இலங்கையில் தமிழ், முஸ்லிம் மக்களின் எதிர்காலம் பாதுகாப்பானதாக மாற்றியமைக்கப்பட வேண்டுமானால் பெரும்பான்மையினத்தின் கையளிக்கப்பட்டுள்ள ஒற்றையாட்சி கட்டமைப்பு ஒழிக்கப்பட்டு ஒரு சமஸ்டி கட்டமைப்பு உருவாக்கப்படல் வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்தார்.
தமிழர்களின் அபிலாசைகளை சர்வதேசத்திற்கு வெளிப்படுத்தப்போகின்றோம் என்ற போர்வையினை போர்த்திக்கொண்டு தமிழர்களை ஏமாற்றி வாக்களிக்கச் செய்யும் உபாயம் கையாளப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
ஜனாதிபதி தேர்தலை பகிஸ்கரிக்குமாறு வலியுறுத்தி வடகிழக்கில் தொடர்ச்சியான துண்டுப்பிரசுர விழிப்புணர்வு பிரச்சாரத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.
வடக்கில் இந்த போராட்டம் அனைத்து மாவட்டங்களிலும் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் கிழக்கு மாகாணத்தில் இந்த துண்டுப்பிரசுர போராட்டம் இன்று (21) ஆரம்பித்துவைக்கப்பட்டது.
இது தொடர்பான நிகழ்வு இன்று மட்டக்களப்பு காந்திபூங்காவில் இன்று காலை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன் கலந்துகொண்டு துண்டுப்பிரசுர பிரச்சாரத்தினை ஆரம்பித்துவைத்தார். இந்த நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது கருத்து தெரிவித்த அவர்,
எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வழமை போன்று இந்த தேர்தலிலும் போட்டியிடுகின்ற வெற்றி வாய்ப்பைக் கொண்டிருக்க கூடிய பிரதான பெரும்பான்மையின வேட்பாளர்கள் மூன்று பேரும் தமிழ் மக்களுடைய வாக்குகளை குறிவைத்து போலி வாக்குறுதிகளை வழங்கி தமிழர்களை ஏமாற்றி தமிழர்களுடைய வாக்குகளை பெறுகின்ற முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.
வட கிழக்கில் இருக்கின்ற அவர்களுடைய முகவர்கள் ஐக்கிய தேசிய கட்சியினுடைய முகவர்கள் ஜேவிபி கட்சியின் முகவர்கள் மற்றும் சஜித் பிரேமதாசவின் முகவர்கள் தங்களுடைய தனிப்பட்ட குடும்ப நலன்கள் தங்களுடைய இலாபங்களை மட்டும் கருத்தில் கொண்டு இந்த ஆட்சியாளர்களிடமிருந்து கிடைக்கின்ற அற்ப சொற்ப சலுகைகளை பெற்றுக் கொண்டு தமிழ் மக்களுக்கு பசப்பு வார்த்தைகளை கூறி தமிழ் மக்களுடைய வாக்குகளை பெற்று பேரினவாதிகளுக்கு கொடுப்பதற்கான வேலைகளை முன்னெடுக்கின்றார்கள்.
இந்திய மேற்கு நாடுகளுடைய பின்னணியோடு கடந்த 15 வருடங்களாக ஒற்றை ஆட்சியை ஏற்றுக்கொண்டு அதற்குள்ளான 13 ஆவது திருத்தச் சட்டத்தை தீர்வாக வலியுறுத்தி வருகின்ற தரப்புக்கள் ஒன்றிணைந்து பொது வேட்பாளர் என்கின்ற போர்வையிலே தமிழ் மக்களினுடைய தேசிய அபிலாசைகளை சர்வதேசத்திற்கு வெளிப்படுத்த போகின்றோம் என்கின்ற ஒரு போர்வையை போர்த்திக் கொண்டு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரனை வேட்பாளராக நிறுத்தி எங்களுடைய மக்களை ஏமாற்றி இந்த தேர்தலில் வாக்களிப்பு செய்கின்ற உபாயத்தையும் கையாண்டு வருகின்றார்கள்.
இந்த வேளையில் எங்களுடைய மக்களின் நீண்டகால எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தமிழ் மக்களுடைய அரசியல் விடுதலையை உறுதிப்படுத்தக் கூடிய சாத்தியமான ஒரே ஒரு வழிமுறையாக இலங்கையினுடைய ஒற்றை ஆட்சி முறைமை ஒழிக்கப்பட்டால் மாத்திரம் தான் தமிழ் மக்களுக்கான எதிர்காலம் உண்டு என்று எங்களுடைய மக்களுக்கு கூறி எங்களுடைய மக்களை ஒரு நேர்மையான முறையிலே வழிநடத்தி ஒரு பேரம் பேசுகின்ற வலிமை மிக்க சக்தியாக தமிழ் மக்களுடைய அரசியல் சக்தியை மாற்றுகின்ற முயற்சியிலே பாராளுமன்ற உறுப்பினரும் கட்சி தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களுடைய வழிகாட்டுதலில் இந்த ஜனாதிபதி தேர்தலை தமிழ் மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்கின்ற விழிப்புணர்வு பிரச்சாரம் ஒன்றினை தமிழ் தேசிய மக்கள் முன்னணி முன்னெடுத்து கொண்டு வருகின்றது.
வடகிழக்கு தமிழர் தாயகத்தில் வாழுகின்ற தமிழ் முஸ்லிம் மக்களிடம் நாங்கள் வேண்டிக் கொள்வது என்னவென்றால் இலங்கை தீவில் சிங்கள பௌத்த பேரினவாதத்தினுடைய இன அழிப்புக்கு உள்ளாக்கப்பட்டு கொண்டிருக்கின்ற தமிழ் மக்களதும் முஸ்லிம் மக்களதும் எதிர்காலம் என்பது பாதுகாப்பானதாக மாற்றியமைக்க வேண்டுமானதாக இருந்தால் இலங்கையினுடைய பெரும்பான்மையின சிங்கள கட்சிகளுடைய ஆட்சி அதிகாரத்தை வழங்கியிருக்கின்ற இந்த ஒற்றை ஆட்சி கட்டமைப்பு ஒழிக்கப்பட்டு ஒரு சமஷ்டி கட்டமைப்பு ஒன்று உருவாக்கப்பட வேண்டும் அதனூடாக மாத்திரம் தான் இந்த தீவிலே தமிழர்களும் முஸ்லிம்களும் பாதுகாப்பாக வாழக்கூடிய சூழலை உருவாக்க முடியும்.
கடந்த காலத்தில் தமிழர்களாகிய நாங்கள் சிங்கள பௌத்த பேரினவாதத்தினுடைய இன அழிப்பில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக ஜனநாயக ரீதியான போராட்டங்களை நடத்தியிருக்கின்றோம். அந்த போராட்டங்கள் ஆயுத முனையில் ஒடுக்கப்பட்ட போது ஆயுதம் ஏந்தி போராடி இருக்கின்றோம் அந்த ஆயுதப் போராட்டம் இடம்பெற்ற முழு காலப்பகுதியிலும் முஸ்லிம் சகோதரர்கள் இலங்கை அரசாங்கத்திற்கு உறுதுணையாக இருந்தார்கள்.
இந்த விடுதலைப் போராட்டத்தை முற்று முழுதாக அழித்து ஒழிப்பதற்கு முஸ்லிம் சகோதரர் கட்சிகளின் தலைவர்கள் நூற்றுக்கு நூறு வீதம் இலங்கை அரசோடு ஒத்துழைத்து இருந்தார்கள். ஆனால் அவ்வாறு செயல்பட்டிருந்தும் கூட யுத்தம் முடிவுக்கு வந்ததன் பிற்பாடு 10 வருடங்களில் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 குண்டுவெடிப்பு தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்று இருந்தது.
அந்த சம்பவங்களில் ஒரு சில இஸ்லாமியர்கள் ஈடுபட்டிருந்தார்கள் அதை சாட்டாக வைத்துக்கொண்டு எந்த குற்றமும் செய்யாத எந்த சம்பந்தமும் இல்லாத இந்த நாட்டினுடைய அபிவிருத்தியில் மிகப்பெரிய பொருளாதார பங்களிப்பு செய்கின்ற முஸ்லிம் சமூகத்தினர் முற்று முழுதாக குறி வைக்கப்பட்டு அவர்கள் பயங்கரவாதிகளாக முத்திரை குத்தப்பட்டு அவர்கள் குறி வைத்து பெருமளவு தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டார்கள்.
குறிப்பாக அவர்களுடைய பொருளாதாரம் திட்டமிட்ட ரீதியில் ஒரு சில மாதங்களுக்குள் இலங்கை பூராகவும் பாரிய அழிவுகளையும் வீழ்ச்சிகளையும் சந்திக்க கூடிய அளவிற்கு ஸ்ரீலங்கா அரசு திட்டமிட்ட ஒரு கட்டமைப்பு சார் இன அழிப்பை முஸ்லீம் மக்களுக்கு எதிராக செய்திருந்தது.
இந்த அனுபவங்கள் ஊடாக நல்ல ஒரு பாடத்தினை கற்றுக் கொள்ள வேண்டும் இந்தத் தீவில் ஒற்றை ஆட்சி முறைமை ஒழிக்கப்பட்டு ஒரு சமஸ்டி அரசியல் கட்டமைப்பு கொண்டு வரப்படுகின்ற போது முஸ்லிம் மக்களுக்கு உரிய அரசியல் அதிகாரங்கள் முற்றுமுழுதாக அங்கீகரிக்கப்படும் அதற்கு நாங்கள் இருந்து பேசி ஒரு இணக்கப்பாட்டிற்கு வரக்கூடியதாக இருக்கும் சட்ட ரீதியாக முஸ்லிம் மக்களுடைய உரிமைகளையும் தமிழ் மக்களது உரிமைகளையும் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
மாறாக பெரும்பான்மை இனத்தவர்களுக்கு நாங்கள் பந்தா பிடிப்பதன் மூலமாக ஒருவருடைய உரிமைகளை இன்னொருவர் தட்டிப் பறிக்கின்ற அணுகுமுறைகளை நாங்கள் கைவிட வேண்டும் ஆகவே எதிர்காலத்திலும் இந்த தீவில் முழு இலங்கையிலும் வெறுமனே வடகிழக்கில் தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கு மாத்திரமல்ல தென்னிலகையில் வாழக்கூடிய சிங்கள மக்களுடைய எதிர்காலம் கூட எங்களைப் பொறுத்தளவில் இந்த அரசியல் அமைப்பு மாற்றியமைக்கப்படுவது ஊடாகத்தான் சிறப்பானதாக அமைய முடியும்.
அந்த அடிப்படையில் நாங்கள் கேட்கின்றோம் தயவு செய்து இந்த தேர்தலை புறக்கணியுங்கள் இந்த தேர்தலிலே பொது வேட்பாளர் என்கின்ற மாயைக்குள் சிக்கிக் கொள்ள வேண்டாம். அரியநேத்திரன் இலங்கையினுடைய ஒற்றை ஆட்சியை முற்று முழுதாக ஏற்றுக்கொண்ட ஒருவர் இதை பௌத்த நாடாக ஏற்றுக் கொண்ட ஒருவர் தமிழரசு கட்சியினுடைய பாராளுமன்ற உறுப்பினராக 10 தொடக்கம் 15 ஆம் ஆண்டு வரையில் இருந்தபோது சிங்கள பௌத்த நாடு என்பதனை ஏற்றுக்கொண்டு 13 ஆவது திருத்தச் சட்டத்தை தீர்வாக ஏற்றுக் கொள்வதற்கு அவருடைய தலைவர் சுமந்திரனும் அவருடைய தலைவர் சம்பந்தமும் எடுத்த அனைத்து முயற்சிகளிலும் அவர் நூற்றுக்கு நூறு வீதம் உடந்தையாக இருந்து செய்யப்பட்டவர்.
15 ஆம் ஆண்டிற்கு பிற்பாடு தமிழரசு கட்சியின் உடைய மத்திய குழு உறுப்பினராக இருந்து தமிழரசு கட்சி பழுத்த அரசு மரம் என்பதனை ஏற்றுக் கொண்டு வட கிழக்கு இணைப்பை கைவிட்டு சமஸ்டியை கைவிட்டு இயக்கிய ராஜ்யத்தை ஏற்றுக் கொண்டு அரசியல் யாப்பு வரைபை மைத்திரி ரணில் ஆட்சி காலத்தில் தயாரித்த போது சுமந்திரனுடைய அனைத்து முயற்சிகளுக்கும் தமிழரசு கட்சியினுடைய மத்திய உறுப்பினராக பூரணமாக துணை நின்றவர்.
அதேபோன்று விக்னேஸ்வரன், சித்தார்த்தன், செல்வமடைக்கலநாதன் போன்றவர்கள் 13 ஆம் திருத்தச் சட்டத்தை தீர்வாக 15 ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றவர்கள் எழுத்து மூலமாக கூட இந்திய பிரதமரிடம் 13 ஆவது திருத்தச் சட்டத்தை தீர்வாக வலியுறுத்தி இருப்பவர்கள்.
கடந்த ஜூன் மாதம் 20 ஆம் திகதி இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் கொழும்புக்கு வந்து கட்சிகளை சந்தித்தபோது நாங்கள் எட்டு பேர் சந்தித்திருந்தோம் அதில் நான் தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பிலும் விக்னேஸ்வரன் தமிழ் மக்கள் கூட்டணி சார்பிலும் டெலோ சார்பில் செல்வம் அடைக்கலநாதன் சார்பில் சித்தார்த்தன் தமிழரசு கட்சியை சார்பில் மாவை சேனாதிராஜா எதிர்கால தலைவர்களான யார் என தெரியாது சுமந்திரன் மற்றும் ஸ்ரீதரன் அவர்களும் வந்திருந்தனர் அத்தோடு சாணக்கியனும் வந்திருந்தார்.
இவர்கள் அனைவருமே 13 ஆவது திருத்தச் சட்டத்தையே வலியுறுத்தி இருந்தார்கள் ஆகவே பொது வேட்பாளரை நிறுத்தி சர்வதேச சமூகத்திற்கு தமிழர்களுடைய அபிலாசைகளை கூற போகின்றோம் என்றவர்கள் இலங்கை தீவை பொருத்தவரையில் நான்காவது வல்லரசானை இந்தியா அந்த வல்லரசின் உடைய தலைவரை தேடிச் சென்று நாங்கள் எங்களுடைய உதவி கூற வேண்டிய நேரத்தில் அவர் எங்களை தேடி வந்த போது இந்த ஏழு பேரும் கூட்டாக வலியுறுத்தியது 13ஆம் திருத்தச் சட்டத்தை தான் தீர்வாக வலியுறுத்தி இருந்தார்கள்.
இவர்கள் நிறுத்தி இருக்கின்ற பொது வேட்பாளர் என்பது தமிழ் மக்கள் ஒற்றை ஆட்சிக்குள் 13 ஆவது திருத்தச் சட்டத்தை ஏற்றுக் கொண்டு இது ஒரு பௌத்த சிங்கள நாடு என்பதனை ஏற்றுக் கொள்ள தயார் என்பதனால் தான் தங்களுடைய வேட்பாளர்களுக்கு வாக்களித்து இருக்கின்றார்கள் என்பதனை உலகிற்கு கூறுவதற்காக முயல்கின்றார்கள்.
இப்போது வாக்குகள் தேவைப்படுகின்ற பிரதான வேட்பாளர்களிடமிருந்து சலுகைகளை பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றது அவர்களுக்கு உங்களுக்கு தெரியும் இப்போது பிரதான வேட்பாளர்கள் தங்களுக்கு ஆதரவுகளை தேடி பல்வேறுப்பட்ட கட்சிகளில் இருக்கின்றவர்களை சலுகைகளை வழங்கி வளைத்து போடுகின்ற செயற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
காலம் காலமாக எச்சில் நிலைக்காக அலைந்து கொண்டிருக்கின்ற இந்த பொது வேட்பாளரை நிறுத்தி இருக்கின்ற தரப்புகள் தங்களுக்கு இந்தியாவினுடைய தேவைகளை நிறைவேற்றுவதற்காக இலங்கை அரசனுடைய தேவைகளை நிறைவேற்றுவதற்காக தமிழர்கள் இந்த தேர்தலை புறக்கணிப்பதன் மூலம் இலங்கையர் என்கின்ற அடையாளத்தை புறக்கணித்து அவர்கள் பேரம் பேசும் சக்தியாக உருவெடுப்பதை தடுப்பதற்காக தமிழ் மக்களை தோற்கடிப்பதற்காக இவர்கள் ஒரு பணியை பொறுப்பெடுத்து இருக்கிறார்கள்.
