Our Feeds


Wednesday, August 28, 2024

Sri Lanka

எம்முடன் வரிசையில் இருப்பதற்கு தயார் என்றால் வெளிநாடுகளில் இருந்து அநுரவுக்கு வாக்களிக்க வாருங்கள் - ராஜித கோரிக்கை !


வெளிநாடுகளில் இருந்து வந்து கோட்டாபய ராஜபக்ஷ்வுக்கு வாக்களித்து சென்றதால் நாங்கள் வரிசையில் இருந்து அதன் பிரதிபலனை  அனுபவித்தோம். அதேபோன்று அனுரகுமாரவுக்கு வாக்களிக்க வருவதாக இருந்தால், அவர்கள் மீண்டும் வெளிநாடுகளுக்கு திரும்பிச்செல்லாமல் எம்முடன் வரிசையில் இருக்க தயாராக வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் திங்கட்கிழமை (27)  இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் வரிசை வரிசையாக வந்து கோட்டாபய ராஜபக்ஷ்வுக்கு வாக்களித்துவிட்டு சென்றார்கள்.

எது இல்லாமல் போனாலும் பரவாயில்லை எமக்கு நாடு மாத்திரமே தேவை என தெரிவித்துக்கொண்டு வாக்களித்தார்கள். இறுதியில் கோட்டாபய ராஜபக்ஷ் வங்குராேத்தாக்கி எம்மை வீதிக்கிறக்கினார். வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் மீண்டும் அங்கு சென்றுவிட்டார்கள். நாங்களே அதன் துன்பத்தை அனுபவித்தோம்.

அதேபோன்று இந்த முறையும் எவ்வாறானாலும் பரவாயில்லை, நாட்டில் ஊழலை ஒழிக்க வேண்டும் என தெரிவித்துக்கொண்டு, அனுரவுக்கு வாக்களிக்க வெளிநாடுகளில் இருந்து வருவார்கள். அதனால் கடந்த முறை போன்று இந்த முறை வரவேண்டாம் என்ற அவர்களுக்கு தெரிவிக்கிறோம். கடந்த முறை கோட்டாயவுக்கு வாக்களிக்க அவர்களின் சொந்த செலவிலேயே வந்தார்கள்.

அதனால் வெளிநாடுகளில் இருந்து வரும் சகோதரர்கள் வாக்களித்துவிட்டு மீண்டும் வெளிநாடுகளுக்கு செல்லாமல் இங்கே தங்கி இருக்க வேண்டும். இங்கு தங்கி இருந்து அனுரவை வெற்றிபெறச்செய்து, ஏற்படப்போகும் பேரழிவுக்கும் முகம்கொடுக்க வேண்டும். எங்களுடன் இணைந்து வரிசையில் இருக்க தயாராக வாருங்கள் என்றே தெரிவிக்கிறேன்.

அவ்வாறு இல்லாவிட்டால் அவர்கள் இங்கு வராமல் அங்கே இருந்துகொள்ளுங்கள். நாங்கள் வைத்தியர்களாக இருந்தும் அவர்களைப்போன்று நாட்டைவிட்டு செல்லவில்லை. நாட்டில் ஏற்பட்ட அனைத்து விடயங்களுக்கும் நாங்கள் முகம்கொடுத்துக்கொண்டிருந்தோம். இது போன்ற மக்கள் நாட்டில் இருந்தால்போதும். பொய் பிரசாரங்களை மேற்கொண்டு மக்களின் மனங்களை மாற்றி, அனைத்தையும் செய்துவிட்டு, அவர்கள் வெளிநாடுகளுக்கு சென்றுவிடுவார்கள். நாங்கள்தான் அதன் பேரழிவை அனுபவிக்க வேண்டிவரும்.

அதனால் வெளிநாடுகளில் இருந்து அனுரவுக்கு வாக்களிக்க வருபவர்கள் வாக்களித்துவிட்டு, தொடர்ந்து நாட்டில் தங்குவதாக இருந்தால் வாருங்கள் இல்லாவிட்டால், அங்கே தங்கிக்கொள்ளுங்கள் நாங்கள் நாட்டை பார்த்துக்கொள்வோம். நாட்டு மக்கள் சோறு சாப்பிடுவதாக இருந்தால், நன்றி உணர்வு இருக்கும் அவர்கள் ரணில் விக்ரமசிங்கவுக்கு வாக்களிப்பார்கள். அவ்வாறு இல்லாமல் நாட்டைவிட கட்சியே உயர்ந்தது என நினைப்பவர்களே தங்களின் தலைவருக்கு வாக்களிப்பார்கள். அந்த நோய்க்கு மருந்து இல்லை.

எனக்கு அவ்வாறான நோய் இல்லை என்றபடியாலே நான் கட்சியை விட்டு, நாட்டை பாதுகாக்க இந்த பக்கம் வந்தேன். அவர்களுக்கு முடியாது என்று எனக்கு தெரியும். அந்த பக்கம் படித்தவர்கள் இருக்கின்றனர். அவர்களு்ககு நாட்டை கட்டியெழுப்ப முடியாது. புத்திசாலிகளுகே நாட்டை கட்டியெழுப்ப முடியும். ரணில் விக்ரமசிங்க சிறந்த புத்திசாலி என்பதுடன் அனுபவசாலி. அதனால் அவராலே நாட்டை கட்டியெழுப்ப முடியும் என்பதாலே நான் அவருக்கு ஒத்துழைப்பு வழங்க வந்தேன் என்றார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »