Our Feeds


Friday, August 9, 2024

Zameera

தேசிய அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு தற்காலிக அடையாள அட்டை - தேர்தல் ஆணைக்குழு


 ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்கு தேசிய அடையாள அட்டை அல்லது அதற்கு சமமான வேறு ஆவணங்கள் இல்லாவிட்டால், அவ்வாறானவர்களுக்கு தற்காலிக அடையாள அட்டையை விநியோகிக்க தேர்தல் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


எனவே, கிராம சேவை உத்தியோகத்தரிடம் இரு புகைப்படங்களுடன் தேவையான ஆவணங்களை சமர்ப்பிப்பதனூடாக தற்காலிக அடையாள அட்டையை பெற்றுக்கொள்ள முடியுமென்று தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


தேசிய அடையாள அட்டை இல்லாவிட்டால் வாகன சாரதி அனுமதிப் பத்திரம் அல்லது கடவுச்சீட்டு அல்லது ஆட்பதிவுத் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட ஆவணம் அல்லது ஓய்வுப்பெற்றோருக்கான ஆவணம் என்பவற்றை வாக்களிப்பு செயற்பாடுகளுக்காக பயன்படுத்த முடியும்.

இவற்றில் எதுவும் இல்லாவிட்டால் தேர்தல் ஆணைக்கழுவினால் தேர்தலுக்காக தற்காலிக அடையாள அட்டையொன்றை வெளியிடுவோம். எனவே, இந்த தற்காலிக அடையாள அட்டையை பெற்றுக்கொள்வதில் இந்தத் தரப்பினருக்கு எந்த தடையும் இல்லை.


பிரதேசத்துக்கு பொறுப்பான கிராம சேவை உத்தியோகத்தரை சந்தித்து இரு புகைப்படங்களுடன் தேவையான ஆவணங்களை சமர்ப்பித்தால் உடனடியாக அவர்களுக்கான தற்காலிக அடையாள அட்டையை வழங்க நடவடிக்கை எடுப்போம்.


மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் இது பொருந்தும். அவர்களுக்கும் தேசிய அடையாள அட்டை இல்லாவிட்டால், கிராம சேவை உத்தியோகத்தரிடம் தற்காலிக அடையாள அட்டையை பெற்றுக்கொள்ள முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »