Our Feeds


Thursday, August 8, 2024

Zameera

சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கையை இரத்து செய்தால் வரவு செலவு திட்டத்தைக் கூட முன்வைக்க முடியாமல் போகும் - பந்துல குணவர்தன


 சர்வதேச நாணய நிதியத்தின் உதவியினாலே நாடு தலைதூக்கி இருக்கிறது. இந்நிலையில் சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கையை இரத்து செய்தால் 2025 ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தைக் கூட முன்வைக்க முடியாது போகும் என போக்குவரத்து, ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன  பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (7) இடம்பெற்ற அரையாண்டின் அரசிரை நிலைப்பாட்டு அறிக்கை மீதான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சர்வதேச நாணய நிதியத்துடன் மேற்கொண்டுள்ள கடன் உடன்படிக்கை காரணமாக நாட்டின் பொருளாதாரத்தை முகாமைத்துவம் செய்ய முடிந்துள்ளது. அதன் பிரதிபலனாக இன்று நாட்டுக்கு தேவையான எரிபொருள், உரம் மருந்து உணவு ஆகியவை கையிருப்பில் உள்ளன.

ஹர்ஷ டி சில்வா எம்பி கூறுவது போல் ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கையை ரத்து செய்தால் அடுத்த வருடம் வரவு செலவு திட்டத்தைக் கூட முன் வைக்க முடியாது. அரசாங்க ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியம் உட்பட  நலன்புரி நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டு விடும். அது மட்டுமன்றி அந்த உடன்படிக்கையை ரத்து செய்ய நினைக்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கு அந்த அரசாங்கத்தை இரண்டு வாரங்களுக்கு கூட முன்னெடுத்துச் செல்ல முடியாமல் போகும்.

எனவே சர்வதேச நாணய நிதியத்தின்  உடன்பாட்டில் சிறிதளவு மாற்றங்களை ஏற்படுத்தினாலும் நாட்டை முன்னெடுத்து செல்ல முடியாத நிலையே உருவாகும் அதனால் நாட்டின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்திக்கு வாக்களிப்பதை தவிர்ந்துகொள்ளுமாறு நாட்டு மக்களை கேட்டுக்கொள்கிறேன் என்றார்.


(எம்.ஆர்.எம்.வசீம். இராஜதுரை ஹஷான்)

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »