும் முக்கியமான பண்பாகும்.


ஒரு குறிப்பிட்ட முகநூல் பக்கத்தில் இப்படி ஒரு பதிவு இருந்தது. ‘இந்த செப்டெம்பரில் நீங்கள் ரணில் விக்ரமசிங்கவுக்கு வாக்களித்தால் அவர்தான் ஜனாதிபதி. ஆனால், வேறு யாருக்காவது வாக்களித்தால், அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் அவரே மீண்டும் நாட்டைப் பொறுப்பேற்க நேரிடும்’ இந்த நாட்டை வேறு யாராலும் முன்னோக்கிக் கொண்டு செல்ல செய்ய முடியாது என்பதே அதன் அர்த்தம்.


முன்னாள்  இராஜாங்க அமைச்சர் புத்திர சிகாமணி


இந்தத் தேர்தல் காலத்தில் பலரும் பல வாக்குறுதிகளை வழங்குகின்றனர். வரியை முழுமையாக இல்லாமல் செய்வதாக கூறுகின்றனர். இதனை செய்ய முடியுமா என்பதை சிந்திக்க வேண்டும். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, வங்குரோத்தடைந்த நாட்டை 02 வருடங்களில் மீட்டு நாம் நிம்மதியாக வாழக் கூடிய ஒரு ஆரம்பத்தை தந்திருக்கிறார். அவர் இந்த நாட்டில் தொடர்ந்து ஆட்சியில் இருந்தால் மாத்திரமே இந்த நாடு முன்னேறும். நாங்கள் கேஸ் சிலிண்டருக்கும், பால்மாவுக்கும் எரிபொருளுக்கும் வரிசையில் இருந்த காலத்தை யாரும் மறந்திருக்கமாட்டார்கள்.  


நிலைமையை மாற்றியவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க. இன்று தேர்தலில் போட்டியிடும் எவருக்கும் அன்று  ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியில் இருந்து இந்நாட்டை மீட்டெடுக்க முடியவில்லை. ரணில் விக்ரமசிங்கவிற்கு அனுபவம், தகுதி இருக்கின்றது. வேறு எந்த வேட்பாளருக்கும் அந்த சக்தி இல்லை. எனவே தமிழ் வேட்பாளர் என்று உங்களது வாக்குகளை சிதறடிக்காமல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு வாக்களித்து அவரை வெற்றிபெற்ச் செய்வோம்.’’ என்றார்.


பாராளுமன்ற உறுப்பினர் கபில நுவன் அத்துகோரள,


'’கடந்த காலத்தில் பொருளாதாரம் வங்குரோத்தானபோது ஜே.வி.பி. என்ன செய்துகொண்டிருந்த் என்பதை நினைத்துப் பாருங்கள். கொவிட் தொற்றுநோய் மற்றும் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மக்கள் ஜே.வி.பியின் குறுகிய அரசியல் நோக்கங்களினால் மேலும் பாதிக்கப்பட்டனர்.


அரச சேவை பெறும் அப்பாவி மக்கள் ஜே.வி.பியின் வேலைநிறுத்தம் போராட்டங்களினால் நிர்க்கதியான பல சந்தர்ப்பங்கள் இருக்கின்றன. பொதுமக்கள் வைத்தியசாலைகளுக்கும், மாணவர்கள் பாடசாலைகளுக்கும் சென்றுவிட்டு திரும்பி வந்த பல நாட்கள் இருந்தன. இந்த நாட்டு மக்களுக்காக என்று கூறி அவர்கள் செய்ததெல்லாம் மக்களை மேலும் ஒடுக்கியது. 


குறைந்த பட்சம் அந்த ஐக்கிய மக்கள் சக்திக்கும், ஜே.வி.பிக்கும் வாக்கு கேட்கும் உரிமை கூட இல்லை. அதற்கான உரிமை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு மாத்திரமே உள்ளது. இந்த நாடு மீண்டும் பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்தால் அதை மீண்டும் ரணில் விக்ரமசிங்கவே பொறுப்பெடுக்க வேண்டும். அதற்கு வேறு தலைவர் இல்லை என்பதைக் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.’’ என்றார்.


முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்தித் சமரசிங்க


‘’இரண்டு ஆண்டுகளுக்கு முன், மீனவர்கள் கடலுக்கு செல்ல முடியாமல் இருந்த். டீசல், மண்ணெண்ணெய் இருக்கவில்லை. விவசாயம் செய்ய உரம் இருக்கவில்லை. பிள்ளைகள் பாடசாலை செல்ல முடியாதிருந்தது. மின்சாரம் இல்லை. இவ்வாறானதொரு தருணத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த நாட்டைக் பொறுப்பேற்றார். ஆனால் இன்று அனைத்து சவால்களையும் வெற்றிகொண்டார். நாட்டின் பொருளாதாரம் ஸ்திரப்படுத்தப்பட்டது. சுமூகமாக வாழக்கூடிய நிலைக்கு நாட்டை முன்னேற்றினார். நாட்டின் மீதுள்ள அக்கறையால் நாம் அனைவரும் கட்சி நிற, சாதி பேதமின்றி ஜனாதிபதிக்கு ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளோம். இந்த நாட்டை பாதுகாத்தால் தான் அரசியல் செய்ய முடியும். அது மட்டுமின்றி இந்த நாடு பாதுகாக்கப்பட்டால் தான் உங்கள் பிள்ளைகள் படித்து டாக்டர், இன்ஜினியர் ஆக முடியும்.


மேலும் அவரது "திருகோணமலை அபிவிருத்தித் திட்டத்தின்" கீழ் இம்மாவட்டத்தில் விவசாயம், சுயதொழில், சுற்றுலா, மீன்பிடி போன்ற அனைத்து துறைகளும் அபிவிருத்தி செய்யப்படும். இரண்டு வருடங்களில் அவர் செய்தவற்றின் அடிப்படையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை நாம் நம்ப முடியும். எனவே, செப்டெம்பர் 21ஆம் திகதி கேஸ் சிலிண்டருக்கு வாக்களித்து அவரை மீண்டும் இந்த நாட்டின் ஜனாதிபதியாக தெரிவுசெய்ய வேண்டும்.’’ என்றார்.


இராஜாங்க அமைச்சர் ச. வியாழேந்திரன்


இரண்டு வருடங்களுக்கு முன்னர் என்ன நடந்தது என்பதை அனைவரும் அறிவோம். ரணில் விக்ரமசிங்கவுக்கு நாம் ஏன் வாக்களிக்க வேண்டும்? வீடுகளில் நிம்மதியாக உறங்க வேண்டிய மக்கள் மின்சாரம் தடைப்பட்டு வீதிகளுக்கு வந்தார்கள். கேஸ், எரிபொருள், மண்ணென்ணெய் வேண்டி வீதிக்கு வந்தார்கள். இவ்வாறு ஒரு வரிசை கலாசாரம் ஏற்பட்டது. 


மிகப் பொருளாதார வீழ்ச்சிக்கு எமது நாடு தள்ளப்பட்டது. நாட்டைப் பொறுப்பேற்குமாறு முன்னாள் ஜனாதிபதி கோரிய போது சிலர் ஓடி ஒளிந்தனர். சஜித் பிரேதமதாஸவும் அநுரவும் காதல் கடிதம் எழுதுவது போல் முன்னாள் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதிக்கொண்டிருந்தார்கள். யாருமே நாட்டைப் பொறுப்பேற்க முன்வரவில்லை. குறைந்தது  25 வருடங்களுக்கு பின்னரே இந்த நாடு ஓரளவு சுவாசிக்கும் என்று சிலர் கூறினர். இந்த பொருளாதார பிரச்சினைக்கு தீர்வுகாண முடியாது என்றனர். 


சிம்பாப்வே, எதியோப்பியா போன்ற நாடுகளை உதாரணமாக எடுத்துக் காட்டலாம். அவ்வாறான சூழலில் இந்த நாட்டைப் பொறுப்பேற்று மிகக் குறுகிய காலத்தில் இந்த நாட்டை மீட்டெடுத்த எமது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னெடுத்த மிகச் சரியான பொருளாதார வேலைத்திட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுக்க அவரை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியடையச் செய்வொம்.’’ என்றார். 


ஐக்கிய தேசிய கட்சியின் மூதூர்  ஒருங்கிணைப்பாளர் ஏ.பீ அமீன் 


‘’இந்நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் போன்று அனைத்து இன, மத மக்களும் வாழுகின்ற திருகோணமலை மாவட்டத்திலும் நாம் அனைவரும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு வழங்க வேண்டும். அன்று முழு நாட்டு மக்களும் துன்பப்பட்டபோது எம்மை பாதுகாக்க எந்த தலைவரும் முன்வரவில்லை.  


ஆனால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தைரியமாக இந்நாட்டைப் பொறுப்பேற்று எம்மை பாதுகாத்து, எல்லா மக்களும் மகிழ்ச்சியாகவும் சுபீட்சமாகவும் நிம்மதியாகவும் இன்று வாழக் கூடிய சூழலை உருவாக்கினார். எனவே அவர் கொண்டு செல்லும் வேலைத்திட்டத்தை தொடர்ந்தும் இந்நாட்டில் முன்னெடுக்க கேஸ் சிலிண்டருக்கு வாக்களித்து, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களை மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு செய்யமாறு உங்கள் அனைவரிடமும் கேட்டுக்கொள்கிறேன்.’’ என்றார்.


கிழக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் திருமதி ஆரியவதி கலப்பத்தி


நாம் சரியாகச் செயற்படாவிட்டால் பங்களாதேஷுக்கு நேர்ந்த கதி இந்த நாட்டுக்கும் ஏற்படும். அன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டை பொறுப்பேற்காமல்  இருந்திருந்தால் எமக்கு நாடு இருந்திருக்காது.


மன இறுக்கத்துடன் இந்த நிகழ்வில் கலந்து கொள்கிறேன். என் மகன் மரணித்து பத்து நாட்கள் ஆகிறது. வேறு எந்த தாயும் இவ்வாறு வரமாட்டார். நாட்டின் நலனுக்காகவே இன்று நான் இங்கு வந்துள்ளேன். இந்தப் பயணம் வெற்றியடைய வேண்டுமானால், சரியான தலைவர் தேவை. அந்த தலைவர் தான் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க.’’ என்றார்.


மகாசங்கத்தினர் தலைமையிலான சர்வ மத தலைவர்கள், முன்னாள் இராஜாங்க அமைச்சர் புத்திர சிகாமணி, ஐக்கிய தேசியக் கட்சியின் மூதூர் இணைப்பாளர் ஏ.பி.அமீன், பொதுஜன ஐக்கிய முன்னணி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட  பல்வேறு கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தி உள்ளூராட்சி மன்றங்களின் முன்னாள் பிரதிநிதிகள் மற்றும் பெருந்திரளான மக்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »