சர்வதேச நாணய நிதியத்துடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவது மிகவும் கடினமான செயல்மட்டுமன்றி அது வெற்றிகரமான செயல் அல்ல என்று வெளிநாட்டலுவல்கள் மற்றும் நீதி, சிறைச்சாலை அலுவல்கள், அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி வலியுறுத்தினார்.
சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டால் எதிர்வரும் டிசம்பரில் சர்வதேச நாணய நிதியம் வழங்கவிருக்கும் அடுத்த தவணை மற்றும் உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) வழங்கவுள்ள தவணைகளை இழக்க நேரிடும் என அமைச்சர் குறிப்பிட்டார்.
இதன்படி 2024 டிசம்பர் முதல் 2025 ஜனவரி வரை நாடு 1.2 பில்லியன் முதல் 1.3 பில்லியன் டொலர் வரை இந்நாடு இழக்கும் எனவும், அதன் காரணமாக நாடு மீண்டும் ஸ்திரமற்ற நிலைக்கு மாறுவதை யாராளும் தடுக்க முடியாது எனவும் அமைச்சர் அலி சப்ரி மேலும் சுட்டிக்காட்டினார்.
இன்று (28) ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே வெளிநாட்டலுவல்கள் மற்றும் நீதி, சிறைச்சாலை அலுவல்கள், அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி இதனைக் குறிப்பிட்டார்.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் அலி சப்ரி,
“2022 இல் இந்த நாடு இருந்த நிலைமையின் படி, வெளிநாட்டலுவல்கள் அமைச்சு ஒரு பாரிய பங்களிப்பை வழங்க வேண்டியிருந்தது. பாதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு உறவுகளை மீளக் கட்டியெழுப்புதல், சர்வதேச சமூகத்தின் நம்பிக்கையைப் பெற்று அதன் ஊடாக நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்குச் செயற்படுதல் போன்ற சவால்களை நாம் அதன்போது எதிர்கொண்டோம்.
இரண்டரை வருடங்களின் பின்னர் இந்த நாட்டை ஸ்திரப்படுத்த எம்மால் முடிந்துள்ளது. அந்த பயன்களை அடைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சிறந்த தலைமைத்துவத்தை வழங்கினார்.
சர்வதேச உறவுகள் மூலம் நாட்டின் கடனை மறுசீரமைக்க 17 நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி உடன்படிக்கையை எட்ட முடிந்திருப்பது நாம் பெற்ற பாரிய வெற்றி என்றே கூற வேண்டும். இன்று நாம் எமது வெளிநாட்டுக் கொள்கை, தேசிய தனித்துவம் மற்றும் இறையாண்மை ஆகியவற்றை எந்த விதத்திலும் விட்டுக்கொடுக்காமல் கடன் மறுசீரமைப்பு செயல்முறையை நிறைவு செய்துள்ளோம்.
இன்று, பொருளாதார நெருக்கடியில் இருந்து மிக விரைவாக மீண்டு வருவதற்கு, உலகிற்கே எடுத்துக்காட்டாக நாம் மாறியுள்ளோம். தற்போது, பாகிஸ்தான், மாலைத்தீவு மற்றும் பங்களாதேஷ் போன்ற நாடுகள் தங்கள் பொருளாதாரத்தை மேம்படுத்துவது தொடர்பாக எங்களிடம் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றன. இந்த நாட்டை ஸ்திரப்படுத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வழங்கிய தலைமைத்துவம் சர்வதேச ரீதியாக பாராட்டைப் பெற்றுள்ளது.
நமது நாட்டைப் போன்று பொருளாதார நெருக்கடியை சந்தித்த லெபனான், வெனிசுலா, ஆர்ஜென்டினா, சிம்பாப்வே, கிரீஸ் ஆகிய ஐந்து நாடுகளில் கிரீஸ் மாத்திரமே பொருளாதார நெருக்கடியில் இருந்து இதுவரை மீண்டுள்ளது. ஆனால் பொருளாதார நெருக்கடியில் இருந்து கிரீஸ் மீண்டு வர 12 ஆண்டுகள் சென்றது. அதன்படி குறுகிய காலத்தில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்ட ஒரே நாடு இலங்கை ஆகும்.
ஆனால் குறுகிய அரசியல் நோக்கங்களை இலக்காகக் கொண்டு சர்வதேச நாணய நிதியத்துடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவதாக பல்வேறு நபர்கள் மக்களைத் தவறாக வழிநடத்துகிறார்கள். சர்வதேச நாணய நிதியத்துடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவது மிகவும் கடினமானது. அந்த வெற்றி பெறாத செயல். இதனை முயற்சிக்க விரும்புவோருக்கு எனது வாழ்த்துகளை மாத்திரமே தெரிவிக்க முடியும்.
2022 மார்ச் மாதத்தில், நீடிக்கப்பட்ட நிதி வசதிக்கு விண்ணப்பிக்கும் நோக்கத்தை நாங்கள் உத்தியோகபூர்வமாக அறிவித்தோம். 2023 மார்ச் மாதம் முதல் தவணையைப் பெற்றோம். அதன்படி, கடன் நிலைபேற்றுத்தன்மை பகுப்பாய்வு (DSA) இணக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள எங்களுக்கு ஒரு வருட காலம் சென்றது.
கடன் நிலைபேற்றுத்தன்மையின் பகுப்பாய்வு ஐந்து அளவுகோள்களின் கீழ் செய்யப்படுகிறது. அதன்படி, மொத்த தேசிய உற்பத்தியின் தற்போது 133% சதவீதமாக உள்ள அரச கடன், 95% ஆக குறைக்கப்பட வேண்டும். இதற்கு மேலதிகமாக வெளிநாட்டுக் கடனைத் தீர்ப்பதற்கு மொத்த தேசிய உற்பத்தியில் தற்போது ஒதுக்கப்பட்டுள்ள 9.3 % சதவீதத்தை 4.5 % சதவீதமாகக் குறைக்க வேண்டும்.
மேலும், முதன்மை வரவுசெலவுத்திட்ட இருப்பில் 2.1% மேலதிகம் இருக்க வேண்டும். இதற்கு மேலதிகமாக, மொத்தத் தேசிய உற்பத்தியில் 15% வரி வருமானம் பெற வேண்டும். இந்த இலக்குகள் இப்போது சட்டத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றை எளிதில் மாற்ற முடியாது. மாற்ற முயன்றால் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அதற்குக் குறைந்தது, இன்னும் ஒரு வருடமாவது செல்லும்.
அவ்வாறு செய்தால், டிசம்பரில் கிடைக்கவுள்ள IMF அடுத்த தவணையான 400 மில்லியன் டொலர்களை நிறுத்தி வைக்க வாய்ப்புள்ளது. IMF தவணையை வழங்கவில்லை என்றால், உலக வங்கியும் 400 மில்லியன் டொலர்கள் தவணையைத் தக்க வைத்துக் கொள்ளும்.
இதன்விளைவாக, ஆசிய அபிவிருத்தி வங்கியும் (ADB) அதன் 500 மில்லியன் டொலர்கள் தவணையை வழங்காது. அதன்படி, டிசம்பர் மற்றும் ஜனவரி காலங்களில், சுமார் 1.2 பில்லியன் முதல் 1.3 பில்லியன் டொலர்கள் வரை நாம் இழக்க நேரிடும். அந்த நிதி இழப்பால், ரூபாவின் பெறுமதி சரிவு, பணவீக்கம் அதிகரிப்பு உட்பட பொருளாதார ரீதியில் எமது நாடு மீண்டும் ஸ்திரமற்ற நிலையை அடைவதைத் தவிர்க்க முடியாது.
இந்நாட்டின் பொருளாதார மீட்சியை ஒருங்கிணைப்பதற்கும் அதற்கு ஆதரவு வழங்குவதற்கும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. மேலும், பலதரப்பு ரீதியில் உலகளாவிய தெற்கிற்கான முன்னுரிமைகளை மேம்படுத்துவதற்கு அமைச்சு மட்டத்தில் பரந்த பங்களிப்பை வழங்கவும், பலதரப்பு மனித உரிமைகள் தொடர்பான சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கும் முடிந்துள்ளது.
இதன்போது, 2022-2024 காலகட்டத்தில், பெண்களுக்கு எதிரான பாகுபாடுகளை நீக்குவதற்கான ஐக்கிய நாடுகளின் குழு, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான ஐக்கிய நாடுகளின் குழு, 2023-2027 காலப்பகுதிக்கான யுனெஸ்கோ நிர்வாக சபை மற்றும் 2025-2027 காலப்பகுதிக்கான ஐக்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக கவுன்சில் ஆகிய ஐக்கிய நாடுகளின் நான்கு பொறிமுறைகளுக்கு இலங்கை அதிக வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டுள்ளதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.
நமது வெளிநாட்டுக் கொள்கை, அண்மையில் Foreignpolicy.com என்ற சஞ்சிகையில் வெளியான கட்டுரையில் பாராட்டப்பட்டுள்ளது. உலக வல்லரசுகளின் அதிகாரப் போட்டியில், சிறிய இறையாண்மை கொண்ட நாடுகள் பாதிக்கப்பட்டுள்ள போதிலும், இந்த நிலைமையை இலங்கை மிகச் சிறப்பாக முகாமைத்துவம் செய்து , அனைத்து அதிகாரம் மிக்க நாடுகளுடனும் மிகச் சிறப்பாகச் செயற்பட்டு வருவதாக அந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலை தானாக ஏற்பட்டதல்ல என்பதைக் கூற வேண்டும். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அறிவு, புரிதல், அனுபவம் மற்றும் தனிப்பட்ட சர்வதேச உறவுகள் இதற்கு உதவியாக அமைந்தன என்றே கூற வேண்டும். எந்தவொரு நாட்டின் அரச தலைவரையும் நேரடியாக தொடர்பு கொண்டு உரையாற்றக்கூடிய இந்நாட்டின் ஒரே தலைவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மாத்திரமே என்பதைக் கூற வேண்டும்.
அதேபோன்று, வெளிநாட்டுச் சேவையை சுதந்திரமாகப் பேணுமாறு ஜனாதிபதி விடுத்துள்ள அறிவுறுத்தல்கள் குறித்தும் இங்கு குறிப்பிட வேண்டும். இதன் மூலம் முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரின் காலத்தை விடவும் சுதந்திரமாகவும் அரசியல் தலையீடு இன்றியும் வெளிநாட்டு சேவையை நடத்த முடிந்துள்ளது” என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
Wednesday, August 28, 2024
மீண்டும் IMF உடன் பேச்சுவார்த்தை நடத்துவது வெற்றியளிக்காது – அலி சப்ரி!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »