Our Feeds


Sunday, September 1, 2024

SHAHNI RAMEES

பிரிவினைவாதிகளின் டொலருக்காகவே 13ஐ அமுல்படுத்துவதாக ரணில், சஜித், அனுர வடக்குக்கு வாக்குறுதி - உதய கம்மன்பில

 


தேர்தல் செலவினங்களுக்காக பிரிவினைவாதிகளிடமிருந்து

டொலர் பெற்றுக்கொள்வதற்காகவே ரணில், சஜித், அனுர ஆகியோர் வடக்குக்குச் சென்று 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதாக குறிப்பிடுகிறார்கள். வடக்கில் சாதிய ஒடுக்குமுறையால் இன்றும் ஒதுக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படவில்லை. 1971ஆம் ஆண்டு இரத்து செய்யப்பட்ட சமூக குறைப்பாடுகளை தடுக்கும் சட்டத்தை மீண்டும் அமுல்படுத்துவோம் என பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.


கொழும்பில் இடம்பெற்ற ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீரவின் தேசிய மூலோபாய கருத்திட்டம் வெளியீடு நிகழ்வில் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


அவர் மேலும் தெரிவித்ததாவது,


1957.04.13ஆம் திகதி தமிழ் - சிங்கள புத்தாண்டின் போது தெற்கு சிங்களவர்களை காட்டிலும் வடக்கு தமிழர்களே பெருமளவில் மகிழ்ச்சியடைந்தார்கள். வடக்கில் வாழ்ந்த தமிழர்களில் ஒரு தரப்பினருக்கு கோயிலுக்குள் சென்று கடவுளை வணங்குவதற்கு  சிங்கள புத்தாண்டு தினத்தன்றே அனுமதி வழங்கப்பட்டது.


1957ஆம் ஆண்டு அப்போதைய சபாநாயகர் 1957ஆம் ஆண்டு 21ஆம் இலக்க 'சமூக குறைப்பாடுகளை தடுக்கும்' சட்டத்தை சான்றுரைத்தார். அன்று கையில் காசு இருந்தும் ஹோட்டலுக்கு சென்று தோசை, வடை சாப்பிட அனுமதி மறுக்கப்பட்டிருந்த, அடிவாங்க நேரிடும் என்ற அச்சத்தில் தமது சாதியினருக்காக ஒதுக்கப்பட்டிருந்த பேருந்துக்காக பல மணித்தியாலங்கள் காத்திருந்தவர்களுக்கும், பொது கிணற்றில் நீர் எடுப்பதற்கும் உரிமை மறுக்கப்பட்டிருந்த வடக்கு மக்களுக்கு 1957ஆம் ஆண்டே உண்மையான சுதந்திரம் கிடைக்கப்பட்டது.


பண்டாரநாயக்கவின் அரசாங்கத்தில் உருவாக்கப்பட்ட குழந்தை பண்டாரநாயக்கவின் அரசாங்கத்தில் பக்கவாத நோய்க்குள்ளாக்கப்படுகிறது. 1971ஆம் ஆண்டு ஸ்ரீமாவோ பண்டாநாயக்கவின் அரசாங்கம் இந்த சட்டத்துக்கு திருத்தம் ஒன்றை கொண்டு வந்து கீழ் சாதியினர் என்று கருதப்படும் சமூகத்தினர் கோயிலுக்குள் சென்று கடவுளை வழங்குவதற்கு விதிக்கப்பட்டிந்த தடையை நீக்குவதற்கு உருவாக்கப்பட்ட சட்டம் நீக்கப்படுகிறது.


வடக்கு மக்கள் இந்த அநீதிக்கு எதிராக குரல் கொடுத்தார்கள். ஒருசிலர் தமது விதி என்று எண்ணி தங்களை தேற்றிக்கொண்டார்கள். தெற்கு சிங்களவர்களுக்கு இது தெரியவில்லை. 1971ஆம் ஆண்டு இழைக்கப்பட்ட அநீதி பற்றி எவரும் பேசவில்லை.


வடக்கு மக்களின் அடிப்படை பிரச்சினையை மூடி மறைக்கும் செயற்பாடுகள் மாத்திரமே முன்னெடுக்கப்படுகிறது. ஜனாதிபதி வேட்பாளர்களான ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச, அனுரகுமார திஸாநாயக்க ஆகியோர் வடக்குக்கு சென்று 'சிங்களவர்களின் நெருக்கடியில் இருந்து விடுதலை பெற அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதாக' குறிப்பிடுகிறார்கள்.


தேர்தல் செலவுகளுக்கு பிரிவினைவாதிகளிடமிருந்து டொலர் பெற்றுக்கொள்வதற்காக வடக்குக்கு சென்று இவர்கள் 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதாக குறிப்பிடுகிறார்கள். ஆனால் வடக்கில் இன்றும் சாதிய வேற்றுமையால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் குறித்து இவர்கள் கவனம் செலுத்தவில்லை. சாதிய வேற்றுமையால் வடக்கில் இன்றும் ஒதுக்கப்பட்டுள்ள மக்களின் நலனுக்காக சமூக குறைப்பாடுகளை தடுக்கும்  சட்டத்தை மீண்டும் அமுல்படுத்துவோம்.


பிரிவினைவாதிகளை திருப்திப்படுத்துவற்காக உத்தேச உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை உருவாக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. எமக்கு நல்லிணக்கம் அவசியமா? யுத்தம் முடிவடைந்த பின்னர் நாட்டில் நல்லிணக்கம் உறுதிப்படுத்தப்பட்டது. 


வடக்கில் உள்ளவர்கள் தெற்கில் வாழ்கிறார்கள், தெற்கில் உள்ளவர்கள் வடக்கில் வாழ்கிறார்கள். தமிழ் மற்றும் சிங்கள இனத்தவர்கள் திருமண பந்தத்தில் இணைந்துகொண்டுள்ளார்கள். இதனை காட்டிலும் நல்லிணக்கம் அவசியமா? உத்தேச  உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபித்ததால் நாட்டில் மீண்டும் இரத்த வெள்ளம் ஓடும் நிலை ஏற்படும் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »