Our Feeds


Friday, September 27, 2024

Zameera

85 உறுப்பினர்களின் ஓய்வூதியம் இரத்து


 ஒன்பதாவது பாராளுமன்றம் பதவி காலம் நிறைவடைவதற்கு முன்னர் ஜனாதிபதியால் கலைக்கப்பட்டதால் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்திய 85 புதிய உறுப்பினர்களின் ஓய்வூதியம் இரத்து செய்யப்பட்டுள்ளது.

பொதுத்தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி வியாழக்கிழமை இடம்பெறவுள்ளது. 2024 ஆம் ஆண்டு அத்தாட்சிப்படுத்தப்பட்ட புதிய  தேருநர் இடாப்பு ( வாக்காளர் இடாப்பு) அமைய இம்முறை மாவட்ட ஆசன எண்ணிக்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

 பாராளுமன்றத்தை கலைத்து பொதுத்தேர்தலை நடத்துவது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் புதன்கிழமை (25) நள்ளிரவு  வெளியிடப்பட்டது.

 எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 4 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் தேர்தலில் போட்டியிட எதிர்பார்த்துள்ளவர்கள்  22 தேர்தல் மாவட்டங்களில் உள்ள மாவட்ட செயலக  அலுவலகங்களில் வேட்புமனுக்களை கையளிக்க முடியும்.

10 ஆவது பாராளுமன்றத்துக்கு தெரிவு  செய்யப்படும் உறுப்பினர்  எண்ணிக்கை

2023 ஆம் ஆண்டு  அத்தாட்சிப்படுத்தப்பட்ட  தேருநர் இடாப்புடன் ஒப்பிடுகையில்,  ( வாக்காளர் இடாப்பு); இம்முறை பல மாவட்டங்களின் ஆசனங்களின் எண்ணிக்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதற்கமைய கடந்த முறை  மேல்மாகாணத்தில் கொழும்பு மாவட்டத்துக்கு 19 ஆசனங்கள் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் இம்முறை 18 ஆக வரையறுக்கப்பட்டுள்ளது.

அதிகளவிலான வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ள கம்பஹா மாவட்டத்துக்கு கடந்த முறை 18 ஆசனங்கள் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் இம்முறை 19 ஆக உயர்வடைந்துள்ளது.

களுத்துறை  மாவட்டத்தில் இருந்து 11 உறுப்பினர்கள் பாராளுமன்றத்துக்கு தெரிவாகுகின்ற நிலையில், கடந்த முறை 10 ஆசனங்கள் மாத்திரமே ஒதுக்கப்பட்டிருந்தன.

வடமேல் மாகாணத்தில் குருநாகல் மாவட்டத்துக்கு 15 ஆசனங்களும்,  புத்தளம் மாவட்டத்துக்கு 8 ஆசனங்களும், மத்திய மாகாணத்தில் கண்டி மாவட்டத்துக்கு 12 ஆசனங்களும், மாத்தளை மாவட்டத்துக்கு 5 ஆசனங்களும், நுவரெலியா மாவட்டத்துக்கு 8 ஆசனங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

தெற்கு மாகாணத்தில்  காலி மாவட்டத்துக்கு 9 ஆசனங்களும், மாத்தறை மாவட்டத்துக்கு 7 ஆசனங்களும், அம்பாந்தோட்டை மாவட்டத்துக்கு 7 ஆசனங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு 2020 ஆம் ஆண்டு 7 ஆசனங்கள் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் இம்முறை 6 ஆசனங்களும், வன்னி மாவட்டத்துக்கு 6 ஆசனங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்துக்கு 5 ஆனங்களும், திகாமடுல்லை மாவட்டத்துக்கு 7 ஆசனங்களும், திருகோணமலை மாவட்டத்துக்கு 4 ஆசனங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

வடமத்திய மாகாணத்தில் அநுராதபுரம் மாவட்டத்துக்கு 9 ஆசனங்களும், பொலன்னறுவை மாவட்டத்துக்கு 5 ஆசனங்களும், ஊவா மாகாணத்தில்  பதுளை மாவட்டத்துக்கு 9 ஆசனங்களும், மொனராகலை மாவட்டத்துக்கு 6 ஆசனங்களும், சப்ரகமுவ மாகாணத்தில் இரத்தினபுரி மாவட்டத்துக்கு 11 ஆசனங்களும் , கேகாலை மாவட்டத்துக்கு 9 ஆவசனங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

85 உறுப்பினர்களின் ஓய்வூதியம் இரத்து

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் பதவி காலம் 2025.08.08 ஆம் திகதி  நிறைவடையவிருந்தது. ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கமைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவு பாராளுமன்றத்தை கலைத்தார்.

பாராளுமன்ற உறுப்பினர்கள் ஓய்வூதிய கொடுப்பனவுகளை பெற வேண்டுமாயின் அவர்கள் 5 ஆண்டுகள் பாராளுமன்ற பதவி காலத்தை நிறைவு செய்ய வேண்டும். பாராளுமன்றத்தின் பதவி காலம் நிறைவடைவதற்கு  பாராளுமன்றம் கலைக்கப்பட்டதால் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்திய 85 உறுப்பினர்களின் ஓய்வூதிய கொடுப்பனவுகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.

1971 ஆம் ஆண்டு 1 ஆம் இலக்க பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம் தொடரபான சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய ஓய்வூதியம் வழங்கப்படும் 5 ஆண்டுகள் பதவி காலத்தை பூரணப்படுத்தியிருந்தால் சம்பளத்தில் மூன்றில் ஒரு பகுதியும், 10 ஆண்டுகள் ( இரு தடவைகள் பாராளுமன்றத்துக்கு தெரிவு) ஆயின் மூன்றில் இரண்டு பகுதியும் ஓய்வூதியமாக கிடைக்கப் பெறும்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »