கடந்த காலத்தில் நாங்கள் தவறு செய்தோம் என்பதை ஒப்புக்கொள்கிறேன், ஆனால் அவற்றை மறந்து இப்போது பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவளிக்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வலப்பனையில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
அரசாங்கத் துறையை நவீனமயமாக்குவதற்கும் பலப்படுத்துவதற்கும் பொதுஜன பெரமுன மட்டுமே திறன் கொண்டது என்றும் கடந்த கால மனக்கசப்புகள் காரணமாக வேறு கட்சியில் சேரவோ அல்லது வேறு வேட்பாளருக்கு வாக்களிக்கவோ யாரேனும் கருதினால், மீண்டும் எங்கள் கட்சியில் சேர உங்களை அழைக்கிறேன்.
கடந்த காலத்தில் நாங்கள் தவறு செய்தோம் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். அவற்றைச் சரிசெய்வதற்கு ஒன்றிணைந்து செயல்படுவோம்.
“இன்று, சில தலைவர்கள் வரிசைகளை அகற்றிவிட்டதாக மீண்டும் வலியுறுத்துகிறார்கள், ஆனால் கடவுச்சீட்டு வரிசை பிரச்சினை தீர்க்கப்படாமல் உள்ளது. அவர்கள் சுற்றுலா பற்றி பேசுகிறார்கள் ஆனால் விசா வழங்குவது தொடர்பான பிரச்சினையை இன்னும் தீர்க்கவில்லை. இந்த அமைப்புகள் நவீனப்படுத்தப்பட வேண்டும்”என்றும் அவர் தெரிவித்துள்ளார்