Our Feeds


Tuesday, September 3, 2024

Sri Lanka

வடக்கு அபிவிருத்திக்கு தனியான ஜனாதிபதி செயலணி - சஜித் பிரேமதாச!


‘‘யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடகிழக்கு பிரதேசத்தில் வாழ்கின்ற மக்களின் வாழ்வாதாரம், அபிவிருத்தி, மற்றும் பிரதேச பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். வட பிரதேசத்துக்காக தனியான ஜனாதிபதி செயலணி ஒன்றும் நிறுவப்படும். ஏனைய பிரதேசங்களுக்கும் மாகாண அடிப்படையில் செயலணிகள் அமைக்கப்படும். இந்த வேலைத்திட்டத்தின் ஊடாக யாழ். தேர்தல் மாவட்டத்தில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி நிர்வாக மாவட்டங்களுக்கு இரண்டு உப செயலணிகளும் அமைக்கப்பட்டு, மாதாந்த வடக்கின் அபிவிருத்தி தொடர்பான தகவல்களை பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வேன்’’ என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச மற்றும் சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளர் மு.சந்திரகுமார் ஆகியோருக்கிடையே நேற்று (02) சமத்துவக் கட்சியின் கிளிநொச்சி தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற விசேட சந்திப்பின் போது கருத்துத் தெரிவிக்கையிலயே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், பெண்களை தலைமையாகக் கொண்ட குடும்பங்கள் நுண் நிதி கடன் பொறிக்குள் சிக்கியிருக்கின்றன. காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் இதுவரை எந்தத் தீர்வும் இல்லை. யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட அதிகமான குடும்பங்கள் உள்ளன. தானும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட ஒரு குடும்ப உறுப்பினர் என்ற அடிப்படையில் இந்தப் பிரதேசங்களின் அபிவிருத்தி தொடர்பில் கவனம் செலுத்துவேன். இளைஞர் யுவதிகளின் பிரச்சினைகள் உட்பட தொழிலில்லாப் பிரச்சினைக்கும் தீர்வைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுப்பேன்.

வடகிழக்கு மக்களை பாதுகாக்கும் வகையிலான முற்போக்கான பல வேலைத் திட்டங்களை முன்னெடுப்போம். ஒரே நாட்டுக்குள் அதிகாரப் பகிர்வை மேற்கொண்டு, 13ஆவது அரசிய லமைப்பு திருத்தத்தை அடிப்படையாகக் கொண்டு செயற்பாடுகளை முன்னெடுப்பதோடு, மாகாண சபைகளுக்கு காணப்படுகின்ற அதிகாரங்களை மத்திய அரசாங்கம் பறித்துக் கொள்கின்ற செயற்பாட்டுக்கு இடமளிக்காது, குறுகிய காலத்துக்குள் மாகாண சபை தேர்தலை நடத்துவோம்.

மேலும் நன்னீர் மீன் பிடி, கரைவலை மீன்பிடி உள்ளிட்ட பல கைத்தொழில் வாய்ப்புகளின் ஊடாக அபிவிருத்தியை நோக்கி செல்ல முடியும். இதற்கான முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதோடு, இந்தப் பிரதேசங்களை அபிவிருத்தியடைந்த பிரதேசங்களாக மாற்ற நடவடிக்கை எடுப்பேன்’’ என்றும் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »