Our Feeds


Wednesday, September 18, 2024

Zameera

எரிவாயு சிலிண்டருக்காக செப்டெம்பர் 21ல் வாக்களிக்க அழைப்பு: ஜனாதிபதி


 கஷ்டப்பட்டு அடைந்த வெற்றியைப் பாதுகாக்கும் வகையில் எதிர்வரும் செப்டெம்பர் 21ஆம் திகதி எரிவாயு சிலிண்டருக்காக வாக்களிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மக்களிடம் கோரியுள்ளார்.

அரசாங்கம் ஏற்கனவே அமுல்படுத்திய வேலைத் திட்டத்திற்கே சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவு இருப்பதாகத் தெரிவித்த ஜனாதிபதி, மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை வழங்கும் சஜித்துக்கோ அல்லது அநுராவுக்கோ நாட்டை முன்னேற்றுவதற்கான வேலைத் திட்டம் இல்லை எனவும் தெரிவித்தார்.

வெல்லவாயயில் நேற்று (16) பிற்பகல் நடைபெற்ற ‘ரணிலால் இயலும்’ வெற்றிப் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த பேரணியில் பெருமளவான மக்கள் கலந்துகொண்டனர்.

இந்த பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் கூறியதாவது:

”ஹம்பாந்தோட்டை கைத்தொழில்கள் அபிவிருத்தியடையும் போது, ​​வெல்லவாய பிரதேசத்திலும் முதலீட்டு வலயமொன்று உருவாகும். அத்துடன், மொனராகலையில் விரிவான அபிவிருத்தி வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த இருக்கிறோம். இந்த வேலைத் திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதற்கான ஆணையையே நாம் கேட்கின்றோம்.

இந்த நாட்டின் இளைஞர்களுக்கு 04 வருடங்களாக வேலைவாய்ப்புகள் வழங்கப்படவில்லை. அடுத்த ஆண்டு அரச மற்றும் தனியார் துறையில் ஒரு இலட்சம் சுய வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம். மேலும் 50,000 பேருக்கு அவர்கள் விருப்பமான தொழில் பயிற்சி நிறுவனத்தில் பயிற்சி பெற நிதி உதவி வழங்கப்படும்.

இதற்கு தொங்குபாலத்தில் பயணத்தை முடிக்க வேண்டும். நாம் இன்னும் சிறிது தூரம் செல்ல வேண்டும். தொங்கு பாலம் கொஞ்சம் ஆடுகிறது. செப்டம்பர் 21 ஆம் திகதி மக்கள் தங்கள் கடமையை நிறைவேற்றினால் இந்த தொங்கு பாலத்தின் பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்ய முடியும். இன்று தொங்கு பாலத்தை கடக்கும் குழந்தையின் உரிமையை எடுக்க இரண்டு பேர் தயாராகிறார்கள். இருவரிடம் எந்தத் திட்டமும் கிடையாது. எனவே, நாட்டின் எதிர்காலத்தை அவர்களிடம் ஒப்படைக்க முடியாது. நாம் முன்னேற வேண்டுமானால், IMF ஆதரவுடன் முன்னேற வேண்டும். அரசாங்கம் இதுவரை செயல்படுத்தி வரும் திட்டத்திற்குத் தான் அதன் ஆதரவு உள்ளது.” என்றார்.

​​முன்னாள் விவசாய அமைச்சர் அநுரகுமார என்னை விவாதத்திற்கு அழைத்தார். நான் அதற்கு தயார் என்று அறிவித்துள்ளேன். ஆனால் இன்னும் அழைப்பு வரவில்லை. இன்றும் நான் அதற்கு தயாராக இருக்கிறேன். அவர்களால் ஏன் விவாதத்திற்கு வர முடியாது? அவர்களிடம் எந்த திட்டமும் இல்லை என்பதாலே பின்வாங்குகின்றனர். அனைத்தையும் இலவசமாக கொடுப்பது பற்றித் தான் சஜித் பேசுகிறார். தலை வலியையும் அவர் இலவசமாக கொடுப்பார். ஆனால் நாம் கடினமாக பெற்ற வெற்றியைப் பாதுகாத்து முன்னேற வேண்டும். இதற்காக செப்டம்பர் 21ஆம் திகதி கேஸ் சிலிண்டருக்காக அனைவரும் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்”

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »