Our Feeds


Monday, September 30, 2024

Sri Lanka

13,309 பரீட்சார்த்திகள் ஒன்பது A சித்தி - பரீட்சைகள் திணைக்களம்!


13,309 பரீட்சார்த்திகள் ஒன்பது பாடங்களிலும் ஏ சித்தி பெற்றுள்ளனர். 2.12 சதவீதமானோர் ஒன்பது பாடங்களிலும் சித்திகளை பெறவில்லை. முதல் 10 நிலை பெறுபேற்றில் மாணவிகள் முன்னிலையில் உள்ளனர். ஒக்டோபர் 1 முதல் 14 வரை மீள் திருத்தங்களுக்கு விண்ணப்பிக்க முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்தார்.

பரீட்சை திணைக்களத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

2023ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர சாதாரன தரப் பரீட்சை 2024.05.06ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை 3527 பரீட்சை மத்திய நிலையங்களில் நடைபெற்றது. பரீட்சை பெறுபேறுகளை நேற்று (28) நள்ளிரவு வெளியிட்டோம்.

452 979 பேர் பரீட்சைக்கு விண்ணப்பித்திருந்த நிலையில், 415,454 பரீட்சார்த்திகள் பரீட்சைக்கு தோற்றியிருந்தார்கள். முதல் தடவையாக பரீட்சைக்கு தோற்றிய 322,537 பரீட்சார்த்திகளில் 244,228 பரீட்சார்த்திகள் உயர்தர கல்விக்கு தகுதிப் பெற்றுள்ளனர்.

உயர்தர கல்விக்கான சுற்றறிக்கைக்கு அமைய  மொத்த பரீட்சார்த்திகளில் உயர்தர கல்வியை தொடர்வதற்கான அடிப்படை தகைமையை  75.72  சதவீதமானோர் பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை காட்டிலும் இம்முறை முன்னேற்றகரமான தன்மை காணப்படுகிறது. 2021ஆம் ஆண்டு உயர்தரத்துக்கான அடிப்படை தகைமையை பெற்றுள்ளவர்களின் வீதம் 74.52 ஆகவும், 2022ஆம் ஆண்டு 74.38 ஆகவும் காணப்பட்டது.

முதற் தடவையாக பரீட்சைக்கு தோற்றிய பரீட்சார்த்திகளில் 13,309 பேர் ஒன்பது பாடங்களிலும் ஏ சித்திகளை பெற்றுள்ளனர்.

2.12 சதவீதமான பரீட்சார்த்திகள் 9 பாடங்களிலும் சித்திபெறவில்லை. ஆகவே 2022ஆம் ஆண்டை காட்டிலும் 2023ஆம் ஆண்டு பெறுபேறுகளின் வீதம் உயர்வடைந்துள்ளது.


மாகாண மட்டத்திலான முன்னேற்றம்

உயர்தரத்துக்கு தகுதி பெற்றுள்ள 75.72 சதவீதத்தை காட்டிலும் உயர்வான பெறுபேற்றினை 4 மாகாணங்கள் பெற்றுக்கொண்டுள்ளன. தென் மாகாணம் 78.21 சதவீதத்தை பெற்றுக்கொண்டு முன்னிலையில் உள்ளது. கிழக்கு மாகாணம் 77.36 சதவீதத்தையும், மேல் மாகாணம் 77.11 சதவீதத்தையும், சப்ரகமுவ மாகாணம் 76.54 சதவீதத்தையும் பெற்றுக்கொண்டுள்ளன.


மாவட்ட மட்டத்திலான முன்னேற்றம் 

75.72 சதவீத பெறுபேற்றை காட்டிலும் உயரளவிளவான பெறுபேற்றை 11 மாவட்டங்கள் பெற்றுக்கொண்டுள்ளன. இதற்கமைய அம்பாறை மாவட்டம்  81.13 சதவீதத்தையும், மாத்தறை மாவட்டம் 80.57 சதவீதத்தையும், கொழும்பு மாவட்டம் 79.68 சதவீதத்தையும், மட்டக்களப்பு மாவட்டம் 78.86 சதவீதத்தையும், ஹம்பாந்தோட்டை மாவட்டம் 77.92 சதவீதத்தையும், கண்டி மாவட்டம் 76.91 சதவீதத்தையும், கேகாலை மாவட்டம் 76.87 சதவீதத்தையும், காலி மாவட்டம் 76.54 சதவீத்தையும், இரத்தினபுரி மாவட்டம் 76.24 சதவீதத்தையும், மன்னார் மாவட்டம் 76.24 சதவீதத்தையும், கம்பஹா மாவட்டம் 75.81 சதவீதத்தையும் பெற்றுக்கொண்டுள்ளது.


முதல் 10 நிலைகள்

ஒன்பது பாடங்களில் 6 கட்டாய பாடங்களில் பெற்றுக்கொண்ட புள்ளிகளை அடிப்படையாகக் கொண்டு முதல் 10 நிலைகள் தீர்மானிக்கப்படும். இதற்கமைய இம்முறை முதல் நிலை ஒன்றும், 2 ஆம் நிலைகள் இரண்டும், 4ஆம் நிலைகள் மூன்றும், 7ஆம் நிலைகள் நான்கும் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

இதற்கமைய காலி சங்கமித்தை மகளிர் கல்லூரி மாணவியான ஹிருணி மல்ஷா குமாதுங்க முதல் நிலையை பெற்றுக்கொண்டுள்ளார். கொழும்பு மியுசியஸ் வித்தியாலத்தின் மாணவி மெத்சலா, குருநாகல் மலியதேவி மகளிர் வித்தியாலய மாணவி விமங்ஸா ஜயநதி ரத்னவீர முறையே இரண்டாம் நிலைகளை பெற்றுக்கொண்டுள்ளனர்.

நான்காம் நிலையை கொழும்பு விசாகா பாடசாலை மாணவி செஸ்யானி ஜயவர்தன, நுகேகொட அனுலாதேவி வித்தியாலய மாணவி சமோதி பெரேரா, காலி சங்கமித்தை மகளிர் கல்லூரி மாணவி நதுனி பமுதிதா ஆகியோர் பெற்றுக்கொண்டுள்ளனர்.

ஏழாம் நிலையை நுகேகொட அனுலாதேவி பாடசாலை மாணவி நிமநதி வனசரா அதிகாரி, கம்பஹா ரத்னதேவி மகளிர் கல்லூரி மாணவி தக்சரா காவிந்தி, பாணந்துறை ஸ்ரீ சுமங்கல மகளிர் கல்லூரி மாணவி தனஞ்சனா விக்கிரமகே ஆகியோர் பெற்றுக்கொண்டுள்ளனர்.

அதேபோல் 7ஆம் நிலையை மாத்தறை ராஹூல வித்தியாலயத்தின் மாணவன் சஷிரான் சமரவிக்கிரம பெற்றுக்கொண்டுள்ளார். முதல் 10 நிலைகளில் 9 நிலைகளை மாணவிகள் பெற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »