தம்மைத் தவிர மற்ற அனைத்து ஜனாதிபதி வேட்பாளர்களும் தம்மைச் சூழவுள்ள அரசியல் குழுக்களால் தமது தேர்தல் விஞ்ஞாபனங்களில் உள்ள கொள்கைகளை நடைமுறைப்படுத்த முடியாது என சர்வஜன அதிகார ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.
காலியில் நடைபெற்ற சிநேகபூர்வ சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அங்கு மேலும் கருத்து தெரிவித்த திலித் ஜயவீர,
"யாரும் எதிர்க்க முடியாத வெற்றிக்கான பயணத்தையும் நான் பிரதிநிதித்துவப்படுத்துகிறேன். ஏனெனில் சுதந்திரத்திற்குப் பின்னர் இலங்கையில் வரலாற்று ரீதியாக வளர்ந்த பாரம்பரிய அரசியலில் ஏற்பட்ட அனைத்து தவறுகளையும் சரி செய்யக்கூடிய ஒரு மூலோபாய வேலைத்திட்டத்தை உருவாக்குவதற்கு நாங்கள் மிகவும் கடினமாக உழைத்துள்ளோம். உலகின் பிற நாடுகள் இந்த சூழ்நிலையை எவ்வாறு எதிர்கொண்டன, அவர்கள் என்ன மூலோபாயங்களை பயன்படுத்தினார்கள், ஒரு தேசமாக நாம் எங்கு தவறு செய்தோம், இவை அனைத்தையும் பார்த்து இது அமைக்கப்பட்டுள்ளது''. என குறிப்பிட்டார்.