இவர்களுக்கு கிடைக்கக்கூடிய அற்ப சொற்ப சலுகைகளுக்காக இவர்கள் இந்த பேராசிரியர் கணேசலிங்கம் அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் அரசியல் ஆய்வாளர் ஜோதிலிங்கம் போன்றவர்களும் இந்த கட்சிகளும் கூட்டணித்து மிகப்பெரும் சதி செயல்களை செய்து கொண்டிருக்கின்றார்கள்.
இவர்களுடைய இந்த சதி செயல்களுக்குள் எமது மக்கள் அகப்பட்டு விடக்கூடாது ஒட்டுமொத்தமாக ஒற்றுமையாக இந்த தேர்தலை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என கேட்கின்றோம்.
கடந்த காலத்தில் இவர்களுக்கு ஒரு வாய்ப்பு இருந்ததை 2019 ஆம் ஆண்டு கோட்டபாய ராஜபக்சே போட்டியிட்டபோது அவர் பெரும்பான்மையால் வெற்றி பெறுவார் என்பது நன்றாக தெரிந்திருந்த நிலைமையிலும் கூட அன்றும் நாங்கள் இதை தேர்தலை பகீஸ்கரிக்க கூறிய போது இல்லை கோட்டாவை தோற்கடிப்பதற்கு சஜித்திற்கு வாக்களிக்க வேண்டும் என்று கூறி சொன்னார்கள்.
அவர்களுக்கு தெரியும் சஜித் பிரேமதாச ஒருபோதும் வெல்ல மாட்டார் என்பதும் கோட்டபாய ராஜபக்ஷ அருதி பெரும்பான்மையால் வெல்வார் என்பது தெரிந்திருந்தும் கூட அவர்கள் வாக்களிக்க கூடியது கோட்டாவை தோற்கடிப்பதற்காக அல்ல மாறாக தமிழர்கள் பரிஷ்கரிப்பு என்கின்ற ஆயுதத்தை கையில் எடுத்து ஒரு பேரம் பேசும் சக்தியாக உருவெடுத்து விடக் கூடாது.
தமிழர்களை தோற்கடிக்க வேண்டும் இந்தியாவினுடைய எடுபிடிகளாக தமிழர்கள் எப்பொழுதும் அவர்களுடைய காலிலே கிடக்க வேண்டும் என்பதற்காக இந்திய கூலிகளான தமிழரசு கட்சி சார்ந்த இந்த தேச துரோகிகள் அதை பகிஷ்கரிக்குமாறு அன்றே சஜித் பிரேமதாசாவிற்கு வாக்களிக்குமாறு கேட்டு இருந்தார்கள்.
நான் இவர்களிடம் கேட்கின்றேன் உண்மையில் இவர்கள் கோட்டபாய ராஜபக்ஷ வெல்வதை விரும்பவில்லை என்று சொன்னால் கோத்த பாய ராஜபக்ஷை உண்மையிலேயே ஒரு போர் குற்றவாளி என படுகொலையாளி என்று இவர்கள் அவரை வெல்வதை விரும்பவில்லை என்றால் அவர் வெற்றி பெற்ற பிற்பாடு ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையிலே உலக விசாரணை ஒருமுறை நிறைவேற்றப்படுவதற்கு ஆதரவாக எந்த அடிப்படையில் இந்த நாடுகளை வலியுறுத்தி இருந்தார்கள்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் உடைய அன்றைய காலகட்டத்தில் 2020 ஆம் ஆண்டு பாராளுமன்றம் கலைக்கப்படுவதற்கு முன்பதாக இவர்கள் பாராளுமன்றத்தில் 16 பேர் இருந்தார்கள் இவர்கள் அனைவரும் கோட்டபாய ராஜபக்ச பதவிக்கு வந்த பிற்பாடும் ஜெனிவாவை நோக்கி உள்ளக விசாரணைக்கு காலம் வழங்க வேண்டும் என கேட்டிருந்தார்கள்.
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணி மாத்திரம் தான் சர்வதேச குற்றவியல் விசாரணையை வலியுறுத்தி கொண்டிருக்கின்றோம் உலக விசாரணையை நிராகரிக்கின்றோம்.
இந்த அரியனேந்திரன் உட்பட சுமந்திரன் ஸ்ரீதரன் செல்வம் அடைக்கலநாதன் சித்தார்த்தன் விக்னேஸ்வரன் சகலருமே உள்ளக விசாரணையை வலியுறுத்தியவர்கள் கோட்டபாய ராஜபக்சவை பாதுகாத்தவர்கள் இவர்கள்தான் இன்று நாமல் ராஜபக்ஷ தமிழர்களுக்கு உரிமை கொடுக்க மாட்டேன் அதிகாரங்களை கொடுக்க மாட்டேன் வடகிழக்கை இணைக்க மாட்டேன் என்று சொல்லி கூறுவதற்கான துணிச்சல் வந்திருக்கின்றது.
என்றால் இந்த தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்த இந்த நயவஞ்சகர்கள் இந்த விக்னேஸ்வரனும் சேர்ந்து கடந்த காலத்தில் இந்த இன படுகொலையாளிகளுக்கு பாதுகாத்து விட்டதன் விளைவாகத்தான் அவர்கள் துணிச்சலாக எழுந்து நின்று இன்று நாமல் ராஜபக்சவை ஒரு வேட்பாளராக நிறுத்தி இருக்கின்றார்கள்.
நாமல் ராஜபக்சே வேட்புமணி தாக்கல் செய்யும் போது கோத்தபாய ராஜபக்ஷ, மஹிந்த ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ, சமல் ராஜபக்ஷ இவர்கள் அனைவரும் அவரோடு நிற்கின்றார்கள் என்று சொன்னால் இவர்களை இவ்வளவு சிதம்பரமாக செயல்படுவதற்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தவர்கள் யார்?
இந்த தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தான் ஜெனிவாவரை சென்று சர்வதேச விசாரணை வேண்டாம் உலக விசாரணை மீது நம்பிக்கை இருக்கின்றது என்று இவர்களை பாதுகாத்தவர்கள்.
ஆகவே இந்த போர் குற்றவாளிகள் வந்து விடுவார்கள் அவர்களுக்கு வாக்களிக்காவிட்டால் வந்து விடுவார்கள் இவருக்கு வாக்களித்து விட்டால் வந்து விடுவார்கள் என்று சொன்னது எல்லாம் தமிழர்களுக்காக அல்ல மாறாக தமிழ் மக்களை அச்சப்படுத்தி பதற்றப்படுத்தி தேர்தலில் வாக்களிக்க செய்ய வேண்டும் என்பதற்காக அந்த நோக்கத்திற்காகத்தான் அரியநேத்திரனும் இங்கு வந்திருக்கிறார்.
அவருக்கு கிடைக்கும் எலும்பு துண்டுக்கு வாலாட்டி கொண்டு இந்த பொது வேட்பாளர் என்று வந்திருக்கிறார் இவர்கள் தேசிய தலைவருக்கு செய்கின்ற துரோகம் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்து உரிமைக்காக உயிர் கொடுத்த ஐம்பதாயிரம் மாவீரர்களுக்கு செய்கின்ற துரோகம் இந்த விடுதலைப் போராட்டத்தை ஆதரித்து இந்த மண்ணில் வாழ்ந்து உயிர் கொடுத்த பேரினவாதத்தால் படுகொலை செய்யப்பட்ட கிட்டத்தட்ட 3 லட்சத்துக்கும் அதிகமான மக்களுக்கு செய்கின்ற துரோகம் இதனை மக்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.
இந்த மக்களுக்கு நேர்மையாக முதுகெலும்பை நிவர்த்தி கொண்டு பேரம் பேசுகின்ற துணிச்சலும் ஆற்றலும் உள்ள ஒரே ஒரு தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவரை நீங்கள் பின்பற்றுங்கள் அவருடைய வேண்டுகோளின் படி இந்த தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என தெரிவித்தார்.
-மட்டக்களப்பு நிருபர் கிருஷ்ணகுமார்