தேர்தல் பிரசாரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ள
காலப்பகுதியில் வீட்டில் சமையல் எரிவாயு (சிலிண்டர்) தீர்ந்துவிட்டால், ஒரு சிலிண்டரை எடுத்துச் செல்வதில் பிரச்சினை இல்லை என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.கொழும்பில் நேற்று (11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.
தேர்தல் தினத்தன்று தனிநபர் ஒருவர் வாக்குச் சின்னத்தைக் காட்டி வீதியில் நடமாட முடியும் என்றாலும், ஊர்வலமாகச் செல்வதைத் தடை செய்யும் திறன் பொலிஸாருக்கு உண்டு என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் யாராவது ஒருவர் சைக்கிளில் சிலிண்டரை கட்டிக்கொண்டு செல்வதாலோ அல்லது நட்சத்திரம் அல்லது திசைகாட்டியை வீதியில் காண்பித்தாலோ அது தேர்தல் சட்டத்தை மீறும் செயலா என ஊடகவியலாளர் ஒருவர் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் முதல் வாக்களிப்பு முடிவுகளை இரவு 11 மணியளவில் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தேர்தல் செலவுகள் ஒழுங்குமுறை சட்டத்தின்படி கூட்டங்களில் கலந்துகொள்ளும் பேச்சாளர்களின் செலவுகளும் உள்ளடக்கப்பட வேண்டும் எனவும் முன்னாள் தலைவர் தெரிவித்தார்.
கொடுப்பனவுகள் மற்றும் சலுகைகளுக்காக மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்றார்.