Our Feeds


Monday, September 16, 2024

Zameera

மக்களின் வாழ்க்கைச் சுமைக்கான போராட்டம் அடுத்த வருடம் முடிவுக்கு கொண்டு வரப்படும்


 மக்களின் வாழ்க்கைச் சுமைக்கான போராட்டத்தை அடுத்த வருடத்தில் முடிவுக்கு கொண்டுவருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.


பொருளாதாரத்தை முறையாக முகாமைத்துவம் செய்து, ரூபா மேலும் வலுவடையச் செய்து, பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பாதுகாத்து மக்களுக்கு நிவாரணம் வழங்க முடியும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

 

தெஹிவளையில் நேற்று (15) பிற்பகல் இடம்பெற்ற ‘ரணிலால் இயலும்’ வெற்றிப் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டின் வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை மீட்க கடினமான தீர்மானங்களை எடுக்க வேண்டியுள்ளதாகவும் இறுதியில் நிவாரணம் கிடைக்கும் என்றும் சுட்டிக்காட்டினார்.

புதிய பொருளாதாரம், புதிய நாடு மற்றும் புதிய அரசியல் முறைமையைக் கட்டியெழுப்பும் வேலைத் திட்டத்தை தாம் ஏற்கனவே ஆரம்பித்துள்ளதாக தெரிவித்தார். புதிய பொருளாதாரத்தை நாட்டுக்கு வழங்குவதே தனது தேவை எனத் தெரிவித்த ஜனாதிபதி, அதனை சஜித்துக்கோ அல்லது அனுரவுக்கோ செய்ய முடியாது எனவும் தெரிவித்தார்.


இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் என்னுடன் 38 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். ஆனால் இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஜனாதிபதி அல்லது பிரதமர் பதவியை ஏற்க யாரும் முன்வரவில்லை. அந்த பதவிக்கு வேறு யாரும் இல்லாததால் நான் அப்போது பிரதமரானேன்.


அரசியல்வாதிகளாகிய எங்களுக்கு இரண்டு கடமைகள் உள்ளன. முதலில் நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டும். இரண்டாவது, மக்களை வாழ வைக்க வேண்டும். ஆனால் அப்போது யாரும் அந்தப் பொறுப்பை ஏற்கத் தயாராக இருக்கவில்லை. அவர்களுக்கு எந்த தேவையும் இருக்கவில்லை.


இந்நாட்டு மக்களுக்கு உணவு, மருந்து, எரிபொருள், எரிவாயு போன்றவற்றை வழங்க முடியாத நிலை இருந்த போது, அரசியல்வாதிகள் வருந்தவில்லையா? இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டிய கடமை தங்களுக்கு இருப்பதாக நினைக்கவில்லையா? அன்று மக்கள் படும் இன்னல்களை புரிந்து கொள்ளாத சஜித்தும் அநுரவும் இன்று பதவியை கேட்கின்றனர்.


இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இன்று நாடு ஸ்திரமாக உள்ளது.

இதனால், அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை குறைந்து வருகிறது. ஆனால் மக்களுக்கு இன்னும் பிரச்சினைகள் உள்ளன. பல குடும்பங்களில் வருமானத்துக்கும் செலவுக்கும் இடையே பெரிய போராட்டமே நடக்கின்றது எனலாம். அந்த போராட்டத்தை முடிக்கவே நான் முயற்சிக்கிறேன். ரூபாவைத் தொடர்ந்து வலுப்படுத்துவதால் அடுத்த ஆண்டு அந்த போராட்டத்தில் நாம் வெற்றி பெறுவோம் என்று எதிர்பார்க்கிறோம்.


நம் நாட்டைப் போன்ற நெருக்கடிகளை எதிர்கொண்ட ஏனைய நாடுகள் மீண்டும் எழுச்சி பெற நீண்ட காலம் எடுத்தது. அந்த நாடுகள் எடுக்கும் கடினமான நடவடிக்கைகளை நாம் எடுக்காமல் எவ்வாறேனும் அனைவரையும் பாதுகாத்து நாட்டை ஸ்திரப்படுத்த வேண்டும் என்று நான் நினைத்தேன். அதன்படி இன்று நாம் பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளோம்.


ஆனால் இந்த நிலைபேற்றுத்தன்மை மாறலாம். சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தை முன்னெடுக்காவிட்டால், இவை அனைத்தும் முடிவுக்கு வரும். இந்தத் திட்டத்தைத் தொடரவும், நாம் அடைந்த பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தவும் ஒரு ஆணையை நான் கேட்கிறேன். இந்த நாட்டிற்கு புதிய பொருளாதாரத்தை வழங்குவதே எனது தேவையாகும்.


இதை சஜித்திற்கோ, அனுரவிற்கோ செய்ய முடியாது. பல்வேறு நிவாரணங்களை வழங்குவதாக இருவருமே மக்களுக்கு அறிவித்து வருகின்றனர். சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். அனுரகுமார என்னை விவாதத்திற்கு வருமாறு அழைத்தார். நான் அதற்குத் தயார் என்றேன். ஆனால் இதுவரை அதற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.


ஆனால் சர்வதேச நாணய நிதியம் தற்போது நம் அனைவரின் கொள்கை அறிக்கைகளையும் ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன் தொடர்பாடல் திணைக்களத்தின் பணிப்பாளர் ஜூலி கொசெக் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார். “வரலாற்றில் மிக மோசமான சவாலை முறியடிக்க இலங்கைக்கு ஒரு வாய்ப்பை வழங்குவதற்கான வேலைத்திட்டத்தின் நோக்கங்களை அடைவது மிகவும் முக்கியமானது”


மறுசீரமைப்புகளைத் தொடர வேண்டியது அவசியமாகும். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் முடிவை இலங்கை மக்களே எடுக்க வேண்டும். சர்வதேச நாணய நிதியத்தின் கண்ணோட்டத்தில், இலங்கையில் அமுல்படுத்தப்பட்ட வேலைத்திட்டம் கணிசமான முன்னேற்றத்தை அடைந்துள்ளது.


ஆனால், இலங்கை தனது வரலாற்றில் சந்தித்த மிக மோசமான நெருக்கடியில் இருந்து முழுமையாக மீள வேண்டுமானால் இந்த வேலைத் திட்டத்தின் மூலம் பெற்ற சாதனைகளைப் பாதுகாப்பது மிகவும் அவசியமாகும்." எனவே, தற்போதுள்ள வேலைத்திட்டம் அவ்வாறே அமுல்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.


சஜித் அல்லது அநுர கூறுவது போன்று தற்போதைய வேலைத் திட்டத்தில் திருத்தம் செய்ய முடியுமா என்பது குறித்து இதில் சர்வதேச நாணய நிதியம் எதுவும் குறிப்பிடவில்லை.


சர்வதேச நாணய நிதியத்துடன் எமது கடன் தொடர்பில் கலந்துரையாடி விசேட வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படும் எனவும் திசைகாட்டி அறிவித்திருந்தது. அதற்கு பதிலாக மாற்று கடன் நிலைபேற்றுத்தன்மை பகுப்பாய்வை முன்வைப்பதாக அவர்கள் கூறினர்.


ஆனால் நாம் நடுத்தர வருமானம் கொண்ட நாடாக இருப்பதால், குறைந்த வருமானம் கொண்ட நாடுகளைப் போன்று கடன் நிலைபேற்றுத்தன்மை பகுப்பாய்வை மேற்கொள்ள முடியாது. சந்தை அணுகுமுறையைக் கொண்ட நாடுகளுக்கான இறையாண்மை ஆபத்து மற்றும் கடன் நிலைபேற்றுத்தன்மை பற்றிய கட்டமைப்பே எமக்கு பொருந்துகின்றது.(Market risk and sovereign debt sustainability framework). இவர்களுக்கா நம் நாட்டை ஒப்படைக்க வேண்டும் என்று பேசுகிறார்கள்?


சில நேரங்களில் நாம் குறுகிய காலத்தில் மிகவும் கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும். ஆனால் இறுதியில் எமக்கு நிவாரணம் கிடைக்கும். எனவே, இந்தப் பணியைத் தொடர உங்கள் ஆணையைத் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.


புதிய பொருளாதாரம், புதிய நாடு, புதிய அரசியல் முறைமையைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தை நான் ஏற்கனவே ஆரம்பித்துள்ளேன். இப்பணியைத் தொடர அனுபவம் வாய்ந்த குழு முன்வர வேண்டும். எனவே, அந்த ஆணையை எனக்கு வழங்குமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.’’ என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »