Our Feeds


Tuesday, September 10, 2024

Sri Lanka

இஸ்ரேலுக்கு செல்லும் 2 ஆயிரத்திற்கும் அதிகமான இலங்கை இளைஞர்கள்.



(எம்.ஆர்.எம்.வசீம்)


இஸ்ரேல் மற்றும் இலங்கை அரசாங்கங்களுக்கு இடையில் மேற்கொள்ளப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கமைவாக  இலங்கை இளைஞர்கள் 2252 பேருக்கு இஸ்ரேலிலில் விவசாய துறையில் தொழில் வாய்ப்பு கிடைக்கப்பெற்றுள்ளது.


அதேவேளை, எதிர்வரும் 12ம் திகதி மற்றும் 18ம் திகதிகளில் இஸ்ரேலுக்கு புறப்பட்டுச் செல்ல இருக்கும் 69 இளைஞர்களுக்கான விமான பற்றுச்சீட்டு வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை (10) வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் இடம்பெற்றது.


இஸ்ரேல் அரசாங்கத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தத்திற்கமைய 5 வருடகாலம் இஸ்ரேலில் தொழிலில் ஈடுபட அனுமதி வங்கப்பட்டிருக்கிறது. இஸ்ரேலுக்கு தொழிலுக்காக இலங்கை அரசாங்கம் சார்ப்பாக பணியகத்தினால் நபர்கள் அனுப்பப்படுவதுடன் தொழில்  வாய்ப்பாளர்கள் தெரிவு செய்யப்படுவது, இஸ்ரேலின் பீகா நிறுவனத்தின் அதிர்ஷ்ட சீட்டு முறையில் மாத்திரமாகும்.


அவ்வாறு தெரிவு செய்யப்படும் நபர்களின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் பணியகத்தினால் மேற்கொண்டு இஸ்ரேலுக்கு அனுப்பிவைக்கப்படுகிறது. இரண்டு அரசாங்கங்களுக்கிடையில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கமைய இஸ்ரேலில் விவசாய துறையில் தொழில் கிடைக்கப்பெறுகிறது.


இந்த தொழில் வாய்ப்புக்காக தொழிலாளர்களை இணைத்துக்கொள்ள வேறு எந்த நபர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.


அதனால்  இஸ்ரேலில் விவசாய துறையில் தொழில் பெற்றுக்கொள்வதற்காக வேறு வெளிநபர்கள் யாருக்கும் பணம் வழங்குவதை தவிர்த்துக்கொள்ளுமாறும் பணியகம் பொது மக்களை கேட்டுக்கொள்கிறது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »