Our Feeds


Wednesday, September 4, 2024

SHAHNI RAMEES

ஜனாதிபதித் தேர்தல் 2024 : தபால் மூல வாக்குப்பதிவு இன்று ஆரம்பம்!

 



இம்மாதம் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதித்

தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று புதன்கிழமை (04) முதல் ஆரம்பமாகவுள்ளன.


இம்முறை ஜனாதிபதித் தேர்தலுக்கு 7 இலட்சத்து12,319 வாக்காளர்கள் தபால்மூலம் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.


அதன்படி, குருநாகல் மாவட்டத்தில் அதிகூடிய வாக்காளர்களாக 76 ஆயிரத்து 977 பேர் தகுதி பெற்றுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 


மாவட்டச் செயலக அலுவலகங்கள், தேர்தல் ஆணைக்குழு அலுவலகங்கள், சிரேஷ்ட மற்றும் பிரதி பொலிஸ்மா அதிபர் அலுவலகங்கள், பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகங்கள், பொலிஸ் நிலையங்கள், சிறப்பு அதிரடிப் படை முகாம்கள், சிறப்பு பொலிஸ் பிரிவுகள் மற்றும் உயரடுக்கு பாதுகாப்புப் பிரிவுகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு இன்றையதினம் தபால் மூலம் வாக்களிக்க சந்தர்ப்பம் கிடைக்கும் என தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.


தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையும் இடம்பெறவுள்ளது. 


இதேவேளை, இன்றையதினத்திற்கு மேலதிகமாக குறித்த இடங்களில் 6ஆம் திகதியும் தபால்மூலம் வாக்களிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளதுடன் முப்படை முகாம்கள் மற்றும் ஏனைய அனைத்து அரச நிறுவனங்களிலும் உள்ள ஊழியர்களுக்கான தபால் மூல வாக்குப்பதிவு செப்டம்பர் 05 மற்றும் 06 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளன.


குறித்த திகதிகளில் தபால் மூலம் வாக்களிக்க முடியாத வாக்காளர்கள், தாங்கள் பணிபுரியும் மாவட்டத்தில் உள்ள மாவட்ட தேர்தல் அலுவலகங்களில், எதிர்வரும், 11, 12ம் திகதிகளில், தபால் மூலம் வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.


இதேவேளை, ஜனாதிபதி தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் செவ்வாய்க்கிழமை (3) முதல் விநியோகிக்கப்படும் நிலையில், உத்தியோகபூர்வ  வாக்காளர் அட்டைகள் விநியோகம் செப்டெம்பர் 14ஆம் திகதி வரை இடம்பெறும் என பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார்.


இதேவேளை, ஜனாதிபதி தேர்தல் தொடர்பான ஸ்டிக்கர்கள் மற்றும் சுவரொட்டிகளை வாகனங்களில் காட்சிப்படுத்துவது சட்டவிரோதமானது என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


அவ்வாறான வாகனங்களில் உள்ள சுவரொட்டிகள் மற்றும் ஸ்டிக்கர்களை அகற்றுமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »