Our Feeds


Wednesday, September 4, 2024

SHAHNI RAMEES

எனது உயிருக்கு பாதிப்பு ஏற்பட்டால் ரணில் விக்ரமசிங்கவே பொறுப்புக்கூற வேண்டும் - முஜிபுர் ரஹ்மான்

 

எனது அரசியல் நடவடிக்கையை பொறுத்துக்கொள்ள முடியாமல் என்னை சிறையில் அடைப்பதற்கு அல்லது எனது  உயிருக்கு பாதிப்பை ஏற்படுத்த சதித்திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனது உயிருக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் ரணில் விக்ரமசிங்கவே அதற்கு பொறுப்புக் கூறவேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (4) விசேட கூற்றொன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,




கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவும் அஸ்லம் என்ற நபரும் வெலிகடை சிறைச்சாலைக்கு சென்று, 5 வருடங்களாக குற்றச் செயல் ஒன்றுக்காக சந்தேக நபராக இருக்கும் ஒருவரை சந்தித்துள்ளனர். இவ்வாறு குறித்த சந்தேக நபரிடம், அவரை பிணையில் வெளியில் எடுப்பதாகவும் இன்னும் பல்வேறு வரப்பிரசாதங்களை வழங்குவதாகவும் தெரிவித்து, எனக்கு எதிராக வாக்குமூலம் ஒன்றை வழங்குமாறு கேட்டுள்ளார்கள்.

அதாவது சந்தேகத்தின் பேரில் 5 வருடங்கள் சிறையில் இருக்கும் குறித்த நபரின் குற்றச்செயலுக்கு, எனக்கும் தொடர்பு இருப்பதாக தெரிவித்தே இந்த வாக்குமூலத்தை அவர்கள் கேட்டுள்ளனர். மனுஷ நாணயக்கார குறித்த சந்தேக நபரை சந்தித்தமை தொடர்பில் என்னிடம் ஆதரம் இருக்கிறது.

சஜித் பிரேமதாசவின் வெற்றிக்காக கடந்த காலங்களில் நான் முன்னிலையில் இருந்து செயற்பட்டு வருபவன் என்பது யாரும் அறிந்த விடயம். இதனை தாங்கிக்கொள்ள முடியாமல், என்னை எப்படியாவது ஏதாவது ஒரு பிரச்சினைக்குள் சிக்கவைத்து, என்னை சிறையில் அடைப்பதற்கு அல்லது எனது உயிருக்கு பாதிப்பை ஏற்படுத்துவதற்கு சதித்திட்டம் ஒன்று இடம்பெற்று வருகிறது என்பது எனக்கு புலனாகிறது.

இந்த விடயங்கள் தொடர்பில்  போதுமான ஆதாரங்களை வைத்துக்கொண்டே இதனை தெரிவிக்கிறேன். இது தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவில் முறைப்பாடு செய்து, இந்த ஆதாரங்களை சமர்ப்பிக்க இருக்கிறேன். 

எனது உயிருக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் அதற்கு ரணில் விக்ரமசிங்க பொறுப்பு கூறவேண்டும் என்பதை நான் பகிரங்கமாக தெரிவிக்கிறேன். ரணில் விக்ரமசிங்க போன்ற ஒருவரை 15 வருடங்களாக அவரை இந்த நாட்டின் தலைவராக்க ஐக்கிய தேசிய கட்சிக்கு எமது வாழ்க்கையை அர்ப்பணித்து, பணியாற்றியமைக்காக நான் வெட்கப்படுகிறேன்.

தேர்தல் ஆரம்பிக்கும்போதே சட்டத்தின் பிரகாரம் தேர்தல் நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என நான் ஆரம்பித்திலேயே ஜனாதிபதிக்கு தெரிவித்தேன். ஆனால் தற்போது அவர் செய்ய முடியுமான அனைத்து மோசமான நடவடிக்கைகளையும் செய்து வருகிறார்.

அதேநேரம் மனுஷ நாணயக்கார பாரிய மோசடி காரர். அவர் 21ஆம் திகதிக்கு பின்னர் கைதுசெய்யப்பட்டு சிறைப்படுத்தப்படுவார். ஏனெனில், அரபு நாடுகளுக்கு வீட்டுப்பணிப்பெண் தொழிலுக்கு செல்லும் பெண்கள் ஒவ்வொருவரிடம் இருந்தும் 75ஆயிரம் ரூபா பெற்றுக்கொண்டுள்ளார்.

அதேபோன்று இஸ்ரேலுக்கு தொழிலாளர்களை அனுப்புவதற்கு 90ஆயிரம் ரூபா பெற்றுக்கொண்டுள்ளார். கடந்த இரண்டு வருடங்களில் இவர் சம்பாதித்த அளவு  ராஜபக்ஷ குடும்பத்தினர் சம்பாதிருக்காது என்றே நான் நினைக்கிறேன். கொழும்பில் அவருக்கு இருக்கும் கட்டிடங்கள் காணி தொடர்பில் எங்களுக்கு தெரியும். அதனால் நான் சிறைக்கு சென்றோ இல்லையோ, இந்த நாட்டு அப்பாவி பெண்களிடம் மோசடியாக பணம் பெற்றுக்கொண்டமைக்காக அவர் சிறைக்கு செல்வார்.

கடந்த 30 வருடங்களாக நான் கொழும்பு மாவட்டத்தில் அரசியல் செய்து வருகிறேன். இதுவரை எனக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு இல்லை. எதிர்க்கட்சி அரசியல்வாதிகளுக்கு எந்த சந்தர்ப்பத்திலாவது நெருக்கடிகளை காெடுத்திருக்கிறதா என்பதை அவர்களிடம் கேட்டுப்பார்க்கலாம். நாங்கள் அனைவருடனும் சிநேகபூர்வமான முறையிலேயே அரசியல் செய்கிறோம்.

எங்களுக்கு எதிராக மோசடி குற்றச்சாட்டும் இல்லை. நாங்கள் தூய்மையான அரசியலையே செய்து வருகிறோம். அமைச்சுப்பதவி வழங்குவதாக ஜனாதிபதி என்னையும் அழைத்தார். நான் அதற்கு இனங்கவில்லை. அவரின் தீர்மானம் பிழை. அதனால் அவரை அரசியல் ரீதியில் நான் பகிரங்கமாக விமர்சித்தேன்.

அது எனது அரசியல் உரிமை. இதனை தாங்கிக்கொள்ள முடியாமல் எனக்கு எதிராக செயற்பட்டு. என்னை சிறைப்படுத்த முற்படுவதாக இருந்தால், இவர்களின் அரசியல் நிலை என்ன? இவ்வாறான மாற்றத்தை ஏற்படுத்தவா ரணில் விக்ரமசிங்க அதிகாரத்தை கேட்கிறார்? இதுவா அவரின் கெளரவமான அரசியல்.

அதனால் எனக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் சதித்திட்டம் தொடர்பில் நீதி கிடைக்க வேண்டும். குற்றப்புலனாய்வு பிரிவு பொலிஸார் இது தொடர்பில் தேடிப்பார்க்க வேண்டும். பாராளுமன்ற உறுப்பினர் என்வகையில் எனது பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு சபாநாயகரை கேட்டுக்கொள்கிறேன் என்றார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »