எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஈரோஸ் ஜனநாயக முன்னணி சஜித் பிரேமதாசவை ஆதரிக்க முடிவு செய்திருப்பதாக ஈரோஸ் ஜனநாயக முன்னணி விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.
குறித்த ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்ட்டுள்ளதாவது,
ஈரோஸ் ஜனநாயக முன்னணி இலங்கையில் பதிவு செய்யப்பட்ட ஒரு அரசியல் கட்சியாகும். இக்கட்சி ஈரோஸ் அமைப்பின் வழிவந்த உறுப்பினர்களால் உருவாக்கப்பட்டதாகும்.
இந்நிலையில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கட்சியின் பொதுக்குழு கட்சி பல மட்டங்களில் உறுப்பினர்கள், பிராந்திய மட்ட குழுக்கள், கட்சி நலன் விரும்பிகள் மற்றும் கட்சி முன்னணிக் குழுக்களுடன் கலந்துரையாடியதன் அடிப்படையில் தனது நிலைப்பாட்டை முன்வைத்திருக்கிறது.
எமது கட்சியானது ஒருபிராந்தியத்தை மையப்படுத்தி செயற்படும் அமைப்பு அல்ல. நாம் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தை இணைத்துச் செயற்படும் அரசியல் கட்சி என்ற அடிப்படையில் அனைத்து மக்களின் நலன்களையும் கருத்துக்களையும் முன்னிறுத்திய நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில் மக்களின் தேவைகள் உரிமைகளை முன்னிலைப்படுத்தி மக்களின் கருத்துகளுக்கமைந்ததாகவே எமது முடிவு அமைய வேண்டியது இன்றியமையாதது. குறிப்பாக, மலையகப் பிராந்தியங்களின் நலன்கள் எமது முடிவின் ஒரு கனதியான விடயமாக உள்ளது என்று அந்த அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது.
கல்லடி செய்தியாளர்