Our Feeds


Tuesday, September 10, 2024

Zameera

பல ஜனாதிபதி வேட்பாளர்கள் தமது சொத்துக்களை முறையாக காட்டவில்லை - ஜானக ரத்நாயக்க


 பல ஜனாதிபதி வேட்பாளர்கள் தமது சொத்துக்களை முறையாக காட்டவில்லை என  ஜனாதிபதி வேட்பாளரும்  பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் முன்னாள் தலைவருமான  ஜானக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.  

கண்டியில் நேற்று திங்கட்கிழைமை  (09) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே ஜானக ரத்நாயக்க இவ்வாறு தெரிவித்தார்.   

இவர் மேலும் தெரிவிக்கையில் ,   

பல ஜனாதிபதி வேட்பாளர்கள் தமது சொத்துக்களை முறையாக காட்டவில்லை. எனது சொத்துக்கள் அனைத்தையும் சரியாக வெளிப்படுத்தியுள்ளேன்.  

பில்லியன்  40-50   ரூபாயை தேர்தலுக்காக செலவு செய்யும் கட்சிகளின் தலைவர்கள், அவருக்கு குடியிருக்க வீடு மட்டுமே உள்ளது என்கிறார்கள். 

இவர்கள் ஒரு பொதுக்கூட்டத்திற்கு 30 லட்சம் ரூபாய் செலவிடுகின்றனர். இந்த பணம் எங்கிருந்து வருகிறது என்பதை கண்டறிய வேண்டும். உலகம் முழுவதும் சென்று பலகோடி ரூபாய் பிச்சை எடுத்தாலும் இவ்வளவு பணம் செலவழிக்க முடியாது.   

நாட்டில் நடக்கும் முக்கியமான தேர்தலின் போது கிழிந்த  உள்ளாடைகளை மேடைகளில் கேலி செய்யும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர்களுக்கு இலவச உள்ளாடைகளை வழங்க தயாராக இருக்கிறேன்.  

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர திஸாநாயக்க ஒருபோதும் இந்த நாட்டின் ஜனாதிபதியாக முடியாது , அவர் தவறுதலாக ஜனாதிபதியானால் குறுகிய காலத்தில் நாடு மேலும் நெருக்கடியை நோக்கி நகரும் என்பது திண்ணமாகும். 

மேலும் இந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் தலைவர்கள் அரச ஊழியர்களின் தபால் வாக்குகளைப் பறிக்கும் போட்டியில் பல்வேறு வாக்குறுதிகளை அளித்தனர். இவையெல்லாம் சாதிக்கக் கூடிய காரியங்கள் அல்ல. 

இந்த வங்குரோத்து நாட்டில் அரசு ஊழியர்களுக்கு இவ்வளவு பணம் ஒதுக்க முடியுமா? 74 ஆண்டுகளாக இந்த நாடு மாறி மாறி போலி  அரசியலால் தொலைந்து போனது.  

திவாலான நாடாக மாறியது. இந்நிலைமையின் அடிப்படையில் ஜனாதிபதி யார் என்பதை நாட்டு மக்கள் இன்னும் தீர்மானிக்கவில்லை. 

இந்த நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு வாக்களிக்கும் சிறந்த வேட்பாளர் நான் ஆவேன் . இந்த நாட்டை கட்டியெழுப்புவதில் எனக்கு நிறைய அனுபவம் உண்டு.  

நான் ஜனாதிபதியானால் முதலில்  20 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையை நாற்பது வீதத்தால் குறைப்பபேன்  அரிசி, சீனி,  மாவு, பால் மா போன்றவற்றின் விலை குறைக்கப்பட வேண்டும்.  

மேலும், தண்ணீர் மற்றும் மின்சார கட்டணம் முப்பது சதவீதம் குறைக்கப்படும்.  சமையல் எரிவாயுவின்  விலை 2500 ரூபாவாக குறைக்கப்படும் . அத்துடன் எரிபொருளின் விலை 150 ரூபாவாக குறைக்கப்படவுள்ளது.  

இந்த விடயங்களை  என்னால் செய்ய முடியும். இந்த அரசு நிறுவனங்கள் கோடிக்கணக்கில் லாபம் ஈட்டி மக்களை சுரண்டுகின்றன. மக்கள் திருடிச் சாப்பிடுகிறார்கள். 

15 இலட்சம் தேசிய வீராங்கனைகள் வெளிநாடுகளில் இருந்து வாக்களிக்க வருவதாக சிலர் கூறுகின்றனர். அவை சிறந்த நகைச்சுவைகள். அவர்கள் வருவதில்லை. 

 நாட்டில் இல்லாத இளைஞர் குழுக்கள் நாட்டை விட்டு வெளியேற பார்க்கின்றனர். பாஸ்போர்ட்டு களுக்கான வரிசையைப் பாருங்கள். இந்த தலைவர்கள் எவருக்கும் கடன் வாங்குவதை தவிர நாட்டை கட்டியெழுப்ப எந்த திட்டமும் இல்லை. இந்த நாட்டை காப்பாற்ற என்னால் மட்டுமே முடியும் என்றார்.  

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »