தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் வினாத்தாளில் சில கேள்விகளை கசிந்தமைக்காக குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட மஹரகம தேசிய கல்வி நிறுவகத்தின் (திட்டமிடல் பிரிவு) பணிப்பாளரை எதிர்வரும் ஒக்டோபர் 07ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கைதுசெய்யப்பட்ட 57 வயதுடைய நபர் கடுவெல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் வினாத்தாள்களை தயாரித்த குழுவில் அங்கம் வகித்த சந்தேகநபர், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் வினாத்தாள்கள் தொடர்பான இரகசிய தகவல்களை கசிய விட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டார்.
பரீட்சையின் வினாத்தாள் கசிந்துள்ளதாக கூறப்பட்டதை அடுத்து, பரீட்சைகள் திணைக்களத்தினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. பின்னர், முதற்கட்ட விசாரணை அறிக்கை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் (CID) ஒப்படைக்கப்பட்டது. அதற்கமைய குற்றப்புலனாய்வு திணைக்களம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.