சவுதி அரேபியாவின் இஸ்லாமிய விவகாரங்கள் அழைப்பு மற்றும் வழிகாட்டல் அமைச்சரும், போட்டியின் பொது மேற்பார்வையாளருமான அஷ்ஷெய்க் கலாநிதி அப்துல்லா பின் அப்துல் லத்தீப் ஆலுஷேக் இரண்டு புனித மஸ்ஜிதுகளின் பாதுகாவலர் மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் ஆலு சவூத்தின் முழுமையான ஆதரவிலும் கண்காணிப்பிலும் வருடா வருடம் நடத்தப்படும் 44வது சர்வதேச புனித அல்குர்ஆன் மனனப் போட்டிகள் வழமை போன்று இந்த வருடமும் நடத்துவதற்கான முழு ஏற்பாடுகளும் மேற்கொண்டுள்ளது.
எதிர்வரும் 08ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை நடைபெற உள்ள இப் போட்டியில் உலகின் பல பாகங்களில் இருந்தும் நூற்றுக்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
புனித குர்ஆன் மற்றும் அதன் மீதான தொடர்பை மென்மேலும் வலுப்படுத்தும் நோக்கில் அதிக அக்கறை செலுத்தி வரும் சவுதி அரேபியா இந்த போட்டியை உலகளாவிய ரீதியில் வாழுகின்ற முஸ்லிம்கள் அல்குர்ஆனுடனான தொடர்பை மென்மேலும் பேண வேண்டும் என்பதற்காகவும் அவர்களின் உள்ளங்களில் அல்குர்ஆனை மனனமிட்டு அதன் வழிகாட்டல்களின் அடிப்படையில் செயல்பட வேண்டும் என்பதற்காகவும் இவ்வாறான சர்வதேச போட்டிகளை நடத்தி வருகின்றது.
புனித அல்குர்ஆனுக்கு சவுதி அரேபிய அரசாங்கம் சேவை செய்வதிலும் அதை அச்சிட்டு உலகளாவிய நாடுகளுக்கு இலவசமாக பகிர்ந்தளிப்பதிலும் கவனம் செலுத்தும் அதே நேரத்தில் இஸ்லாமிய குழந்தைகள் அதை மனப்பாடம் செய்தல், அதன் விளக்கங்களை அறிந்து கொள்வது போன்ற மிக முக்கியமான என்னக் கருவை அடிப்படையாகக் கொண்டு வருடா வருடம் இவ்வாறான போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இஸ்லாமிய விவகாரங்கள் அழைப்பு மற்றும் வழிகாட்டல்கள் அமைச்சர் இந்த போட்டியை பற்றி கூறுகின்ற பொழுது, புனித அல்குர்ஆனுக்கு சேவை செய்வதிலும், அதை மனனம் செய்ய வேண்டும் என்பதில் இஸ்லாமியர்களை ஊக்குவிக்கும் மிகப்பெரிய ஒரு பொறுப்பை சவூதி அரேபிய அரசாங்கம் எடுத்துவருகின்றமை பாராட்டப்பட வேண்டிய அம்சமாகும். இந்தப் போட்டி சுமார் நான்கு தசாப்தங்களாக நடாத்தப்பட்டு வருகின்றமை போற்றப்பட வேண்டிய ஒரு விடயமாகும் என்றும் தெரிவித்தார்.
கலாநிதி அப்துல் லதீப் பின் அப்துல் அஸீஸ் ஆல் சுஊத் தொடர்ந்து கூறுகையில் இந்த சர்வதேச அல்குர்ஆன் மனனம் போட்டி சவுதி அரேபியாவின் நிர்வாக மன்னர் அப்துல் அஸீஸ் பின் அப்துல் ரஹ்மான் ஆல் சவுத்தின் பெயரைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, இதற்கான முழுமையான பரிசில்களுக்குமான தொகையாக 40,00000 சவுதி அரேபியா ரியால்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்தப் போட்டிகள் பின்வரும் மிக முக்கியமான ஐந்து பிரிவுகளில் நடத்தப்பட உள்ளன.
முதல் பிரிவு : அல்குர்ஆன் முழுவதையும் ஏழு கிராத் அடிப்படையில் அதன் விளக்கத்தோடு மனனமாக ஓதுதல்.
இரண்டாம் பிரிவு: அல்குர்ஆன் முழுவதையும் மனனமாக தஜ்வீத் முறைப்படி இராகத்தோடு ஓதி அதன் சொற்களஞ்சியங்களின் விளக்கத்தையும் உள்ளடக்கியிருத்தல்.
மூன்றாம் பிரிவு : புனித அல்குர்ஆன் முழுவதையும் மனனமாக தஜ்வீத் முறைப்படி இராகமாக ஓதுதல்.
நான்காம் பிரிவு : அல்குர்ஆனில் 15 ஜுஸ்உக்களை தஜ்வீத் முறையில் திறம்பட இராகமாக மனனமாக ஓதுதல்.
ஐந்தாம் பிரிவு : நல்ல செயற்திறனோடு தஜ்வீத் அடிப்படையில் ஐந்து ஜுஸ்உக்களை மனனமாக ஓதுதல்.
புனித அல்குர்ஆனை உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் மனனம் செய்ய வேண்டும் என்பதில் அவர்களை ஊக்குவிக்கும் மிகப்பெரிய ஒரு பொறுப்பை சவுதி அரேபியா அரசாங்கம் எடுத்த வருகின்றது பாராட்டப்பட வேண்டிய அம்சமாகும் என்றும் கலாநிதி அப்துல் லதீப் ஆலு ஷேக் தெரிவித்துள்ளார்கள்.
புனித மக்கமா நகரில் நடைபெறவிருக்கும் சர்வதேச அல்குர்ஆன் மனனப் போட்டியில் பங்கேற்பதற்காக இலங்கையிலிருந்து காத்தான்குடி ஜாமிஅதுல் பலாஹ் அரபுக் கல்லூரியின் மனனப் பிரிவில் சேர்ந்து ஹாபிழ் பட்டம் பெற்ற A.R.M. ஷிபாக் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.